புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* விதண்டாவாதத்தின் உச்சக்கட்டம் இதுவோ?

ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சகல தரப்பினருமே இதனை வரவேற்றுள்ளனர். வழமையாக எதிர்ப்பை மட்டுமே காட்டி வரும் சிலர் இதிலும் தமது சாமர்த் தியத்தைக் காட்டவே செய்துள்ளனர். தேர்தல் இலக்காம், மக்களின் எதிர்பார்ப்பு தகர்த்தெறியப்பட்டுவிட்டதாம் என்று தமது இஷ்டப்படி தலைப்புச் செய்திகளைச் சில தமிழ் ஊடகங் கள் வெளியிடத் தவறவில்லை. ஏன் இந்தக் கொலை வெறி? என்ன செய்தால் இவர்கள் நல்லது எனக் கூறுவார்கள்? உண்மையில் இவ்விடயத்தில் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளை பாராட்டவே வேண்டும். அந்தளவிற்கு சகல பத்திரிகைகளுமே உண்மையை வரவேற்று எழுதியுள்ளன. எதனை எடுத்துக் கொண்டாலும் தமிழ் ஊடகங்கள் சிலவற்றுக்கு மட்டும் இன்னும் ஏன் இந்த விதண்டாவாதமோ தெரியவில்லை!

* நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

பொன்விழாக் கண்ட அந்தச் சஞ்சிகையின் ஆசிரியரான வயதான அந்த எழுத்தாளர், புதுக்கவிஞரின் சிங்கள நூல் வெளியீட்டு விழாவில் அப்படி உரையாற்றியது உண்மையே என்பது நிரூபணமாகியுள்ளது. அங்கிருந்த எமது நிருபர் ஊடாக செய்தி காது வழியாகக் கசிந்ததும் பலரும் அது உண்மையே எனவும், தவறானது எனவும் சாட்சி கூறினர். யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமையைநினைவு கூர்ந்து அந்த ஆத்திரத்தில் தான் பேசியதாக அவர் கூறுவதை ஏற்கவே முடியாது. அதுவும் அச்சமூகத்தைச் சேர்ந்த நன்கு தமிழ் தெரிந்த எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கூடியிருந்த மாபெரும் சபையில் பேசியமை மாபெரும் குற்றம். அதற்காக மறைவில் பேசலாம் என்பது பொருளல்ல. ஜனநாயக நாட்டில் பேச்சு உரிமை இருக்கிறதுதானே என வாதிடலாம். ஆனால் நெற்றிக் கண்ணைத் திறப்பினும் இது குற்றமே. வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு மூத்தவர்கள் முன்மாதிரியாகவெல்லோ இருக்க வேண்டும். நூலகத்தை எரித்த காலத்து ஆட்சியாளர்களை இவர் இழுத்துப் பேசுவதானால் அல்லது பேசியிருந்தால் அக்கட்சியை தெளிவாகக் குறிப்பிட்டு விழித்து அந்தச் சொல்லான கா.....ர்கள் எனப் பேசியிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அவ்வினத்தை இழுத்தமை மாபெரும் தவறு. இது வக்காளத்துக்கான எழுத்தல்ல. உண்மையான யதார்த்தம்.

பெருமழைக்குப் பின்

ஓய்ந்த தூவானம்

கல்முனை மேயர் விவகாரம் பெரும் கயிறிழுப்புக்குப் பின்னர் முடிவுக்கு வந்துவிட்டது. இது தலைமையின் சாணக்கியத்திற்கும், முன்னாள் மேயரின் விட்டுக்கொடுப்பிற்கும் அமைய வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துவிட்டது. நாளை முதல்வருக்கான ஆடையை புதியவர் உத்தியோகபூர்வமாக அணியவுள்ளார். வழமையாக நாட்டிலுள்ள சகல மாநகர சபைகளிலும் பிரதி மேயர் பதவி ஒன்று உள்ளது. அதற்கு ஒருவர் நியமிக்கப்படுவது வழமை. அதுவே நடைமுறை. எனக்குக் கிடைக்கும், உனக்குக் கிடைக்காது என அக்கட்சியின் மாநகர உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் முரண்படவும், போட்டுக் கொடுக்கவும் செய்கின்றனர். சாணக்கியத் தலைமை இதற்கும் ஒரு தீர்வு கண்டுவிட்டது. நாளை நடக்கும் வைபவத்தில் இது இடம்பெறலாம். கல்முனை மாநகர சபை வரலாற்றில் முதல்வர் ஆடை அணியாமல் அல்லது அணிய விடாமல் தடுக்கப்பட்டு ஒரு முதல்வர் இரண்டு வருடங்கள் ஆட்சி புரிந்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விடயம். அவர் இப்போது வெளிநாட்டில் தங்கியிருக்கிறார். கட்சி சாராமல் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று முதல்வரானதால் அவருக்கு அந்த நிலை. ஒருசில உள்ளூர் அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டதாக காதோடு காதாக ஒருவர் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.