புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் மலையக பெற்றோர்களின் அக்கறை

பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் மலையக பெற்றோர்களின் அக்கறை

நோட்டன் பிரிஜ் தினகரன் வாரமஞ்சரி வாசகர்வட்ட ஏற்பாட்டில் பட்டிமன்றம்

சீட்டன் - நோட்டன் பிரிஜ் தினகரன் வாசகர் வட்ட உறுப்பினர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பட்டிமன்றம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அண்மையில் ஒஸ்போன் தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வாசகர் வட்டத்தின் தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வானது பி.ப 1.00 மணியளவில் ஆரம்பமானது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மலேசிய நாட்டு எழுத்தாளர் மு. வரதராசன், சட்டத்தரணி விநாயகமூர்த்தி, கிராம உத்தியோகத்தர் டார்வின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். பட்டிமன்ற குழுவிற்கு நடுவராக பத்தனை ஸ்ரீபாத கல்லூரியின் விரிவுரையாளர் இராஜேந்திரன் சிறப்பு பேச்சாளர்களாக கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் சற்குருநாதன் இராகலை பன்னீர்செல்வம், ஏ.சீ.ஆர் ஜோன், வே. தினகரன் ஆசிரியர் ரோஹான் சசிக்குமார், சட்டத்தரணி மோகன்ராஜ் ஆகியோரும் பட்டிமன்றத்தில் தமது சிறப்பான வாதங்களை முன்வைத்து சிறப்பித்தனர்.

இந்த பட்டிமன்றமானது சமகாலத்தில் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் மலையக பெற்றோர்களின் அக்கறை எவ்வாறிருக்கிறது என்ற தலைப்பில் ஆராயப்பட்டது. அதில் பெற்றோர்கள் அக்கறையாகத்தான் இருக்கின்றார்கள். என்று விரிவுரையாளர் சற்குருநாதனின் குழுவினரும். இல்லை பெற்றோர்கள் அக்கறை பிள்ளைகளின் கல்வி முன்னேற் றத்தில் மிகமிக குறைவு என்று வே. தினகரன் தலைமையிலான குழுவினரும் வாதங்களை முன்வைத்தனர்.

பட்டிமன்றத்தில் பிள்ளையின் கல்வி முன்னேற்றத்தில் மலையக பெற்றோர் அக்கறையாகத்தான் இருக்கின்றார்கள் என்ற பக்கத்தில் கருத்துக்களை நோக்குகையில் கல்வி என்பது ஓர் அடுப்பு போன்றது. ஓர் அடுப்புக்கு மூன்று கற்கள் அவை எவ்வாறு சமமாக பலமாக நின்று தாங்கி பொருளை சுமந்து கொள்கிறதோ அதே போன்று பிள்ளையின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர், ஆசிரியர்.

மாணவர் என்ற மூன்று பிரதான கற்களும் திகழ்கின்றன. இருந்தபோதிலும் ஒரு கல்சாய்ந்தாலும் பானை கவிழ்வது போல் இவர்களினது பொறுப்புகளும் அமைகின்றன. இங்கே பெற்றோர் ஆசிரியர். மாணவர் மீது அக்கறை காட்டிவருவதனாலேயே இன்று எமது கல்வியில் 50%மாவது அடைந்திருக்க முடிந்திருந்திருக்கின்றது அத்தோடு தமது பெற்றோரின் சூழலை பிள்ளை ஏற்றுக் கொண்டு கல்விக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எம்மை சூழவிருக்கின்ற கவனக் கலைப்பான்களில் நாம் செலுத்தும் திறமைகளை கல்வியில் புகுத்தி அறிவில் சிறந்து சந்தோசத்துடன் வாழ்வை அனுபவிக்க, கழிக்க பெற்றோர்கள் வழிகாட்டுகிறார்கள் என்று வே. தினகரனும். ஒஸ்போன் பிரதேசத்தில் இன்று பல்வேறு துறைகளிலும் பிரகாசிக்கின்றவர்களை எமது பெற்றோர்களின் அக்கறை காரணமாகவே உருவாக்கியுள்ளார்கள் என்று ரொஹான் சசிக்குமாரும் இலங்கையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் வெறும் 40 ஆண்டுகால வரலாற்றையே எமது மலையக சமூகம் கொண்டுள்ளது. அந்த குறுகிய காலப்பகுதிக்கு ஏற்ற வகையில் எமது கல்வி முன்னேற்றம் அடைந்திருக்கின்றது.

எடுத்த எடுப்பிலேயே நாம் உச்சத்தை தொட்டுவிட எண்ணுவது எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுவதை போன்றது. இருக்கின்ற வறுமையில் கல்விக்கு செலவு செய்து பிள்ளையை அறிவுள்ளவனாக்குவதில் காட்டும் அக்கறை இருக்கிறதே அது எமது பெற்றோரிடத்தில் அக்கறையை காட்டுகிறது. அட்டைகடித்து வெறும் பட்டை உடம்பையும் எல்லோரும் குடும்பத்தில் உண்டபின் மிச்சம் இருக்கும் சோற்றை தாராளமானது என்றெண்ணி உண்டு தன்பிள்ளை நல்லா சாப்பிட்டு படிக்கணும் என்ற எண்ணம் எங்கள் பெற்றோரின் அக்கறையை காட்டுவதால் தானே இன்று எமது சமூகத்துக்கு சேவை செய்யக்கூடியவர்களை நாமே உருவாக்கி இருக்கின்றோம் என்று இராகலை பன்னீர்செல்வமும் வாதங்களை முன்வைத்தனர்.

இல்லை அக்கறை மிகமிக குறைவு என்று வாதாடியப் பகுதியின் வாதங்களை நோக்கும் போது வெளிநாட்டுக்கு வேலைத்தேடி செல்பவர்களில் மலையகத்தில் அதுவும் பெருந்தோட்டத்தை சேர்ந்தவர்களே அதிகம், பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் தான் வெளிநாடு சென்றதால் எத்தனை பிள்ளைகளின் கல்வி நாசமாகியுள்ளது.

இருந்ததையும் இழந்து மேலும் வறுமை இந்த விடயம் எதனைக் காட்டுகின்றது. ஏன் உள்நாட்டில் உழைக்க முடியாதா? உள்நாட்டில் உழைத்து உயர்வதற்கு அக்கறையில்லையா? மாமா வீட்டிலும் சித்தி வீட்டிலும் ஒப்படைத்த எத்தனை குழந்தைகள் சீரழிந்துள்ளார்கள். இது பிள்ளைமேல் அக்கறையில்லை என்பதை தானே காட்டுகின்றது.

அத்தோடு மலையக பிரதேசங்களில் சிறுவர்களை வேலைக்கமர்த்தல், வேலைவாங்குதல், முறையான முன்பள்ளி அறிமுகமில்லாமை, அதீத அக்கறைகாட்டி வீணாக்குதல், வீட்டில் படிப்பதற்கு ஒரு மேசையிருக்காது ஆனால் தொலைக்காட்சி பெட்டிக்கு கவர்ச்சியான மேசை, நகர்ப்புற பாடசாலை மோகத்தால் இட நெருக்கடியில் பிள்ளையை சேர்த்தல் தோட்டபுற பாடசாலைகளை புறக்கணித்தல், பிள்ளையை பற்றியோ கல்விநிலை பற் றியோ பாடசாலையில் நடக்கும் பெற்றோர் சங்க கூட்டங்களிலோ அக்கறை காட்டாமை, இலவச கல்வியில் அக்கறைக் காட்டாது டியூசன் கல்வியின் பணத்தை வீணடித்தல், பயிற்சிபுத்தங்களை பார்வையிடாமை என பல்வேறு அக்கறையின்¨மையை ஏ.சி.ஆர். ஜோன் சட்டதரணி, சற்குருநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

நிகழ்வின் இறுதியாக ஒஸ்போன் பிரதேசத்தை சேர்ந்த க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு தினகரன் சான்றிதழ்களும் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் வழங்கப்பட்ட சேமிப்பு வைப்பு புத்தகத்தையும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அத்தோடு வாசகர்வட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமாகிய விநாயகமூர்த்தி, பட்டிமன்ற நடுவராக கடமையாற்றிய ஸ்ரீ பாத கல்விக் கல்லூரி பீடாதிபதி இராஜேந்திரன், மலேசிய எழுத்தாளர் மு. வரதராசு, வாசகர் வட்ட தலைவர், செய்தியாளர் இராமச்சந்திரன் ஆகியோர் வாசகர் வட்டத்தினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

இறுதி அம்சமாக விஷேட அதிதி கே. விநாயகமூர்த்தி உரையாற்றுகையில் சமகாலத்திற்கு பொருத்தமான சிறப்பான தலைப்பில் பல கருத்துக்களை வெளிக்கொணர்ந்தமை இன்றைய மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் வழிகோலும். மேலும் இதே போன்ற மக்கள் சிந்தனையை தூண்டவல்ல பட்டிமன்றங்களை எதிர்காலத்திற்கு மிக பொருத்தமான வகையில் கல்வி வளர்ச்சியில் மலையக தொழிற்சங்கங்களின் பங்களிப்பு, ஆசிரியர்களின் பங்களிப்பு, தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது. என ஆராய்வதற்கு தயார் படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.