புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
அர்த்தமில்லா விடயங்களை கூற நான் பைத்தியக்காரன் இல்லை

அர்த்தமில்லா விடயங்களை கூற நான் பைத்தியக்காரன் இல்லை

சில இணையங்களின் வசைபாடலுக்கு ஆனந்தசங்கரி கண்டனம்

நான் கூறியதாக சில இணைய ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் சில சோடிக்கப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானதாகும். ஆதாரமற்றதும், நம்ப முடியாததுமான செய்திகளைக் கூற நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல. ஏன் முழுப் பைத்தியக்காரன் கூட செய்திக்காக பொய்களைச் சொல்ல மாட்டான்என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பொதுநலவாய மாநாடு நடந்து கொண்டிருந்த வேளை எனக்கே உரித்தான கடமையுணர்வோடு சில பத்திரங்களைத் தயாரித்து மகாநாட்டுக்கு வருகைதந்த தலைவர்களுக்கும், தூதரகங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தேன்.

இம்மாதம் 12 ஆம் திகதி மாகாநாட்டுக்கு வருகைதந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் நாட்டு நிலைமையை விளக்கியும் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 53 நாட்டுத் தலைவர்கள் மீண்டும் கூடுவது 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் சார்க் மாநாட்டின் போது தவறவிட்ட சந்தர்ப்பத்தைப்போல் அல்லாமல் 53 நாடுகளின் தலைவர்களும் இந்தியாவையும், கனடாவையும் உள்ளடக்கிய இம்மாநாடு நடைபெற உதவுமாறும் கேட்டிருந்தேன்.

காலத்திற்குக் காலம் சில இணையத்தளங்களும், ஊடகங்களும் என்னைப்பற்றி வசை பாடுவது வழக்கமாகிவிட்டது. தேவையிருக்கின்ற சிலர் இப்படிச் செய்கிறார்கள். அரசு போட்டாலென்ன ஆண்டவன் போட்டாலென்ன செய்தியைப் போட்டவர்கள் போடுவதற்கு முன் எனது வயதையும் அனுபவத்தையும் இன ஒற்றுமையையும் கவனத்திலெடுத்து ஒரு சொல் கேட்டுவிட்டுப் போட்டிருக்கலாம்.

மூன்று வருடங்களாக நான் படும் அவமானத்திற்கு விரைவில் ஓர் முடிவு வரவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்!

இணையத்தளங்கள் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. சிலர் இதை முறையற்ற விதத்தில் தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு நல்லதல்ல. சிலருக்கு இதுதான் வாழ்வாதாரம். சிலருக்கு பொழுதுபோக்கு! சிலருக்கு வரைவிலக்கணமின்றி எல்லோர் தலையிலும் குட்டிப்பார்ப்பது! சிலர் இவற்றை உபயோகித்து சிலரை தூக்கி வைப்பதும், வேறு சிலரை காலில் போட்டு மிதிப்பதும் வழக்கமாகிவிட்டது.

சுய மகிழ்ச்சிக்காக ஒருவர் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்களை துன்பப்படுத்துவது நியாயமற்றதாகும். மக்களுக்கு சரியான நடுநிலையான செய்திகளை வழங்குவதே ஊடகங்களின் தர்மமாகும் என்றும் ஆனந்தசங்கரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.