புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

கலைஞரின் டெசோ தனிநாடும் சம்பந்தனின் ஐக்கிய இலங்கையும்

கலைஞரின் டெசோ தனிநாடும் சம்பந்தனின் ஐக்கிய இலங்கையும்

இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி நாட்டு கோரிக்கையை வலியுறுத்தி, ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி தமிழ் நாட்டு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) ஏற்பாட்டில் நடைபெறவிருந்த “டெசோ” மாநாடு ஏற்பாட்டாளர்களிடையே காணப்பட்ட குழப்பநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னொரு தடவை மதுரை நகரில் இதேபோன்றதொரு கோரிக்கையை வலியுறுத்தி “டெசோ” மாநாடு நடைபெற்ற போது, விடுதலை புலிகள் இயக்கம் அதனை புறக்கணித்திருந்தது. இன்று, விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி மீண்டும் முன்னெடுக்கப்படுவது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் இன்றும் விடுதலை புலிகள் இயக்கம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக-வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மாநாட்டில் பங்குபெற்றால், அதனை இந்திய நாட்டின் நீதித்துறை நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது அல்லது எவ்வாறாக ஏற்றுக்கொள்ளும் என்று தெரியவில்லை. மாநாட்டில் இந்த தி.மு.க மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு தனி நாடு பற்றியோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பற்றியோ வாய் திறவாது இருந்தால் அதனை புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்களில் பலரும் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவே இருந்து வருகிறார்கள். அதற்கும் அப்பால் சென்று, தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடையே, “இலங்கையில் தனி தமிழ் நாடு” என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் பலரும் கூட விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும், பெறவேண்டும் என்றே நினைத்து செயல்படுகிறார்கள். அவர்களில் பலரும் பிரபாகரன் இன்னும் உயிருடனே இருப்பதாகவே நம்ப விழைகிறார்கள்.

உண்மையில் தமிழகத் தலைவர்கள் பலரும் தமது அரசியல் இருப்பிற்காகவே இலங்கைத் தமிழர்களை வைத்துப் பந்தாடுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சம். மாறி மாறி ஆட்சிக்குவரும் செல்வி. ஜெயலலிதா ஜெயராமும் கலைஞர் கருணாநிதியும் அதிகா ரத்திலிருக்கும்போது தமது மத்திய அரசைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழர் எதிர்ப்புக் கோஷத்தையும், எதிர்க்கட்சிக்கு வந்ததும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஈழத் தமிழர் ஆதரவுக் கோஷத்தையும் கையிலெடுத்துச் செயற்படுவதைக் கடந்த பதினைந்து வருடங்களாகத் தமிழக மக்களும், ஈழத் தமிழ் மக்களும் கண்ணுற்று வருகின்றனர். இதில் ஈழத் தமிழரில் உண்மையான ஆதரவு வைத்துச் செயற்படும் சில தீர்வை விரும்பும் கட்சிகளும், பொது மக்களுமே அப்பாவிகளாகக் காணப்படுகின்றனர்.

இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் தமிழ் மக்கள் புலிகளிடமும், படையினரிடமும் சிக்கித் தவித்த வேளையில் ஆட்சியிலிருந்த கலைஞரும், எதிரணியிலிருந்த ஜெயலலிதாவும் செயற்பட்ட முறையை, நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் இவ்விருவரினதும் சுயரூபம் நன்கு தெரியும். இன்று ஈழத் தமிழருக்காகத் தனிநாடு கோரும் கலைஞர் அன்று இதே தமிழர் உயிருக்காகப் போராடி கூக்குரலிடும்போது ஒரு சிறுதுளி பங்களிப்பையாவது செய்து ஆதரவளித்திருந்தால் அவரது நடிப்பை உண்மையான நடிப்பு என்று ஏற்றிருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு எதனையுமே அன்று செய்யவில்லையே? இறந்த புலிகளுக்கு கவிதை எழுதிக் கொண்டிருந்தார்.

அதேபோன்றுதான் அம்மணி ஜெயலலிதாவும் அன்று எதிரணியிலிருந்தபடியால் இந்திய மத்திய அரசிற்கு எதிராகக் குரல் கொடுத்து ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுப்பது போன்று கொடுத்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார். ஆனால் ஆட்சிபீடமேற அவர் ஈழத் தமிழரை வைத்துப் போட்ட சபதமான உறுதிமொழிகள் எதனையுமே நிறைவேற்றவில்லை.

இதுவே தமிழக அரசியல் தலைவர்களின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது. இவ்விரு தங்கத் தலைவர்களையும் விட ஆங்காங்கே ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுத்துவருவதாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சிறு சிறு தமிழ்க் கட்சிகளும் இந்த இரு தலை வர்களினதும் மாறி மாறி வரும் ஆட்சிக்கு முட் டுக் கொடுத்து வருபவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களுக்கு முன்னர் புலிகளும் தற்போது புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவுத் தமிழர்களும் நிதியுதவி அளித்துவருதாகவே அறிய முடிகின்றது. இல்லாவிடின் இவர்களால் எத்தகைய பின்புலத்தை வைத்து இவ்வாறு செயற்பட முடியும்?

உண்மையில் இலங்கைக்குள் செயல்பட்டு வரும் அரசு சார்பில்லாத தமிழர் ஆதரவு அரசியல் கட்சிக ளிடம் “தனி நாடு” என்ற கோரிக்கையை முன்வைத்து அரசியல் செய்யும் எண்ணமே கிடையாது. அது இப்போது இயலாத, நடக்கமுடியாத, சாத்தியமாகாத ஒன்றென்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அத்துடன் தமிழ் தேசிய கூட்டணி தலைவரான சம்பந்தன் - அண்மையில் அளித்த பேட்டியொன்றில் கூட “ஒன்று சேர்ந்த இலங்கை”யின் உள்ளேயே, இன பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாநாட்டில் அவரது பேருரை ஏற்படுத்தியிருந்த கருத்து குழப்பத்தை தீர்ப்பதாக அமைந்திருந்தது.

அம்மாநாட்டின் பின்னர் கொழும்பு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனனும் இதனையே வலியுறுத்தியிருந்தார். அது மட்டுமல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங் கைக்குள்ளேயே எட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதனை, இன பிரச்சினை யில் இந்தியா நேரடியாக தலையிடாது என்று கொள் ளலாம். அதே சமயம், “தனி நாடு” போன்ற கருத்துக்களை யார் முன் வைத்தாலும் அதனை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளாது என்பதையும் உள்ளடக்கி அவர் கருத்துத் தெரிவித்ததாகவும் கொள்ள லாம்.

அது போன்றே, மேனனின் கூற்றிற்கு பிற அர்த்தங்களும் உள்ளன. “ஐக்கிய இலங்கை” குறித்து அவர் தெரிவித்த கருத்து, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பொருந்தும். அவர்களுக்கு அப்பால் சென்று, சர்வதேச சமூகத்திற்கும் அந்த கருத்துகள் சென்றடையும். இதனால் மட்டுமே, புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் தமிழ் நாடு கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று இந்தியா எண்ணுவதாக முடிவுகட்ட தேவையில்லை. மாறாக, தற்போதைய கள நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச நாடுகள் அவ்வாறான முடிவை தாமாகவே எடுக்கும். அத்தகைய சூழ்நிலைக்கு சர்வதேச சமூகத்தை புலம்பெயர் தமிழ் அமைப்பினர் தள்ளி விடுவார்கள் என்று எதிர்பார்க்கும் நிலை உருவாகி வருகிறது.

பேச்சுவார்த்தை மூலம் அதிகார பகிர்வு குறித்த அரசியல் சட்ட திருத்தங்களை முன்னெடுப்பது தான், இன பிரச்சினைக்கு இன்றும், என்றும் உள்ள ஒரே செயல்படும் தீர்வு. அதற்காக அரசு முஸ்தீபு எடுக்க வேண்டும். அதே சமயம் கூட்டமைப்பும் அரசியல் கள நிலையை புரிந்து செயல்பட வேண்டும். தமிழ் அரசியல் தலைமைகள், நிகழ்காலத்தை தனதாக்கிக் கொண்டு, தனது சமூகத்தின் எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட வேண்டும்.

அரசின் மீது தமிழ் சமுதாயத் திற்கு ஏற்பட்டுள்ள நம்பிக் கையின்மையின் உண்மை தன்மையை உலக சமுதாயம் ஒத்துக்கொண்டால் போதாது. அதனை இலங்கை அரசும் சிங்கள அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது போன்றே, விடுதலை புலிகள் இயக்கத்தின் சுவடுகளையும் அதன் நினைவுகளையும் இலங்கை அரசும் சிங்கள சமூகமும் அரசியல் தலைமையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது என்பதையும் தமிழ் சமுதாயமும் தமிழ் அரசியல் தலைமையும் கூட ஏற்று செயல்பட வேண்டும்.

இப்போது நடப்பது என்ன? இரு தரப்பாருமே அடுத்தவர் மீதுள்ள அவநம்பிக்கையை மட்டுமே அச்சாரமாக வைத்து அரசியல் செய்கிறார்கள். இலங்கையில் வாடும் தமிழ் மக்களை சார்ந்த கூட்டமைப்பின் தலைமை, தனி நாடு கேட்கவில்லை. வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தனி நாடு கோரி, இலங்கையில் வந்து போராட்டம் நடத்தபோ வதில்லை. இன்னமும் அவர்களுடைய கருத்தோட்டம், செயல்பாடு அனைத்துமே உரிமை சார்ந்ததாகவே உள்ளது, வறுமை சார்ந்ததாக இல்லை. இது கூட்டமைப்பின் தலைமைக்கும் பொருந்தும்.

உரிமை குறித்து புலம்பெயர் தமிழர்களுடைய மனத்தோன்றல்களை கருத்தில்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூட்டமைப்பு தலைமை கருதுகிறது. இதில் அர்த்தமும் உள்ளது. ஆனால், இலங்கையில் விடுபட்டுப் போன அப்பாவி தமிழ் மக்களின் அன்றாட கவலைகளை நீக்குமுகமாக அனைவரும் இணைந்து செயல்திட்டங்களை வகுக்கவேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை வைக்கவில்லை.

முதலில் கிழக்கு மாகாணத்திலும் பின்னர் வடக்கு மாகாணத்திலும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசியல் ரீதியாக இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். வடமாகாண சபைத் தேர்தல் நடத்துவதை அரசு பின்னடித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு இப்போது ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் நடந்த சமயத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே இராணுவத்தை பின்வாங்கி விட்டு, வட மாகாணத்தில் அரசு அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளிடம் ஒப்படைக்க முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை நினைத்தால், அதில் தவறு இல்லை. அது போன்றே, போருக்கு பின்னாலான புனர்வாழ்வு திட்டங்கள் முழுமையாகவும் அசுர வேகத்திலும் நடந்தேறவும் கட்டுக்கோப்பான இராணுவம் தேவை என்றும் அரசு கருதலாம். ஆனால், இவை இரண்டுமே பிரச்சினை என்று ஆன பின்னர், அதனை கூட்டமைப்பு தலைமையுடன் விவாதித்து முடிவு எடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.

அவ்வாறு இவ்விரு மாகாணங்களிலும் தேர்தல்கள் நடைபெறும் பட்சத்தில் ஆட்சி அமைத்து, மத்திய அரசின் பொறுப்பில் மாகாண அரசை ஏற்க கூட்டமைப்பு தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளதா? கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டமைப்பிற்குள் குழப்பங்கள் வராதிருக்குமா? தற்போது கிழக்கு மாகாண தேர்தல் அறிவித்தாகிவிட்டது. அதில் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் எத்தனை சிக்கல்கள்? வெல்ல முடியாத மாகாணத்தில் தன்னால் போட்டியிட முடியாதென மாவை சேனாதிராஜாவினால் முன்மொழியப்பட்ட வேட்பாளரான முன்னாள் பத்திரிகையாளரும், கொழும்பு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஒருவர் தெரிவித்து நிராகரித்திருக்கிறார்.

சவாலை ஏற்றுப் போட்டியிடு வதைவிடுத்து வெற்றிபெற்று தனிப்பட்ட முறையில் செல்ல, செல்வாக்கு ஈடேற்றம் காண்பதே தலைமைகளின் இலக்காக உள்ளது. இவ்வாறான தலைமைகளால் எவ்வாறு தமிழரின் இலக்கை அடைய முடியும்? பேசாமல் அரசாங்கத்திடமே தமிழருக்கான தீர்வை முன்வைக்கும் பொறுப்பைக் கொடுத்துவிட்டு தமிழ்ப் புத்திஜீவிகள் அதில் திருத்தங்களை மேற்கொள்வதே சிறந்தது போலவே தெரிகின்றது.

அத்துடன் மாகாண அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் தங்களுக்கு எந்தவிதமான முன் அனுபவமும் இல்லை என்பதை கூட்டமைப்பு தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அரசு உயர் அதிகாரிகளாக செயல்பட்டு அனுபவம் வாய்ந்த தமிழர்களை பயன்படுத்தி தனது அரசியல் தலைவர்களுக்கு உரிய கருத்துரைகளை வழங்க வேண்டும்.

இந்த விடயங்களில் கூட்டமைப்பு தலைமை தற்போதே பின் தங்கி உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் இத்தகைய முன் முயற்சிகளை அவர்கள் இப்போதாவது எடுக்க வேண்டும். இல்லை என்றால், நாளை மாகாண அரசியல் பதவி ஏற்று கூட்டமைப்பு தலைமை செயல்படும் காலகட்டத்தில், அவர்களது அனுபவமின்மை காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமலே போய்விடும். அதற்கான அரசியல் சார்ந்த குற்றச்சாட்டை தற்போதைய நிலைமையில் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். மாறாக, அதிகார பகிர்வு என்று வந்து விட்டால், அதற்கும் இடம் இல்லாமல் போய்விடும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.