புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

‘KAVITHAIMANJAREY’

ஊர் சார்பில் ஒரு மடல்

- கவிமணி அ. கெளரிதாசன் -

மண்பற்றும் மதப் பற்றும்
மாறாத வகை வாழும்
‘கிண்ணியா நகர சபை’
கீர்த்திமிகு தலை மகனே!
‘தவிசாளர் ஐயா! என்
தயவான விண்ணப்பம்!
பவிசில்லா நீங்கள்; இனம்
பாராத பொது மனிதர்!
-*-
போட்டி விழா - பரிசளிப்பு
பொருட்காட்சி என்றெல்லாம்,
காட்டியெமை மகிழ் விக்கும்-
கலையார்வம் மிக்கவரே!
உங்கள் அருஞ் சேவையினை
உயர்வாக மதிக்கின்றோம்!
‘எங்களூர் வீதி தன்னை
ஏனய்யா மறந் தீர்கள்?’
-*-
‘கட்டையாறு’ கரை யோரம்
கால்நடையில் செல்கையிலே,
மட்டிட்டுச் சொல்ல வொணா-
மணம் மூக்கைத் துளைக்கிறதே!
வெட்டும் மாட் டெலும்பு
வேறெல்லாக் கழிவுகளும்,
கொட்டுகின்ற இட மாச்சு
குழி யாவும் திட லாச்சு!
-*-
பாரிநிகர் கொடை தந்து
பாரெல்லாம் காப்ப வரே!
சீரான ‘நல் லாட்சிக்’
சிறந்தோங்க உழைப்பவரே!
நேரில் வந்து பார்வையிட்டு
நெருக்கடியைத் தீர்த்து வைக்க-
“ஊர்சார்பில் இம் மடலை
உங்களுக்கு அனுப்புகின்றேன்!”

வாழ்க்கை வட்டம்!

- சிந்துஜா, கண்டி -

காலைக் கதிரவனும் வட்டம் - நம்
கண்ணின் மணியுமொரு வட்டம்
மாலைச் சந்திரனும் வட்டம் - நல்ல
மனித வாழ்வுமொரு வட்டம்
சோலைக் காற்றதுவும் வட்டம் - தினம்
சுழலும் உலகுமொரு வட்டம்
சாலை விளக்கதுவும் வட்டம் - சின்னத்
சிறுவர்களின் சிந்தனையும் வட்டம்.

தந்தை அடிப்பதுவும் அன்பு - தெய்வத்
தாயின் அணைப்பதுவும் அன்பு
சிந்தனை செப்புவதும் அன்பு - மழலைச்
சேயின் சிரிப்பதுவும் அன்பு
விந்தை மனமதுவும் அன்பு - மனிதர்
வாழ்வில் விரும்புவதும் அன்பு
பந்தைப் போன்றதுவே அன்பு - மனதில்
பட்டுத் திரும்பிவரும் அன்பு.

குயிலின் குரலதுவும் கீதம் - புல்லாங்
குழலின் காற்றதுவும் கீதம்
மயிலின் அசைவுமொரு கீதம் - சோலை
மலரில் வண்டுதரும் கீதம்.
பயிரின் பசுமையொரு கீதம் - நாம்
பயிலும் கல்வியொரு கீதம்.
உயிரின் நட்புமொரு கீதம் - அதை
உயிலாய் எழுதுவதும் கீதம்

உசிரொண்டு போகுதே...!

- எஸ். சிபானி முஹம்மட் ஒலுவில் -

வயல் பூமி மத்தியில
வரம்பு ஏறி நடக்கையில
இரவெல்லாம் பொழிஞ்ச மழ
இதமாக குளிரயில
காத்தோட கலந்து வந்து
களி நிலமும் மணக்குதம்மா...!
கண் பார்த்த காட்சியெல்லாம்
நரம்பெல்லாம் ஊடுருவ
நஞ்சு பட்ட மரம் போல
நரம்பறுந்து நிக்கிறேனே...!

தலைப்பாரம் கைகள் தாங்க
கைகள் இரண்டையும் கால்கள்தாங்க
கண்ணீர் சுமந்து கண்கள் ஏங்க
கை விட்டு கதிகலங்கி கிடக்குறேனே...!

முள்ளி மல பக்கத்துல
குடிசையோட பத்து நிலம்
பசுமையாதான் வெளஞ்சி நிற்கும்
பார்க்க பார்க்க நெஞ்சு சொக்கும்
ஏர்பூட்டி நானும்
எடுத்தவழி உழவினாலும்
ஏமாத்தாம என் தங்கம்
எவ்வளவோ தந்துருச்சி...!

பொம்பளபுள்ள பொத்துடன்னு
பொலம்பி நான் அழுததில்ல
எம் மண்ணோட உதவியால
படிப்போட சேர்த்து
பண்பாத்தான் வளத்து விட்டேன்
ஒரு குறையும் வச்சதில்ல...!

என் பொண்ணுக்கு நான்
கல்யாணம் பண்ணிட்டேனே...!
என் தங்கம்...

உனக்கு நான் துரோகம்
பண்ணிட்டேனே...!

சீதனத்த கேட்டு என் வேதனத்த
பறிச்சிக்கிட்டாங்க...!
சாதமாக எடுத்து சோதனைய
தந்துட்டாங்க...!
சிறப்பாதான் வைப்போம்னு
எம் பொண்ணையும்
எடுத்துக்கிட்டாங்க...!

எம் மண்ண வித்து பொன்னாக்கி
எம் பொண்ண நானும்
வழ வச்சேன்
சத்தியமா என் தங்கம்...!
மனசாற உன்ன கொடுக்கலையே...!

உள் நெஞ்சு வலிக்க
உசிரொண்டு போகுதே...!
உலகம் எல்லாம் தேடினாலும்
உன்னப்போல ஒரு உசிரு
கிடைக்குமா...? என் தங்கம்...!

நீயானபோது...!

- மும்தாஸ் மக்பூல் நற்பிட்டிமுனை -

எழு வண்ண வானவில் தான் அழகு என்று எண்ணியிருந்தேன்,
கருமை நிற வானவில்லும் அழகு தான் “உன் புருவங்கள்”;

வண்ண வண்ணமீன்கள் தான் அழகாய் தெரிந்தன,
இன்று தான் அறிந்தேன் கருப்பு வெள்ளை மீன்களும்,
கொள்ளை அழகு என்று “உன் கண்கள்”

தென்றல் காற்றின் சுகம் கூட தோற்றுப்போகின்றது,
உன் நாசியிலிருந்து வரும் மூச்சுக்காற்றின் முன்னே;

ரோஜா மலரின் நிறமும் மென்மையும் தோற்றுப்போகின்றன,
உன் இதழ்களின் முன்னே;

கடவுள் படைத்த கவிதையே, உன்னைப் பார்த்தேன்...
என் உளறல்கள் கவிதைகள் ஆகின்றன.

வீணை இல்லாமல் உன் விரல்கள் காற்றில் மீட்டும்
காதல் இசையிலிருந்து...
மீண்டு வர இயலாமல் சிக்கித் தவிக்கின்றேன் கவிதையே...

என்அவள்

- இறக்காமம் ஜிப்ரி -

மல்லிகை மணக்கும்
அவள் வெளியில் வந்தால்

குயில்கள் கூட்டுக்குள் போய்
மயில்கள் ஆட மறந்து
வண்டுகள் ரீங்காரமிடும்
மலர்களுக்குள்ளும் சண்டை

குளிர்ந்த ஓடையில்
அவள் குளிக்க இறங்க
குதுகலத்துடன் - மீன் குஞ்சுகளும்
கொஞ்சிப் பார்க்கும்
அவள் மேனியை

மெல்லச் சிரிப்பாள்
அவள் கன்னக் குழிகளுக்குள்
சுகமாகப் படுத்துறங்கும்
என் நினைவுகள்

அவளைக் கண்ட நாள் முதல்
நான்...
அழகுக்குக் கூறும்
ஒத்த கருத்துச் சொல்
என் அவள்.

கார் மகளின் தேன் தமிழ்க் கவிகள்

- முறையூர் சந்திரசேகரன் சசீதரன், ஆரையம்பதி - 01

வானமகள் சங்கீத ஆலாபனை- நெஞ்சில்
வண்ணம் சிந்தும் எண்ணங்களின் ஆராதனை!
கான மழை காந்தர்வன் கலாவீணை! - கொஞ்சும்
காதம்பரி போலாகும் இராகமாலிகை!

தேவி மார்கழியாள் பாவினங்கள் பயின்றவளோ?
தேவதையால் விண்வெளியில் மிளிர்ந்தவளோ!
பாவியர் தம் கன்மனதும் நெகிழ்ந்திடுமோ!
பாலாற்றின் பைந்திரையாய்ப் பொழிந்திடுமோ?!

கார்காலம் கல்யாண ஊர்கோலமோ?
காந்தள் மலர்த்தேர் ஏறி உல்லாசமோ!
மார்கழியாள் வாசலிலே மணக்கோலமோ!
மனம் முழுதும் மங்கலத்தின் மலர்க்கோலமோ!

மின்னல் மணிமேகலையும் மெல்(ல)விழ
மெட்டிஒலி கொட்டி இசை நிதம் தவழ
சின்ன மணி முத்துக்களாய்ச் சிதறி விழ
சிருங்காரம் ஸ்ரீராகம் சிந்தை முழுதும்!

வான்மகள் வரையாது வழங்குதலால்
வையத்தின் திசை எலாம் வளம் கமழும்!
தேன்மகள் கார்மகள் புகழ் எழுதித்
தேன் தமிழ்ப் புலவர் கணம் மனம் மகிழும்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.