புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

முரளியின் ஓய்வின் பின்

முரளியின் ஓய்வின் பின்

இலங்கை அணி பெறும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி

,லங்கை- பாகிஸ்தான் அணிகளுக் கிடையில் கடந்த ஒரு மாத காலாமாக நடைபெற்று வந்த கிரிக்கெட் தொடர் கடந்த 12ம் திகதி முடிவுற்ற டெஸ்ட் போட்டியுடன் முடிவுக்கு வந்தது.

டுவண்டி-20 தொடர் சமநிலையில் முடிவுற்றது. ஒருநாள் தொடர் 3-1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி 30 மாதங்களுக்குப் பின் வெற்றி பெற்றுள்ளது. 2010 ஆம் இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவானான முரளியின் ஓய்வுக்குப் பின் முதல் முறையாக இத்தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் முரளியின் ஓய்வுக்குப் பின் இலங்கை அணி வெற்றிபெறும் 3வது டெஸ்ட் போட்டியும் இதுவாகும்.

அதே வேளை பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு வருடங்களில் சந்தித்த முதல் தொடர் டெஸ்ட் தோல்வியாகவும் இது பதிவானது. 2010ம் ஆண்டு சர்ச்சைக்குரிய இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பின் மிஸ்பா உல் ஹக் தலைமைப் பதவியேற்றார். அதன் பின் 7 டெஸ்ட் தொடர்களில் 5 வெற்றியும் 2 சம நிலையிலும் முடிவுற்றுள்ளது. அவர் தலைமையில் சந்தித்த முதல் தொடர் தோல்வி இதுவாகும். ஆனால் தோல்வியுற்ற காலி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை என்பதும் குறிபிடத்தக்கதாகும்.

காலியில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் போட்டித் தடை காரணமாக பங்குபற்றவில்லை. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 472 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 199 ஓட்டங்களையும், திலகரத்ன டில்ஷான் 126 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சயீட் அஜ்மல் 5 விக்கெட்டு களையும், ஜுனை ட்கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற் றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களையே பெற முடிந்தது. அவ்வணி சார்பாக கூடிய ஓட்டமாக யூனுஸ்கான் பெற்ற 29 ஓட்டங்களே பதிவாகியது. பந்து வீச்சில் சுராஜ் ரந்தீவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

372 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்து தனது இரண்டாவது இனிங்ஸை நிறைவு செய்து பாகிஸ்தான் அணிக்கு 511 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

இரண்டாவது இனிங்ஸிலும் சீரான இடைவெயில் விக்கெட்டுகள் விழ 308 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் சார்பில் அஸார் அலி 75 ஓட்டங்களையும், ஆகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற யூனுஸ்கான் முதல் இனிங்ஸை போலவே சர்ச்சைக்குரிய ஆட்ட மிழப்பால் 81 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவானார்.

ஜூன் 30 திகதி ஆரம்பமான இரண்டாவது போட்டியிலும் நாணயச் சுழற்றியில் வென்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணி யைத் துடுப்பெடுத்தாடப் பணித்ததற்கிணங்க இடையிடையே மழை குறுக்கிட்டாலும் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 556 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கடந்த போட்டிகளில் பிரகாசிக்காத மொஹம்மட் ஹபீஸ் இப்போட்டியில் சிறப்பாகச் செயற்பட்டு 196 ஓட்டங்களைப் பெற்றார். அஸார் அலி 159 ஓட் டங்கள். பதிலுகுத் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 391 ஓட்டங்களைப் பெற்றது. குமார் சங்கக்கார 191 ஓட்டங்களைப் பெற்றார். பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் ஜுனைத்தான் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப் போட்டியின் இடையிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. ஆட்டநாயகனாக ஜுனைட்கான் தெரிவானார்.

மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி கடந்த 8ம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. தொடர்ந்து மூன்றாவது முறை யாகவும் நாணயச்சுழற்றியில் வெற்றி பெற்ற மஹேல ஜயவர்தன பாகிஸ்தான் அணியை துடுப்பாடப்பணித்தார். முதல் நாளே 226 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டையும் இழந்தது. பாகிஸ்தானின் அசாத் ஷபீக் 75 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் புதிதாக இப்போட்டிக்கு அழைக்கப்பட்ட திசர பெரேரா 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். (அடுத்த வாரம் தொடரும்...)

இலங்கை அணியும் ஆரம்பத்தில் தடுமாற்றத்தையே சந்தித்தது. 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

இரண்டாம் நாள் ழுழுவதும் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ஓட்டங்களைப் பெற்றது. திசர பெரேரா 75, பரணவிதான 75, சமரவீர 73 ஓட்டங்களைப் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் மீண்டுமொரு முறை பிரகாசித்த ஜுனைட்கான் 73 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

111 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி 8 விக்கெட் இழப்புக்கு 380 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதில் அஸார் அலி 136 ஓட்டங்களையும், அஷாட் சபீக் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐந்தாவது நாளில் மதிய போசனை இடைவேளைக்கு பின் 70 ஓவர்களில் 270 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களையே பெற முடிந்தது. மீண்டும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 74 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அஜ்மல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியைத் தோல்வியிருலிருந்து மீள்வதற்குக் காரணமாக இருந்த அஷாட் சபீக் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதிலும் 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்களுடன் 494 ஓட்டங்கள் பெற்ற குமார் சங்கக்கார தொடர் நாயகனாகவும் தெரிவாகினர். இத்தொடரில் பாகிஸ்தான் அணி வீரர் அஸார் அலி 2 சதங்களுடன் 385 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணிசார்பாக ரங்கன ஹேரத் 18 விக்கெட்டுகளையும், பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத்கான் ஆகக் கூடதலாக 17 விக்கெட்டுகளையும், சயீட் அஜ்மல் 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றியனர்.

விம்பிள்டனில் ஏழாவது முறையாக முடி சூடி பெடரர் சாதனை; சர்வதேச தரவரிசையிலும் முதல் இடத்துக்கு முன்னேற்றம்

டென்னிஸ் போட்டியின் உலகக் கிண்ணமாகவும், மகுடமாகவும் வர்ணிக்கப்படும் விம்பிள்டன் ஷம்பியன் ஷிப் தொடர் ஆடவர், மகளிர், இரட்டையர் என பல பிரிவுகளில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டி கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை (8ம் திகதி) முடிவுற்றது.

இம் முறை விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை 7வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை படைத்துள்ளார். அத்துடன் மீண்டும் முதல் இடத்திற்கும் முன்னேறியிருக்கிறார்.

“டென்னிசின் உலக கோப்பை” என்று கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த மாதம் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 3ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 4ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் சென்ற வாரம் மோதினார்கள்.

விம்பிள்டனில் கடந்த 76 ஆண்டுகளாக எந்த ஒரு இங்கிலாந்து வீரரும் வெற்றிபெற்றதில்லை. அந்த நீண்ட கால தாகத்தை முர்ரே தணிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

30 வயதான பெடரருக்கு இது 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஆண்களில் அதிக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் வென்றவர் பெடரர்தான். இவருக்கு அடுத்தபடியாக ஓய்வு பெற்ற பீட்சாம்ப்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாமுடன் 2வது இடத்தில் இருக்கிறார். இந்த வெற்றிகள் மூலம் பெடரர் மீண்டும் முதலி டத்தை பிடித்துள்ளார். அவருக்கு ரூ. 10 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது. கிராண்ட்ஸ்லாம் கனவு தகர்ந்ததால் மனமுடைந் முர்ரேவுக்கு சுமார் ரூ. 5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

பெடரர் இதுவரை வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்

அவுஸ்திரேலிய பகிரங்கம்- 2004, 2006, 2007, 2010

பிரெஞ் பகிரங்க டென்னிஸ்- 2009

விம்பிள்டன்- 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012

அமெரிக்க பகிரங்க- 2004, 2005, 2006, 2007, 2008

முதல் இடத்திலும் சாதனை சமன்

வீரர்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க முன்னாள் ஜாம்பவான் பீட்சாம்பிராஸ் 286 வாரங்கள் முதலிடம் வகித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

பெடரர் ஏற்கனவே 285 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருக்கிறார். தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்ததன் மூலம் 286 வாரம் என்ற சாம்ப்ராசின் சாதனையை சமன் செய்துள்ளார்.

விம்பிள்டனை 5ஆவது முறையாக வென்றார் செரீனா

விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இங்கிலாந்தின் லண்டனில் கடந்த வாரம் முடிவுற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் போலந்தின் ரட்வன்ஸ்காவை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என, எளிதாக வென்ற செரீனா இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற ரட்வன்ஸ்கா 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவதும் கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய செரீனா 6-2 என எளிதாக வென்றார். முடிவில் 6-1, 5-7, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற செரீனா சாம்பியன் பட்டம் வென்றார்.

கடந்த 2010 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கிண்ணம் வென்ற பின் கிராண்ட்ஸ்லாம் தொடர் எதிலும் கிண்ணம் வெல்லாமல் இருந்தார் செரீனா. தற்போது ஐந்தாவது முறையாக விம்பிள்டனில் பட்டம் வென்றுள்ளார். தவிர ஒட்டு மொத்தமாக செரீனா கைப்பற்றும் 14வது கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும்.

லண்டன் டென்னிஸ்:

விம்பிள்டன் இரட்டையர் ஆட்டத்தில்

செரீனா - வீனஸ் சகோதரிகள் சம்பியன்

கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் இரட்டையர் சம்பியன் ஷிப் போட்டியில் அமெரிக்க விராங்களைகளான வீனஸ் வில்லியம், செரீனா வில்லியம் சகோதரிகள் வென்றுள்ளனர்.

இந்த ஜோடி சென்குடியரசு வீராங்கனைகளான அன்ரியா ஹவாக்கோவா- லூசி ஹராடெக்கா ஜோடியை 7- 5, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

இது இந்த ஜோடி சர்வதேச ரீதியில் வெற்றி பெறும் 13 சம்பியன் ஷிப் பட்டமாகும். இதற்கு முன் லண்டன் பகிரங்க டென்னிஸ் சம்பியன் ஷிப் பட்டம் 4 முறையும், அவுஸ்திரேலிய பகிரங்கம் 4 முறையும், பிரான்ஸ் பகிரங்கம் 2 முறையும், அமெரிக்க பகிரகம் 2 முறையும் வெற்றிபெற்றுள்ளனர்.

மீண்டும் விக்டோரியா அஸரென்கா

முதலிடம்

சர்வதேச டென்னிஸ் பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மீண்டும் பெலாரஸைச் சேர்ந்த விக்டோரியா +ஸரென்கா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த மாதம் பிரான்ஸ் பகிரங்க சம்பியன் ஷிப் போட்டியில் படம் வென்ற ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா முதலிடத்தைக் கைப்பற்றினார். ஆனால் கடந்த வாரம் முடிவுற்று லன்டன் கிராட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்றுடனேயே ஷரபோவா வெளியேற்றப்பட்டதால் முதலிடத்தை இழந்தார். அரையிறுதி வரை முன்னேறிய அஸரென்காவிடம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக்:

அணிகளின் பயிற்சியாளர்கள் தெரிவு

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கு கொள்ளும் 7 அணிகளில் 6 அணிகளுக்குப் பயிற்சியாளர்களைத் தெரிவு செய்ய போட்டி ஏற்பாட்டாளர்களான ‘சமர்செட் என்டர்டேர்மன்ஸ்’ நிறுவனம் தெரிவு செய்துள்ளது. கதுரட அணியின் பயிற்சியாளரைத் தவிர மற்றைய அணிகளின் பயிற்சியாளர்கள் வருமாறு:-

* றுஹுணு - வகார் யூனிஸ் (பாகிஸ்தான்)

* பஸ்னாஹிர- துலிப் மெண்டிஸ் (ஸ்ரீலங்கா)

* ஊவா- நவீட் நவாஸ் (ஸ்ரீலங்கா)

* உதுர- டொம்முடி (அவுஸ்திரேலிய)

* வயம்ப- ட்ரெவர் பேலிஸ் (அவுஸ்திரேலியா)

* நெகனஹிர - ஷேன் ரெப் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணி படுதோல்வி

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 5 போட்டிகளைக் கொண்ட தொடர் இங்கிலாந்தில் கடந்த புதன்கிழமை முடிவடைந்தது. இப்போட்டித் தொடரில் இங்கிலந்து அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இது அவுஸ்திரேலிய அணி அணமைக் காலமாக சந்தித்த அவமானத் தோல்வியாகும். இப்போட்டித் தொடரில் மழை காரணமாக ஒரு போட்டி கைவிடப்பட்டது. மற்றைய அனைத்துப் போட்டிகளிலும் படு அவ்வணி தோல்வியடைந்துள்ளது. அண்மைக்காலமாக டெஸ்ட் தொடரில் முதன்மை அணியான இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடர்களிலும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்போட்டித் தொடர் நாயகனான இங்கிலாந்து அணியின் மத்திய வரிசை ஆட்டக்காரராக இயன் பெல் தெரிவானார்.

இத் தோல்வி அவுஸ்திரேலிய அணியின் முதலிடத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது. 123 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த அவ்வணி 4 புள்ளிகள் இழந்து 119 புள்ளிகளுடன் முதலிடத் திலுள்ளது. இரண்டாவது இடத்தை 118 புள்ளிகளுடன் இங்கிலாந்தும், தென்னாபிரிக்காவும் பகிர்ந்துள்ளதுடன் 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருந்த இந்திய அணி நான்காவது இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது. இந்திய அணி எதிர்வரும் இலங்கை அணியு டனான தொடரை முழுமையாகக் கைப்பற்றினால் அவுஸ்திரேலிய அணியின் முதலிடம் பறிபோகலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.