புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

நன்றிக்கடன்

கிண்ணியா

எம்.எச்.அலி அக்பர்

நசூர்தீன் கோழிப்பண்ணையில் தினமும் காலை 8 மணி ஆனதும், வாகனங்களுக்கும், பின்னால் பலகைப் பெட்டிகள் கட்டிய சைக்கிள்களுக்கும் குறைச்சலே இல்லை. இது ஒரு கிராமம். இக்கிராமத்திலேயே ஐந்து இடங்களில் கோழிப்பண்ணைகளை ஏற்படுத்தி ஏகப்பட்ட இறைச்சிக் கோழிகளை வளர்த்து கோடீஸ்வரர் அந்தஸ்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் நசூர்தீன்.

கோழித்தீன் உற்பத்தி செய்யும் பெரிய ஆலையொன்றையும் நிறுவி தன்னுடைய கோழிப்பண்ணைகளுக்கும், மொத்த விற்பனைக்கென்றும் வேறாக வைத்துள்ளார். கிட்டத்தட்ட 48 ஊழியர்கள் இவரிடம் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நசூர்தீனுக்கு ஒரு மகன் உட்பட 4 பிள்ளைகள், மற்ற 3 பேரும் பெண்மக்களாகும். தன் ஒரே மகனை எப்படியும் படிக்க வைத்து பட்டதாரியாக்க வேண்டுமென்பதே அவரது ஒரே குறிக்கோளாக இருந்தது.

அவ்வூர் கிராமமாக இருந்தாலும் க.பொ.த சாதாரண தரம் வரையும் உள்ள பாடசாலையாக ஒன்று திகழ்ந்து கொண்டிருந்தது. அங்கேதான் நசூர்தீனுடைய மகன் சிராஜூம் படித்துக் கொண்டிருந்தான். இவன் படிக்கும் 7ஆம் தரத்தில்தான் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் தாகீரின் மகன் ரமீஸ¥ம் படித்து வந்தான்.

எவ்வளவோ பணச்செல்வத்தைக் கொடுத்த இறைவன் சிராஜூக்கு கல்வியறிவை மிகக் குறைவாகவும் பணச்செல்வத்தைக் கொடுக்காமல் கஷ்ட நிலைமையில் வாழும் ரமீஸ¥க்கு மிகக் கூடுதலான கல்வியறிவையும் கொடுத்திருந்தான். இவர்களது வகுப்புக்களில் நடைபெறும் தவணைப்பரீட்சை, வகுப்பேற்றப் பரீட்சை, பாட ரீதியான பரீட்சைகள் எப்படிப்பட்ட பரீட்சைகள் வைத்தாலும் முதல் இடம் வகிப்பவன் இந்த ரமீஸ்தான்.

இப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் ரமீஸைப் பெருமையாகப் பாராட்டி கதைக்கும் அதே நேரத்தில் கோடீஸ்வரர் மகன் சிராஜிடம் “சிராஜ் நீ இன்னும் நல்லா முயற்சி எடுத்துப் படிக்கணும் பணம் மட்டும் இருந்தால் போதாது. கல்வி ஞானங்களில் ரமீஸைப் போன்று வரவேண்டும்” என்றார்கள். அதுவுமல்லாமல் காலைநேர ஆராதனைக் கூட்டத்திலும், பரீட்சை நடைபெறும் காலங்களிலும் பரீட்சைக்கு எல்லோரும் ஆயத்தம் செய்ய வேண்டும். ரமீஸைப் போல் புள்ளிகள் பெற்று முதல் தரத்தில் திகழ முயல வேண்டும் என்பார்கள்.

ரமீஸைப் பற்றி பாடசாலை பூராகப் பேசப்பேச சிராஜிக்கு தாங்கிக் கொள்ள முடியாமல் அவமானம் போல் இருந்தது. தனது தந்தையிடம் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்யும் ஒரு கூலித் தொழிலாளியின் மகன் இந்த ரமீஸ். இப்படிப்பட்டவரின் மகனை இப்படி எல்லா ஆசிரியர்களும் வாயாரப் புகழ்வதா! சேச்சே கூடவே கூடாது. இதற்கு தனது தந்தை நசூர்தீன் மூலமாகத் தான் ஏதாவது ஒரு வழி பண்ண வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் பாடசாலை விட்டதும் வீடு சென்றான் சிராஜ்.

பகல் சாப்பாட்டை முடித்து விட்டு ஹாய்யாக சாய்மனக்கதிரையில் சாய்ந்து கொண்டு அப்படியே சிறிது நேரம் துயில் கொள்வது நசூர்தீனின் வழக்கம். அன்றைய தினமும் அப்படிதான் சாய்ந்து கொண்டிருக்கும் போது, வாப்பா.... வாப்பா இனி நான் பாடசாலைக்குச் செல்லப்போறதில்லை என்றதும் ஏன் சிராஜ். அங்கே உனக்கு என்ன பிரச்சினை, வாத்திமார்கள் ஏதாவது நோவினை படுத்தினார்களா! இல்லை உன்னோடு படிக்கும் பிள்ளைகளினாலே ஏதாவது நடந்திச்சா! நடந்ததைச் சொல்லுமகன் என்ன இருந்தாலும் தீத்து வெய்க்கிறேன் என்றார் நசூர்தீன் தொற.

“வாப்பா ஓங்கிட்ட வேலை செய்கிறாரே தாகீர் அவர்ர மகன் ரமீஸ் என்ட வகுப்பிலேதான் என்னாடு படிக்கிறான். ஏதோ எல்லாச் சோதினையிலும் என்னைப்பார்க்கக் கொஞ்சம் கொஞ்சம் புள்ளிகளாலேதான் வாப்பா வாரான். அதனாலே அவனை எல்லா சேர்மார்களும் பெரிய சாதனை செஞ்சமாதிரி வாயாரப் புகழ்ந்து புகழ்ந்து எங்களையெல்லாம் கேலி பண்ணுற மாதிரி பேசுறாங்க வாப்பா, இதனாலே எனக்கு அவமானமாக இருக்கு. அதனால்தான் வாப்பா சொல்றேன். என்ட வகுப்பில் அவன் படிக்கணும். இல்லாவிட்டால் நான் படிக்கணும் ”என்றான் சிராஜ்.

அப்படியா சங்கதி! நீ ஏன் மகன் பாடசாலைக்குப் போகாம இருக்கணும். என்ட இலட்சியம், நீ படிச்சி பட்டதாரி ஆகணும், இஞ்சப் பார் என்ட வாப்பா என்னைப் படிக்க வெச்சி பட்டதாரி ஆக்கிப பாக்க எல்லா வசதிகளும் செஞ்சு தந்தாங்க. என்ன செய்யலாம் நான் 8ஆம் தரம் படிக்கிறப்போ இந்த ஒலகத்த விட்டுப் போயிட்டாங்க. அதோட என்ட படிப்பும் செத்துப் போயிட்டு மகன். என்னாலே நெறவேற்றப்படாமல் இருந்த இந்தப் பட்டதாரி பட்டத்தை நீ எடுக்க வேணும். அதனாலே நீ பள்ளிக்கூடம் போய்த்தான் ஆகணும் தாகீரர் மகனுக்கு ஒரு வழி செய்றேன் நீ பேசாமல் இரு என்றார்.

மறுநாள் கோழிப்பண்ணைகளைப் பார்வையிடச் சென்ற முதலாளி நசூர்தீன், தாகீர் வேலை செய்யும் இடத்தையடைந்து தாகீர், வேலை முடிஞ்சப் பொறவு கட்டாயமாக என்னை வந்து பார் என்றதும், கைகளைக் கட்டிய வண்ணம் ஆகட்டும் தொர என்றார். தாகீர் அவசர அவசரமாக அன்றாடத் தனது வேலைகளை முடித்துவிட்டு நசூர்தீனின் காரியாலயத்தையடைந்தார்.

தொர வரச் சொன்னீங்க என்ற தாகீரிடம், ஓம் தாகீர். எதுக்கு வரச்சொன்னேன் என்றால் நீ எனக்கு எப்போவும் நன்றியுள்ள சேவகனாக இருக்கிறாய். அதனால் உனக்கு மேலும் ஒரு ஒதவி செய்யலாமென்றிருக்கேன். என்ன மொதலாளி இந்த வேலை தந்ததே பெரிய ஒதவி மேலும் ஒரு ஒதவியா வேணாம் தொர இதுவே போதும்.

இஞ்சப்பார் நீ வேணாமுன்னாலும் நான் விடப் போறதில்லை. ஆனா நான் சொல்ற மாதிரி நி செய்யணும், சொல்லுங்க தொர பாடசாலையில் உன் மகன் ஒருத்தன் படிக்கிறானாம். பெயர் கூட ... ரமீஸ், தொர ஓ ரமீஸ்தான். அவன் படிச்சி என்னத்த கிழிக்கப்போறான். இல்லை தொர அவன் நல்லாப் படிக்கிறானாம். அவன பாடசாலையை விட்டும் விலத்த வேணாம் என்று வாத்திமாரெல்லாம் சொல்றாங்க, இந்த வாத்திமாரெல்லாம் எல்லாத் தகப்பன்மாருக்கும் இப்பிடித்தான் சொல்லுறது. இது அவங்களுக்குப் பழக்கமாயிட்டுது. அவங்கள விட்டுத் தள்ளு.

சொல்லுங்க தொர, நீங்க சொல்ல வாரதை, எனக்கு உன் மகனுக்கும் பெரிய ஒதவி செய்யப்போறேன் எனக்கிருக்கும் கோழிப்பண்ணையில் ஒன்றில் அவனுக்கும் ஒரு கணக்கு எழுதும் வேலை, ஒவ்வொரு நாளும் எத்தனையெத்தனை கோழிகள் விலை போகுது என்பதை எழுதிப் பதியும் வேலைதான் தாகீர், இப்போ மாதாமாதம் 10 ஆயிரம் கெடைக்கும். போவப் போவ கூடிக்கிட்டுப் போவும். என்ன தாகீர் யோசிக்கிறாய்! இந்த மாதிரி ஒதவி உனக்கு யாருமே செய்ய மாட்டாங்க இந்த வயசிலே அதை மட்டும் புரிஞ்சிக்கோ!

நான் விரும்பினாலும் என் மகன் இதை விரும்புவானோ தெரியாதே தொர. அவனும் எப்போ பார்த்தாலும் பொஸ்தகமும் கையுமாய்த்தான் இருக்கான். இதுக்கு என்ன சொல்லப்போறானோ தெரியாமல்தான் திண்டாட்டமாய் இருக்கு. என்ன கதகதைக்கிராய் நீ! ஒன்ட பிள்ளை, ஒன்ட சொல்லைக் கேக்காட்டி அவன் என்ன பிள்ளை, வாப்பாட சொல்லை மவன் கேக்கணும் இஞ்சப்பார் தாகீர், ஒன்ட மவன் ரமீஸ் பள்ளிக்கூடம் போவக் கூடாது, அப்படி போவான் என்றா, ஒனக்கு இங்கே வேல கெடையாது.

“என்ன தொர அப்படிச் சொல்லிட்டிங்க?” “நான் சொன்னது சொன்னதுதான் நீ இங்கே வேல பார்க்கிறதா இருந்தா ஒன்ட மவனையும் கூட்டிக்கொண்டு இங்கே வா இதுதான் நான் கடைசியாய்ச் சொல்வது. அங்கே பாடசாலையிலே வகுப்பு டாப்பிலே ஒன்ட மவன்ட்ட பேர் வெட்டுப்பட்டதாக என் மவன் சொன்னால்தான் இனி உனக்கு இங்கே வேல. மேற்கொண்டு எதுவும் பேசாம இங்கிருந்து போயிடு” என்று சொல்லவும் அவ்விடத்தை விட்டும் அகன்றார் தாகீர்.

அன்று பண்ணையில் இருந்து வீடு சென்ற தாகீரின் முகத்தைப் பார்த்ததும் அவர் மனைவி காத்தூன், என்னங்க ஒங்கட மொகம் ஒரு மாதிரி இருக்கு, ஒடம்புக்கு ஏதாவது வருத்த மாங்க என்றவரிடம், ஒடம்புக்கு இல்லை காத் தூன், மனசுக்குத்தான் வருத்தம் என்னங்க அப் படி நடந்திட்டுது, என்று கேட்கவும் நசூர்தீன் சொன்னதை அப்படியே சொன்னார் தாகீர்.

எல்லா விபரங்களையும் கேட்டபிறகு காத்தூன் யா அல்லாஹ் இது என்ன அநியாயமுங்க நம்மட அந்த சூது வாது தெரியாத பச்ச மண்ணையா வேலை செய்யச் சொல்றார் அந்தப் பாவி மனுசன். என்ன வந்தாலும் செரிதான் என்ட புள்ளையை மட்டும் நான் பள்ளிக்கூடத்தாலே வெழத்தவே மாட்டேன். அப்போ நான் வேறு வேலதான் பார்க்கவேணும் காத்தூன். என்னங்க சொல்aங்க. அப்படித்தான் மொதலாளி சொல்கிறார். ரமீஸ் பள்ளிக்கூடம் போனால், நான் கோழிப்பண்ணைக்குப் போகக் கூடாதாம்.

என்னங்க இப்படியுமா சொல்லிட்டார் அந்த மனுசன். இதையெல்லாத் கேட்டுக்கொண்டிருந்த ரமீஸ், “இதுக்கெல்லாம் காரணமே என்னோட படிக்கும் அந்த மொதலாளியின்ர மகன் சிராஜ்தான் உம்மா. நான் கெட்டித்தனம் காட்டி சேர்மாருக்கிட்ட நல்ல பேர், பாராட்டெல்லாம் பெறுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல்தான், அவன் வாப்பாக்கிட்டச் சொல்லி இந்த வேலை செய்யச் சொல்லி இருக்கான். எங்க வகுப்புப் புள்ளைகளிடமும் என்னைப் பள்ளிக்கூடதாலே வெழத்த வெய்ப்பேன் என்றெல்லாம் சொல்லி இருக்கான் வாப்பா” என்றான் ரமீஸ்.

இப்பதான் எனக்கு எல்லாம் ரமீஸ் என் வேலை போனாலும் பரவாயில்லை என்று உன்னைப் படிக்க வைத்தால் மேலும் மேலும் தடையாய்த்தான் இருப்பார் இந்த நசூர்தீன் தொர அதனாலே என் நானா மொறையுள்ள ஒருவர் இங்கிருந்து நான்கைந்து பட்டினங்கள் தள்ளியுள்ள ஒரு கிராமத்தில் கடையாபாரம் செஞ்சிக்கிட்டு இருக்கார். அங்கே நான் ரமீஸைக் கொண்டு படிக்க விட்டுட்டு வரப்போறேன்.

இந்த விஷயம் யாருக்குமே ஏன் இங்கிருக்கிற நம்ம குடும்பத்துக்கே தெரியப்படாது. ரமீஸை யாராவது கேட்டால் பட்டினத்திலே கடையொன்றில் சேர்த்து விட்டதாய்ச் சொல்வோம் நான் இப்போதே அதிபர் வீட்டுக்குச் சென்ற விடுகைப்பத்திரத்தை தரச் சொல்லுவோம். கெட்டிக்காரப் புள்ளைகளுக்கு அப்படி லேசத் தரமாட்டாங்க வாப்பா என்றான் ரமீஸ். அதிபர் நல்ல மனுசன், போய்க்கேட்டுப் பார்க்கிறேன். அன்றிரவு மணி 7.30 ஐ தாண்டிக் கொண்டிருந்தது இராமலிங்கம் அதிபரின் வீட்டு அழைப்பு மணி ஒலிக்கவே அவர்தான் வந்து கதவைத்திறந்தார் ஐயா நான்... நீங்க யாராக இருந்தாலும் பரவாயில்லை உள்ளே வந்து உக்காருங்கோ. இப்போ விஷயத்துக்கு வாங்க. ஒங்க பிரச்சினை என்ன! நான் 8ஆம் வகுப்பு படிக்கும் ரமீஸிட வாப்பா. சரி அவனுக்கு என்ன இப்போ பாடசாலையால் வெழத்தவேண்டிக்கிடக்கு ஐயா. அந்த கெட்டிக்காரப்பையன் ரமீஸையா இடை நிறுத்தப்போaங்க! சீச்சீ இது நடக்காது. அப்படி என்ன வந்திட்டுது ஒங்களுக்கு, என்றதும் சொல்றேன் ஐயா என்று நசூர்தீன் தொர கூறிய அனைத்தையும் கூறி முடித்தார் தாகீர்.

என்ன கேவலம் இது! ஒரு மனிதரா பாட சாலையிலே எல்லோராலும் விரும்பப் பட்ட வன் ஒங்க பையன்.

சரி காக்கா நாளைக்கு காலையில் 10 மணிபோல வாங்க. எல்லாம் செஞ்சி வைக்கிறேன். இன்னும் ஒன்னு ஐயா சொல்லுங்கோ ரமீஸ் படிக்கப்பேற விசயம் யாருக்கும் தெரியப்படாது. கடையில் வேலை செய்யிற மாதிரித்தான தெரியப்படுத்தணும் ஐயா.

காக்கா! கல்விக்கு சாதிமத பேதம் எதுவுமே இல்லை. நல்லா படிக்கிற மாணவனைத் தட்டிக் கொடுக்க வேணும். மட்டம் தட்டக்கூடாது நிச்சயமாக யாருக்கும் தெரிய வராது. கல்விக்கு ஊக்கம் கொடுக்கும் ஒங்களைப் போன்ற பெற்றோர்கள்தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லி அனுப்பினார் தாகீரை இராமலிங்கம் அதிபர்.

மறுநாள் காலைக்கூட்ட ஆராதனையில் இராமலிங்கம் அதிபர், பாடசாலை சம்பந்தப்பட்ட விடயங்களைக் கூறிவிட்டு, நமது பாடசாலைக்கு இன்று ஒரு துக்ககரமான நிலைமை. இப்பாடசாலையில் எல்லா ஆசிரியர்களாலும் கெட்டிக்காரன் என்ற கெளரவத்தைப் பெற்றுக்கொண்ட ரமீஸ், தனது வறுமை நிலை காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு எங்கோ ஒரு பட்டினத்திற்கு கடையில் வேலை செய்யப்போயிருக்கிறான் என்று சொன்னதும் மாணாக்கர் மத்தியில் ஒரு கிசுகிசுப்பு அனேகமானவர்களின் முகங்களில் துக்கக்களையே காணப்பட்டது.

இராமலிங்கம் அதிபர் தற்செயலாக நசூர்தீனின் மகன் சிராஜை நோட்டமிட்டார். என்ன ஆச்சரியம் அவன் முகத்தில் சந்தோசக்களை தாண்டவமாடிக் கொண்டிருந்தது. மாணவர்களை அமைதிப்படுத்திவிட்டு கடைசியாக உங்களுக்குச் சொல்லும் அறிவுரை நாங்கள் பொறாமைப்படக்கூடாது. ஆனால் இரண்டு விடயங்களில் தாராளமாகப் பொறமைப்பட வேண்டுமாம். ஒன்று ஒரு மாணவன் ஒரு தவணைப்பரீட்சையில் குறிப்பிட்ட புள்ளிகளுடன் 1ஆம் ஆளாக வந்தால் மறுதவணைப் பரீட்சையில் தான், தான் முதலாம் ஆளாக வருவதற்குப் பொறமைப்பட்டுப்படித்து அந்த இடத்தைத் தட்டிக் கொள்ள வேணும், மற்றது இறை வணக்கங்களில் ஒருவன் எவ்வளவு ஈடுபடுகின்றானோ அதையும் விடக்கூடுதலாக தான் தான் ஈடுபடப் பொறாமைப்பட வேண்டும். வேறு எதற்குமே நாம் பொறமைப்படக்கூடாது என்று சொல்லி முடித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.