புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

நீ வருவாய் என

நீ வருவாய் என

- என் கே. வேணி -

அன்பு அனைத்தையும்
தேக்கி வைத்து
ஆசைகளை எல்லாம்
அடக்கி வைத்து
காத்திருப்பேன்
நீ வருவாய் என

கடல் அலை வந்து
கலைகளை நனைக்க
மணல் வெளியில்
மல்லாந்து படுத்திருந்து
காத்திருப்பேன்
நீ வருவாய் என....

மஞ்சள் மாலை பொழுதில்
மனம் முழுக்க
உன்னை நினைத்து
மகிழ்வுடன் காத்திருப்பேன்
நீ வருவாய் என....

பெரு மழையிலும்
பேருந்து நிலையத்தில்
குடை பிடிக்காமல்
மழையில் நனைந்துகொண்டே
காத்திருப்பேன்
நீ வருவாய் என.....

நூலகத்தில் நூல்
வாசிப்பதைப் போல்
வழிமேல் விழிவைத்து
வாசலிலே
காத்திருப்பேன்
நீ வருவாய் என.....

உண்ணாமல் உறங்காமல்
உன் வரவை
எதிர்ப்பார்த்து
உன் நினைவாலே
காத்திருப்பேன்
நீ வருவாய் என.....

விழிகள் இரண்டும்
மூடாமல் விடிய விடிய
விழித்திருந்து
காத்திருப்பேன்
நீ வருவாய் என.....

காதல் சொட்டும்
இனிய கவிதைகள்
எழுதி எழுதி
காலமெல்லாம்
உனக்காகவே
காதலுடன் காத்திருப்பேன்
நீ வருவாய் என.....


ஏன் இப்படி?

- வி.எம்.எலிசபத் -

என்னிதயத் தீவில் எந்நேரமும்
எண்ணற்ற நினைவலைகளாய் நீ
எனக்குள் பேசிக் கொண்டிருக்கின்றாயே.....?!

எத்தனை பேர்
எனைச் சுற்றி நின்றாலும்
எங்குமே நீயாக நிழலிடுகின்றாயே.....?!

பசித் தூக்கத்தை பறிகொடுத்தபோதும் - என்
நினைவுப் பத்திரம் முழுதுமாய் - நிரம்பி வழிகின்றாயே.....?!

மூடி வைத்த பாடப்புத்தகத்தின்
முன்பக்க மேலுறையில் - உன்
முகம் பார்க்க வைக்கின்றாயே....?!

குளிர் காலத்து தேநீராய்
வெயில் நேரத்து குளிர்களியாய்
மறந்திடாத என் நாட்குறிப்பாய் - மாற்றமின்றி தொடர்கின்றாயே....?!

உனை மறக்க நான் முயன்ற போதெல்லாம்
எனை நானே மறந்திட செய்திட்டாயே....?!

எவர் கண்ணுக்கும் புலம்பாத - காற்றின் திசையில்
என்னுயிரை உனில் கண்டெடுக்க செய்தாயே....?!

காரணம் யாதென்றால்.....
‘காதல்’ என்று தோழமை சொல்கிறது!
நீ... என்ன சொல்லப் போகிறாய்?
காதலா.... இது..... காதலா?


 - கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி -

அடுத்த மாதம் ஊருக்கு
அம்மா நானும் வரப்போறேன்
விடுப்பில் நானோ வருகின்ற
விபரஞ் சொல்லிப் போடாதே

தொலைதூ ரத்தில் இருக்கின்றேன்
தொழிலுக் காக வந்துள்ளேன்
தொலைபே சிக்கு ஊடாகத்
தொல்லை பெருகிப் போகுமம்மா!

வரும்போ தெனக்கு ‘லப்டெப்பு’
வாங்கி வாடா எனவழைப்பு
சிரமம் பாரா தேஎனக்குச்
செண்டு போத்தல் கொண்டுவா!

இவர்கள் எல்லாம் நானூரில்
இருந்த போது “என்னென்றும்”
தவறிக் கூடக் கேளாதார்
தற்போ தெனக்குக் “கோல்” எடுக்கத்

தவற மாட்டார்! தத்தமது
விருப்பைச் சொல்லிச் சொல்லியேதான்
கவர முனைவார் பட்டிலைக்
காத லுடனே முன்வைப்பார்

வெளிநா டென்றால் பணமென்ன
விளையு தாமோ? எனை ஒரே
விழியாற் றானும் பாராதோர்
விரிக்கும் பட்டியல் நீளுமம்மா!

அம்மா அதனாற் தான் சொன்னேன்
அங்கே நான்வரும் நாள்பற்றிச்
சும்மா கூடச் சொல்லாதே
சொந்தம் எல்லாம் பார்த்தாயே!

எனக்கு உனக்கு எனக்’கோல்கள்’
எடுத்த வண்ணந்த தானிருப்பார்
கணக்குப் பார்த்தால் ஏற்றிவரக்
கப்பல் தனியே வேண்டுமம்மா


தொடரும் உறவுகள்


- எம்.எஸ்.றஸ்மியா -

உயரோட்டம் இல்லாத
எழுத்துகளுடன் போராடிய
இப்பேனா எம் உறவிற்காய்
ஒரு துளி கண்ணீர் சிந்தி நிற்கிறது

புரிந்துணர்வின் பூரிப்பில்
பூத்திட்ட எம் அன்பு மலர்
நித்தம் மணம் பரப்பி
வாழ்க்கை தோட்டத்தில் இணைந்திட
உறவுகளை வளர்க்கிறேன்

அன்பினால் அரவணைத்து
புரிந்துணர்வினால் வாழ்வமைத்து
அர்த்தம் உள்ள
ராகம் பாட தினம் - உன்
உறவை நாட தொடரும்
கானமாய் தொடரட்டும்
நம் உறவுகள்


பழையபடி மரங்கள் பூக்கும்

- ரோஷான் ஏ.ஜிப்ரி -

பெரும் நெருப்பின் சுவாலை தணிந்து
பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து
புற்கள் வரவேற்கும் கால்களை

கன்றிய இதயங்கள் இளகி
முகம் பார்க்கும் மலர்களில்
கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும்
புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி
உயிர்கள் களித்து விளையாடும்

நிறைந்த குளங்களிலிருந்து
குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறு தடவும்
நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி
நினைவில் நின்று சிரிப்பாள்
மனைவியின் உருவில் பேரப்பிள்ளைகளுடன்
வடக்கின் குட்டானை கிழக்கின் நாருசிக்க
ஒடியல் காயும் வாசலெங்கும்

பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் காய்க்கும்
பரீட்சய முகங்களுடன் புதிது, புதிதாய்
பிரிவின் இளப்பில் உறைந்து உட்கார்ந்த மனங்கள்
மீண்டெளும் விட்ட இடத்திலிருந்து தொடங்க

போகும் வழியில்
தலை தெறித்து, உயிர் மரித்து முண்டமாய் நிற்கும்
பனையின் அடியில்
புனை முருங்கை விதைகளை புதைத்து விடுவோம்
பழையபடி மரங்கள் பூக்க


பிரியாத பிரிவு

- கவாஸ் சப்னாஸ் -

சந்தித்து விட்டுப் பிரிகிற நேரம்
திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதென்றாய்.....!
அன்று முதல் திரும்பிப் பார்ப்பதில்லையென
சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தோம்....!
மறையும் கடைசி நொடியில்
நீ பார்க்க மாட்டாயென நானும்....!
நான் பார்க்க மாட்டேனெனநீயும்....!
ஒன்றாய் திரும்பிப் பார்க்க
செய்த சத்தியம் எங்கே போனதென
சத்தியமாய் தெரியவில்லை.....!


சாபக்கேடு...

- செயின் தம்பி ஸியாம் -

நீ முட்டையிட்ட
குஞ்சுகளுக்கு
கால்களைப் போன்று
கதைகள்தான்
கருக்கட்டப்பட்டிருக்கின்றன

கூந்தல் நெடுத்ததுபோல்
கதைகள்
ஒவ்வொன்றாகப் பிறந்து
சிக்காகிக் கிடக்கின்றன
யாராலும் - வாரி
பின்னிக்கட்ட முடியாமலே

வாங்கியதை என்றும்
திருப்பிக்கொடுக்க முடியாத
கடன்காரியாய் - நீ
ஒரு பட்டைக் கூதலிலே
குளிர்காயப்பட்டிருக்கிறாய்

உன்னைப்போல்
அக்குஞ்சும்
கடன்பட்டுத் திரியட்டும்
உன்னை - நீ
அடையாளப்படுத்தாதவரை.....


சொர்க்கத்தைக் காட்டிய சுவை

- நீ.பி.அருளானந்தம் -

எல்லாவற்றிலும் சிறந்தது
இனிப்புச் சுவைதான்!
பாலை வனப் பேரீச்சம்
பழத்திலிருந்து
ஊற்றானது போலும்
அந்தச் சுவை!

அந்த முதல் பழமாம்
ஒவ்வொன்றிலும்
கிடைக்கும்
மோக சுவர்க்கம்
நெடுகவுமே - என்
நினைவில் உட்புகுந்து
கடித்து
அதையே மீண்டும் ருசிகாண
நாவும் ஜபித்தபடி இருக்கிறது

திரும்பவும் வந்து
நினைவில் பட்டு
விளிம்பில் பற்களைக் காட்டி
பிறப்பிற்குக் குரல் கொடுக்க
புழுவாய் நெளிகிறது
அதன் சத்து
பெருமூச்சுகளாய்
வெளியிலும்
வாசனையுடன் செல்ல
ஒரு வழியையும் அது
தேடுகிறது

உடலெங்கும் - தன்
பசியை நிலைத்து வைத்து
உடல் சில்லிட எழுந்து
பசிக்குது என்று - திரும்பவும்
ரகசிய மூச்சும் விடுகிறது

மிட்டாய்களின்
இனிப்பு ருசியிலே
பலவகைகள்!
எல்லா இனிப்பும் தின்று
இரத்தத்தின் வழிப்போகமாகிவிட்டது
அந்த வேகத்தின் மூலம்
கொடிய இனிப்பு நஞ்சு


சிறப்பு!

- அப்துல் ஹை புரட்சிக்கமால் -

உற்றார் சுற்றத்தார்
உறவுகளின் சுகம்பேணி
பெற்றோரை மதித்தொழுதல்
பிள்ளைகளின் சிறப்பாகும்!

சாத்வீக நடைமுறைகள்
சரிந்துபட்ட சமூகத்தில்
ஆத்மீக வழிதொடரல்
அனைவருக்கும் சிறப்பாகும்!

மட்ட ரகக் கலாசார
மாற்றத்தால் மாசுபட்டு
கெட்டழியும் தலைமுறையின்
கேடொழித்தல் சிறப்பாகும்!

வருமானச் சிறுதொகையில்
ஒரு தொகையைச் சேமித்தல்
வளமான எதிர்கால
வாழ்வுக்குச் சிறப்பாகும்!

அநீதியினை விளைவாக்கும்
அறிவிழந்தோர் மடைமைக்கு
நீதியினைக் கற்பித்தல்
நியாயத்தின் சிறப்பாகும்!

சமூகத்தின் நலன் பேணி
சாதனைகள் படைப்பதற்கு
அமைதிக்குப் பங்கமுறா
அரும்பணிகள் சிறப்பாகும்!

மனக்கதவின் தாழ் திறந்து
பிணக்குகளை உடன் மறந்து
தனக்கென்று(ம்) நோக்காது
தரும் சேவை சிறப்பாகும்!

உழைப்பாள(ர்) வர்க்கத்தின்
உயர்வுக்கு உரமூட்டி
தழைத்தோங்கும் மேநிலையை
தகை செய்தல் சிறப்பாகும்!

செப்பனிடும் நோக்கதனில்
செயலமைப்பின் மறுஆய்வு..
செயன்முறையின் அனுபவத்தை
சீரமைக்கும் சிறப்பாகும்!



சுமையாக

- பெ. நந்தகுமார் -

என் உயிரின் உறவே!
என் இரவின் நிலவே!
கொடிய பிரிவின் வழியில்
தனியே நடக்கிறேன்
கூடவே உன் நினைவுகளும்
என் துணையாக அல்ல
பெரும் சுமையாக


செய்யாதே!

- கலீல் ஹபீபா -

நாயைக் கல்லால் அடிக்காதே!
நகத்தைப் பல்லால் கடிக்காதே!
நோயை உடலில் சேர்க்காதே!
நொந்தவர்க்குதவிட தயங்காதே!
தாயை என்றும் மறவாதே!
தந்தை சொல்லை மீறாதே!
வாயை சும்மா மெல்லாதே!
வம்பை விலைக்கு வாங்காதே!
செய்யும் நன்றியை மறவாதே!
சேட்டைகள் வீணாய்ச் செய்யாதே!
மெய்யைப் பொய்யால் மறைக்காதே!
மேலோர் வார்த்தையைத் தட்டாதே!


புதிய ஏவுகணை!

- கல்லொளுவை பாரிஸ் -

கார்மேகம் என்றேன்
நீ கவிதையாய்
நடந்த போது!

நட்சத்திரம் என்றேன்
நீ நளினமாய்!
நகைத்தபோது!

வானவில் என்றேன்
நீ கோலமயிலாய்
கோலம்போட
வளைந்த போது!

சூரியன் என்றேன்
நீ சூட்சுமமாய்
சுட்டபோது!

அக்னி என்றேன்
பிரிவு என்னும்
ஏவு கணையாய்
நீ என்னுள்
பாய்ந்த போது


முக்காடு

- கவிநேசன் நவாஸ் -

சிதறி கிடந்தன
கவிதைகள்,
எழுந்து தடுமாறியது
என் இதயம்

என்னில்-
இருந்துவிட்டுப் போனாள்
அப்போது
இன்னும் புலம்பிக்கொண்டே
இருக்கின்றேன்
இப்போதும்!

தூக்கி, தூக்கியே
இதயம் வலிக்கிறது
இப்போதாவது சொல்கிறாளா
“என்னை இறக்கி வையுங்கள்”
என்று!

சிதைந்து இருப்பதற்கு
பதிலாக,
செதுக்கி இருப்பதுதான்
சிறந்தது!

புரிந்து கொண்டேன் தோழி
கோடுகள் கோணல்களாக -
இருக்கலாம்,
தேடல்கள்
தெளிவாக இருக்கட்டும்!

வாழ்க்கை
வாழ்க்கையில் அல்ல,
வாழ்க்கைதான்
வாழ்க்கையில்!

சிதறி கிடந்தன
கவிதைகள்
எழுந்து தடுமாறியது
என் இதயம்!
 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.