புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

இந்தியாவை குறை கூறினால் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்இ

இந்தியாவை குறை கூறினால் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்இ

ந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழருக்கு அந்நாடு தனது சக்தியையும் மீறிப் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. வரலாறு தெரிந்தவர்கள் இக்கூற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி நடத்திவரும் நாடு எனத் தெரிந்திருந்தும் இலங்கை அரசாங்கத்திற்குத் துரோகம் இழைத்து இந்தியா இலங்கை தமிழருக்கு உதவிகளைப் புரிந்த வரலாற்றை மறைக்க முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் சிலர் இன்று இவற்றை மூடி மறைத்து இந்தியா தமக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி வருகின்றனர். உண்மையில் இந்தியா இலங்கையில் ஆட்சி புரிந்து வரும் அரசாங்கங்களிற்கே துரோகம் இழைத் துள்ளது.

இலங்கையில் தமிழரின் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆரம்பம் முதல் இந்தியா ஒரு ஜனநாயக நாடான இலங்கைக்கு எதிராக அதன் உள் நாட்டிலேயே கிளர்ச்சியை ஏற்படுத்த தனது நாட்டில் இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், அடைக்கலமும், நிதியுதவியும் வழங்கியது. இந்திய மத்திய அரசாங்கத்தின் கண்டும் கண்டுகொள்ளாத, தெரிந்தும் தெரியாதது போலிருந்த கொள்கையினால் ஒரு காலத்தில் தமிழகம் இலங்கைத் தமிழ் இளைஞர் அமைப்புகளின் ஆயுதப் பயிற்சிக் களங்களின் கோட்டையாக இருந்ததை எவரும் மறுதலிக்க முடியாது.

பிரபாகரன், பத்மாநாபா, உமாமகேஸ்வரன், ஸ்ரீ சபாரட்ணம் என இலங்கையின் வடக்கில் பிறந்த பலர் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞர்களுடன் இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்று இங்கு வந்து ஒரு ஜனநாயக அரசிற்கு எதிராகப் போரிட்டமையானது இந்தியா இலங்கைக்குச் செய்த மாபெரும் துரோகமாகும். அதேவேளை அன்று இவ்வாறு இந்திய தமிழருக்கு நன்மை செய்வதாக நினைத்துச் செயற்பட்டதை இன்று இலங்கைத் தமிழர்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், தமிழகத்தில் தமது அரசியல் பிழைப்பிற்காக புலிகளின் நிதியில் அரசியல் செய்யும் சில அரசியல்வாதிகளும் மறந்து விட்டனர்.

இலங்கைத் தமிழ் இளைஞர் போராட்டக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி தமிழகத்தில் முகாம்களை அமைத்து இயங்க மட்டுமல்லாது நிதியுத விகளையும் வழங்கிய இந்தியா அத்துடன் நின்றுவிடவில்லை. இலங்கையில் இப்போராட்டக் குழுக்கள் இலங்கை இராணுவ வீரர்களிடம் வீழ்ச்சியடைந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்று பேச்சுகளை நடத்தி அக்கால இடைவெளிக்குள் அக்குழுக்களுக்கு புத்துணர்ச்சி அளித்ததையும் வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது.

இலங்கை அரசாங்கத்திற்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர வைத்ததுடன், இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படைகளை அனுப்பி சமாதானத்தை ஏற்படுத்தவும், இந்தியா முயற்சித்தது. இலங்கை இராணுவம் தம்மைக் கொன்றொழிக்கிறது எனத் தமிழ்த் தரப்பு பொய்யா¡கக் கூக்குரலிட்டபோது அது உண்மையா என ஆராய்ந்து பார்க்காது சர்வதேசக் கொள்கைகளையும், சட்டவரம்புகளையும் மீறி, இந்தியா இலங்கையின் வடக்கில் ஆகாய, கடல் மார்க்கமாக உணவுப் பொதிகளை வழங்கியது. இவ்வாறு இந்தியா இலங்கைத் தமிழருக்குச் செய்த எத்தனையோ விடயங்களைக் கூறிக் கொண்டே செல்லலாம்.

இத்தனை உதவிகளையும் செய்த இந்தியாவிற்கே கால்களால் எட்டி உதைவது போன்று விடுதலைப் புலிகள் செய்த வன்முறையிலான கொடூரங்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகள் சிலரின் வார்த்தை வன்முறைகளும் முழு இந்தியாவையுமே கிலி கொள்ளச் செய்தது. தமது பாரதப் பிரதமராக இருந்தவரும், நமது ஒவ்வொரு வளர்ச்சிப் படிக்கும் காரணகர்த்தாவாக இருந்தவருமான அன்னை இந்திரா காந்தியின் புதல்வனுமான ராஜீவ் காந்தியை ஈவிரகமின்றிக் கொன்றொழித்தனர். அதற்கு முன்னர் தமிழருக்கு பாதுகாப்பளிக்கவெனக் கூறி அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினரில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர். இவ்வாறு உதவி செய்த இந்தியாவிற்கே உபத்திரவம் செய்த புலிகளின் கொடுஞ்செயல்களைப் பட்டியலிடலாம்.

இவ்வாறு பல்வேறு உதவிகளை இலங்கைத் தமிழ் மக்களுக்காகச் செய்த இந்தியா தனது காலத் தவறுகளை உணர்ந்து இலங்கை அரசாங்கத்திடம் மன்னிப்புக் கேட்பது போன்றும் தவறுகளுக்காக பிராயச் சித்தம் செய்வது போன்றுமே இன்று செயற்பட்டு வருகிறது. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற வள்ளுவன் வாக்கிற்கமைய இலங்கை அரசாங்கமும் இந்தியாவுடன் நட்புடன் பழகி வருகிறது. உண்மையில் இந்தியா செய்த வரலாற்றுத் துரோகத்திற்காக இலங்கை அரசாங்கமே இந்தியாவைக் குறை கூறி எதிரியாகப் பார்க்க வேண்டும். ஆனால் இங்கு மாறி இத்தனை, உதவிகளையும் பெற்ற இலங்கைத் தமிழ்ச் சமூகம் இந்தியாவைக் குறை கூறி துரோகியாகவும், எதிரியாகவும் நோக்குவது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. இவ்வாறு இலங்கைத் தமிழ்ச் சமூகம் நடந்து கொள்வது அவர்கள் நன்றி மறந்தவர்கள் என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

இறுதி யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவியிருந்தால்கூட அதில் தவறிருப்பதாகக் கொள்ள முடியாது. அயல்நாடு என்றும் பாராது, இராஜதந்திர ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்திருந்தும் தமக்கு உதவி செய்த நாட்டின் தலைவரையே கொன்றொழித்தமை சரியானது எனத் தமிழ்த் தரப்பு வாதிட்டால் புலிகளை அழிக்க இந்தியா உதவியதில் எந்தவிதமான தவறுமில்லை என எவரும் வாதிடலாம். இன்று புலிகள் அழிக்கப்பட்டமையால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எத்தனை சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்கின்றார்கள். அப்பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தியைக் கண்டு வருகிறது. விரைவில் அரசியல் ரீதியான தீர்வும் காணப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முட்டுக் கட்டையாக தமிழர் தரப்பே உள்ளது. எனவே பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வரவில்லை என்பதால் இலங்கை அரசாங் கத்துடன் இந்தியாவின் நட்பும் இராஜதந்திர தொடர்புகளும் எவ்வகையிலும் பாதிப்படையமாட்டாது. இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வு தாராளமாகவே உள்ளது. இராஜதந்திரத் தொடர்புகளில் முன்னெப் போதுமில்லாத இறுக்கமான நிலை காணப்படுகிறது. தாம் வளர்த்துவிட்ட தமிழ் ஆயுதக் கிளர்ச்சிக் குழுக்களை அழித்தொழித்தமையினால்தான் இலங்கையில் இதுபோன்ற சர்வதேச மாநாட்டை நடத்தக் கூடியதாக உள்ளது என இந்தியா இலங்கையைப் பார்த்துப் பெருமைப்பட வேண்டும். உண்மையில் அது எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குக் கிடைத்த வெற்றி. ஜனாதிபதி மூலமாக முழு நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றி.

எனவே இந்தியா புரிந்த உதவிகளைத் தமிழ்ச் சமூகம் திரும்பிப் பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்த துரோகத்தனமான கைமாறையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இனிமேலாவது இவற்றை உணர்ந்து இந்தியாவைக் குறை கூறாதிருக்க வேண்டும். எமது நாடு எமது ஜனாதிபதி என்ற நம்பிக்கையுடன் எமது எதிர்கால பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். உதவி செய்தால் நல்லவர், இல்லாவிட்டால் கெட்டவர் என்ற போக்கைத் தமிழ்ச் சமூகம் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் மீண்டுமொரு தடவை இருண்ட யுகத்திற்குள் சென்று அல்லப்படவே நேரிடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.