புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
வடக்கு கிழக்கு வாழ் உடன்பிறப்புகளுக்கு தக்க நேரத்தில்ஆதரவு

வடக்கு கிழக்கு வாழ் உடன்பிறப்புகளுக்கு தக்க நேரத்தில்ஆதரவு

இ.தொ.கா பொதுச்

செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுடன்

விசேட சந்திப்பு

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெறின்”

அணு விஞ்ஞானி கலாநிதி அப்துல் கலாமின் வாழ்க்கையை மிளிரச் செய்தது இந்தக் குறள் தான் என்பார்.

“எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார்!

என்னதான் இடையூறுகள் சவால்கள் வரினும் தாம் கொண்ட இலட்சிய கனவில் பிசகாமல் இருப்பவர்கள் தான் வெற்றிக் கனியைத் தட்டிக்கொள்கிறார்கள். அந்த வகையில், உறுதியான மனோ வலிமையும், துணிச்சல் மிக்க செயல்பாடுகளையும் பிரமிக்கத்தக்க வகையில் முன்னெடுப்பவர்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் - அமைச்சர் எஸ். ஆர்ம். ஆறுமுகன் தொண்டமான்

வெட்டொன்று துண்டு இரண்டென எதனையும் நறுக்குத் தெறித்தாற்போல் வெளிப்படையாகச் சொல்பவர். அமரர் செளமியமூர்த்தி தொண்டமானால் புடம்போடப்பட்டு; அந்தக் சாணக்கியத்தால் மிளிர்ந்துகொண்டிருப்பவர்! ஊடகங்களுக்கு நேர்காணலுக்கென்று நேரம் ஒதுக்கிக்கொள்வதென்றால் எந்தளவு சிரமமானது என்பதை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்!

புதன்கிழமைகளில் அமைச்சில் பொதுமக்கள் தினம். மலையகம், வடக்கு, கிழக்கு எனத் தூரப்பிதேசங்களிலிருந்து வரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அமைச்சு, அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் நிர்வாக ரீதியிலான விடயங்களைக் கவனிக்க வேண்டும். மாகாண சபை தேர்தல் களப் பணிகள் என அத்துணை வேலைப் பளுவுக்கு மத்தியிலும் நமக்காக நேரம் ஒதுக்குகிறார், மனம் கவர புன்னகையும் பூரிப்புமாய் உரையாடுகிறார்.

“காங்கிரஸ் எப்பொழுதும் பெருந்தன்மையுடன்தான் நடக்கும். வருவோரை வாழ வைக்கும். செல்வோரை வழியனுப்பும்! உண்மையான நோக்கத்துடன் எவர் வந்தாலும் பரிசீலிக்கும்” என்று உள்ளம் திறக்கிறார் அமைச்சர்.

பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் மாகாண சபை தேர்தல் தொடர்பாகப் பேச்சை ஆரம்பிக்க,

“எங்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று அரசாங்கத்துடன் இணைந்து கேட்பது, மற்றொன்று தனியாகக் கேட்பது! ஆனால், தனியாகக் கேட்கவேண்டும் என்பதற்குக் கூடுதலான ஆதரவு இருக்கிறது. பேச்சு நடக்கிறது பார்ப்போம்!”

அமைச்சர் சொன்னதைப்போலவே வெள்ளிக்கிழமை ஓர் அறிவிப்பு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் ஓரணியில் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் களமிறங்க உடன்பட்டுவிட்டன!

சப்ரகமுவ மாகாண சபைக்கு மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது இங்குத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்தபோதிலும், தமிழ் பிரதிநிதி ஒருவரைத் தெரிவுசெய்துகொள்வதில் காங்கிரஸின் அக்கறை போதுமானதாக இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகள் மீது செலுத்தப்படும் கரிசனை இந்தப் பகுதிகள் மீது இல்லையே என்ற ஓர் ஆதங்கம் இருக்கிறதே?

“கவனம் செலுத்தவில்லை என்று சொன்னால் ... பிரதிநிதியை உண்டாக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? நாங்கள் சந்தர்ப்பத்தைக் கொடுக்கலாம். போட்டி போடுபவர்கள் போட்டியிடலாம். அங்குள்ள மக்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரதிநிதியைத் தெரிவுசெய்ய வேண்டும். கடந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக இறங்கி வேலை செய்தது.

ஆனால் உள்ளுரில் கிராமத்தில் உள்ள சிலருடன் இருந்துகொண்டால் தமக்கு வசதி என்று அங்குள்ள மக்கள் நினைக்கிறார்கள்.

அப்படி இருந்தால் தேசிய ரீதியில் கிடைக்கும் அபிவிருத்திகள் எல்லாம் அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? பிரதிநிதித்துவம் வந்தால் அவர்கள் ஊடாக அந்த அபிவிருத்தி அவர்களைச் சென்றடையும்.

அவர்கள்தான் பிரநிதித்துவத்தை உருவாக்க வேண்டும். யாரும் கொண்டுபோய் கொடுக்க முடியாது இல்லையா?

“இல்லை. அந்தப் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்குக் காங்கிரஸ் ஒரு பக்கபலமாய் செயற்படுவதில்லை என்கிறார்களே?”

“என்ன பக்க பலம்?

“அதாவது, ஏனைய பகுதிகள் மீது முழு மூச்சாகக் கவனம் செலுத்துவதைப்போல், இந்தப் பகுதிகள் தொடர்பில் அக்கறை இல்லை என்பது உண்மையா?”

“பிரதிநிதி இருந்தால்தானே செயற்பட முடியும். உதாரணத்திற்கு மாவட்ட ரீதியாக கோட்டா முறையில் வழங்கப்படும் சில விடயங்களை, பிரதிநிதி ஒருவர் இருந்தால்தானே வழங்க முடியும். இல்லாவிட்டால் எப்படி செய்ய முடியும்”

“மலையகத்தில் ஐயா தொண்டமானுக்குப் பின்னர் துணிச்சல்மிக்க ஒரு செயல்வீரர் நீங்கள்தான் என்று பாராட்டுகிறார்கள். ஹட்டனில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையின்போதும், தாய்ப்பால் எடுத்துவைத்துவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று நுவரெலியாவில் பெண்களை தோட்ட நிர்வாகம் வதைத்தபோதும் அதிரடியாக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைப்பற்றி புகழ்ந்து பேசுகின்றார்கள். அதேநேரம் சில இடங்களில் ஏற்படும்பிரச்சினை நீண்டநாள் இழுபறிபட்டு செல்கிறது. இது ஏன்? உங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படாத காரணமா?”

“எங்கெல்லாம் காங்கிரஸை நம்பி மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பிரச்சினை தீர்க்கப்படும், காங்கிரஸை நம்பாவிட்டால் அது இழுபறி பட்டுக்கொண்டுதான் இருக்கும். காங்கிரஸ் உள்ள எங்காவது ஓர் இடத்தில் பிரச்சினை இழுபறிபட்டதாக சொல்லுங்கள், எங்குமே கிடையாது. அந்தந்தச் சூழ்நிலைக்குப்பொருத்தமான நடிவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினைகளை காங்கிரஸ் வெற்றிகரமாக தீர்த்துள்ளது. காங்கிரஸை நம்பியிருந்ததால் உங்களுக்கு வேண்டியது உங்கள் வாசல் தேடி வரும்!

“ஐயா விற்கு பின்னர் இந்திய வம்சாவளி மக்கள் உங்களை அந்த இடத்தில் வைத்துப்பார்க்கிறார்கள். அதே நேரம் கடந்த தேர்தலுக்குபின்னர் சில புதுமுகங்களும் வந்துள்ளன. இவர்களின் வருகையால் காங்கிரஸின் வளர்ச்சியில் அல்லது அதன் பலத்தில் ஏதாவது தாக்கம் ஏற்பட்டிருப்பதாக உணர்கிaர்களா?”

“காங்கிரஸ் 70 வருடகாலமாக இருக்கின்றது. எத்தனையோ பேர் காங்கிரஸை வீழ்த்துவதற்கு என்னென்னவோ செய்தார்கள். எவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நம்பியுள்ள மக்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை”

“ஐயா இருக்கும் போது இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என்ற ஓர் பொது அமைப்பை உருவாக்கி வெற்றியும் கண்டார். தற்போது தேர்தல்காலங்களில் மட்டும் கூட்டணிபற்றி பேசப்படுகின்றது. ஆனால், வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பைபோல், மலையகத்தில் ஒரு கூட்டமைப்பு என்று முன்மொழியப்பட்டால் அதனை ஏற்பீர்களா?”

“காங்கிரஸை பொறுத்தவரை, அஃது என்றைக்கும் வெளிப்படையாகவே செயற்படுகின்றது யாரையும் ஒதுக்கி வைத்து செயற்படும் நோக்கம் எம்மிடம் கிடையாது. ஆனால், யாராவது உண்மையான நோக்கத்துடன் வருவார்களே ஆனால், நிச்சயமாக நாங்கள் பரீசீலிக்கத் தயார்!

யாரையும் அரவணைக்கத் தயார் என்கிaர்களா?”

“அரவணைக்க அல்ல, பரிசீலிக்கத் தயார்! அரவணைப்பதற்கும் பரிசீலிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஏனென்றால், நாங்கள் அரவணைத்ததன் பின்னர் அவன் முதுகில் குத்திவிட்டால் என்ன செய்வது! ஆகவே, பரசீலிக்கத் தயார் என்றுதான் சொல்வேன்!”

“ஐயா இருக்கும்போது வடக்கு கிழக்குப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பினார். ஐந்து வருடங்கள் அவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள் என்று தீர்க்கதரிசனமாகத் துணிந்து கூறினார். ஆனால் அவருக்குப் பின்னர், அந்தப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் பேசுவது குறைவு என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு ஏதாவது விசேட காரணம் உண்டா?”

“விசேட காரணம் எதுவும் கிடையாது. தற்போது வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்தான் செயல்பட்டு வருகிறார்கள். எங்களைப்பொறுத்த வரை வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் எங்கள் உடன்பிறப்புகள்தான். ஆனால், இதில் ஆளாளுக்கு ஒவ்வொரு கட்சியும் தத்தம் கருத்தைச் சொல்வதால்தான் பிரச்சினை இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்களும் இதனைக் குழுப்புவதற்கு விரும்பவில்லை. ஆனால், எந்த நேரத்தில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்க வேண்டுமோ, அந்த சரியான நேரத்தில் எங்கள் ஆதரவையும் அழுத்தத்தையும் அரசாங்கத்திற்கு கொடுப்போம்!”

“இந்த பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய மத்திய அரசாங்கத்துடனும் தமிழ் நாட்டுடனும் நெருக்கமான உறவை நீங்கள் வைத்திருக்கிaர்கள். தீர்வு விடயமாக இந்தியா உங்களின் கருத்தை அறிய எப்போதாவது முயற்சித்திருக்கிறதா?”

“நிச்சயமாக நாங்கள் அடிக்கடி பேசியிருக்கிறோம், பேசிக்கொண்டும் இருக்கிறோம். வடக்கு கிழக்கை பற்றி மட்டுமல்ல மலையகத்தைப் பற்றியும் பேசியிருக்கிறோம். இன்றைய சூழ்நிலையைப்பற்றியும் பேசியிருக்கிறோம். அவ்வாறு கருத்துபரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கிறோம். அவர்கள் இங்கு வந்தபோது எங்களுடனும் பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அப்போதும் எங்கள் கருத்துகளை சொல்லியிருக்கிறோம்.”

“வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மலையக மக்கள், இறுதி யுத்தத்திற்கு பின்னர் மீள்குடியேற்றத்தின் போது சொந்த காணிகளை பெரும் விடயத்தில் கூட உறுதிகள் இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். வவுனியா பூந்தோட்ட நலன்புரி முகாம் மக்கள் பிரச்சினை உங்களுக்கு தெரியும். நீங்கள் காங்கிரஸின் அலுவலகம் ஒன்றை வவுனியாவில் திறந்துவைத்தீர்களே. அங்குள்ள மக்க ளுக்கான காங்கிரஸின் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?”

“எங்கள் அலுவலகம் ஊடாக சேவைகளை ஆற்றி வருகின்றோம். இப்பொழுது காங்கிரஸ் நடமாடும் சேவைகளை நடத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் வவுனியாவில் நடத்துகின்றோம். அந்த நேரம் அங்குள்ள மக்களின் பிரச்சினையை தீர்த்துவைப்போம்”

“இப்படி பணியாற்றுகின்றபோது வடக்கு கிழக்கை தளமாக கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் முகம் சுழித்த சந்தர்ப்பங்கள் உண்டா?”

“என்றைக்குமே அவ்வாறான ஒரு நிலைக்கு நாங்கள் முகம் கொடுத்தது கிடையாது. எல்லோருமே தமிழர்கள்தான். எல்லோரும் சிறுபான்மையினர்கள் தான். தமிழாக இருக்கட்டும், முஸ்லிமாக இருக்கட்டும் எல்லோரும் ஒன்றாக கைகோர்த்து தான் செயற்படுகின்றோம்”

“நடந்து முடிந்த குடிசன மதிப்பீட்டு அறிக்கையின் படி, நுவரெலியா மாவட்டத்தில் தான் குடிசன பரம்பல் வளர்ச்சி வீதம் மிகக் குறைவானதாக உள்ளது. அங்கு பலவந்தமாக குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. சில வேளை இவ்வாறான காரணங்களால் வளர்ச்சி வீதம் குறைவடைந்திருக்கலாமா?”

“எனக்கு இன்னமும் விபரங்கள் கிடைக்கவில்லை. அதேநேரம் குடிசன மதிப்பீட்டை முழுமையாக மேற்கொண்டார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், சிலர் இந்திய வம்சாவளி என்று சொல்லாமல், இலங்கையர் என்று கூறியிருக்கிறார்கள். இப்படியான சிக்கல்களும் உண்டு. ஆகவே அதனை ஆராய்ந்துதான் சொல்ல வேண்டும்.”

“கொழும்பு முதலான பகுதிகளில் உள்ள இந்திய வம்சாவளியினருள் பெரும்பாலானோர் இலங்கை தமிழர் என்றுதான் பதிகின்றார்கள். இந்த விடயத்தில் தாங்கள் வழங்கும் அறிவுரை என்ன?”

“இந்திய வம்சாவளி என பதிந்தால், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப சில விடயங்களில் தலையிடுவதற்கு எமக்கு வசதியாக இருக்கும். உதாரணத்திற்கு இன விகிதாசாரப் படி தொழில்வாய்ப்பு முதலான சலுகைகளை பெற்றுக்கொடுக்க முடியும்”

“வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் அமைப்பு (கோபியோ) அண்மையில் நடத்திய ஒரு மாநாட்டில், இலங்கையில் இந்திய மாதிரி கிராமம் அமைப்பதைப் பற்றி பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. அதன் போது, காங்கிரஸின் பங்களிப்பு இன்றி செயற்படுத்த முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி காங்கிரஸின் ஒத்துழைப்பு கோரப்பட்டால் பிரதிபலிப்பு எப்படி இருக்கும்?”

இந்திய மாதிரியில் இலங்கையில் கிராமம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்போது அல்ல, நீண்ட காலத்தற்கு முன்னரேயே முன்மொழியப்பட்ட விடயம் இப்போது திரு.குமார் நடேசனால் மீண்டும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. காணியைக்கூடப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோம், ஆனால் அது பின்னர் விடுபட்டுப்போய்விட்டது. மீண்டும் தொடங்கப்படுமானால் நல்ல விடயம்தான்."

"நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவீர்களா?"

"நிச்சயமாக"

"மலையக அபிவிருத்தி தொடர்பாக பத்தாண்டு திட்டமொன்றைத் தயாரித்திருந்தீர்கள். அஃது எந்தளவில் உள்ளது?"

"சிவலிங்கம் அவர்களது அமைச்சின் மூலமாக யூஎன்டிபியின் அனுசரணையில் பத்தாண்டு திட்டமொன்றைத் தயாரித்திருந்தோம். அது அமைச்சரவையில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. இப்போது அந்தத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்."

"மலையகத்தைச் சேர்ந்த கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்கிறார்களே?"

"எங்களின் உறவுகள் சிறையில் இருக்கிறார்கள் என்று எங்களிடம் வந்து யார் யார் சொன்னார்களோ, யார் யாரின் பெயர் விபரங்கள் தரப்பட்டனவோ அத்தனை பேரையும் விடுவித்துக்கொடுத்திருக்கிறோம். அதற்குப் பிறகு எனக்கு எந்த விபரமும் கிடைக்கவில்லை. வந்திருக்கும் ஓரிரண்டு முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

யாராவது வந்து சொன்னால்தானே நடவடிக்கை எடுக்க முடியும். சம்பந்தப்பட்டவர்கள், சொந்த பந்தங்கள் வந்து சொன்னால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்."

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.