புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

பாகிஸ்தானிய தலிபான் தலைவர் கொலை

பாகிஸ்தானிய தலிபான் தலைவர் கொலை

பாகிஸ்தான் தலிபான் இயக்க தலைவர் ஹக்கீமுல்லாஹ் மசூத் கடந்த வாரம் அமெரிக்க இரகசிய சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ‘டொரோன்’ என இங்கீலிஷ¤ பாஷையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உளவு பார்க்கும் விமானங்கள் பல தடவைகள் பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியை ஏற்றவுடன் விடுத்த அறிக்கையொன்றில் அமெரிக்காவினால நடத்தப்படும் இப்படியான தாக்குதல்களுக்கு முடிவுகாணப்படவேண்டும் என கூறியிருந்தார். இத்துடன் இவர் இந்த தாக்குதல்களையும் சாடினார்.

சமீபத்தில் வாஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் தானாக இயங்கும் இந்த ‘டொரோன்’ விமான தாக்குதல்கள் சம்பந்தமாகவே அதிகமான நேரம் இவர் ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன் பேசியதாக செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

நவாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு இந்த ஆட்கள் இல்லாமல் இயக்கப்படும் ‘டொரோன்’ விமான தாக்குதல்கள் ஒரு தலையிடியாகவே இருந்து வந்துள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்துவரும் உள்நாட்டு கலவரங்களுக்கு இந்த அமெரிக்க நடவடிக்கையும் பங்காளி என அதிகமான பாகிஸ்தானியர்கள் நம்புகின்றனர். இதனை ஆதரிப்பவராக பிரதமர் இருக்கின்றார்.

கொலை செய்யப்படுவதற்கு தக்க தருணத்தை அமெரிக்க அதிகாரிகள் தெரிவு செய்தனர். அரசாங்க அதிகாரிகளுடன் அடுத்தநாள் பேச்சுவார்த்தைகள் வடக்கு வளிகிஸ்தானில் இடம்பெற எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் சிவில் சேவை அதிகாரிகளும் பேச்சுவார்த் தைகளுக்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மூன்று பேர் அடங்கிய உயர் மட்ட அரச தரப்பு குழு வளிகிஸ்தானில் செல்ல ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் இருந்தன.

பாகிஸ்தானின் அமைதிக்காக பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அத்தனையும் பயனழிவு ஆகிவிட்டதாகவும் வீணாகிவிட்டதாகவும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கவலை தெரிவித்துள்ளனர்.

தான் செய்த இந்த பாரதூரமான தவறை இரஜாங்க திணைக்களம் தட்டிக்கழித்துவிட்டுள்ளது. தாலிபானுடன் சம்பந்தமான எல்ல பேச்சுவார்த்தைகளும் பாகிஸ்தானின் உள்விவகாரம் சம்பந்தப்பட்டதாகும் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். நன்றாக அமெரிக்க அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவிருந்த திகதியையும் இடத்தினையும் அறிந்திருந்தனர். அமெரிக்க அதிகாரிகள் அறியாமல் இருந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டு இருந்திருக்காது.

கொலை செய்யப்பட்ட பாகிஸ்தானிய தாரீக் -ஏ தலபானி பாகிஸ்தானிய தலைவர் மசூத் உடன் இடம் பெறவிருந்த பேச்சுவார்த்தைகள் நாட்டில் அமைதிக்கு வழியமைக்க முடிந்திருக்க கூடும் ஹக்கீமுல்லாஹ் மசூத் சில தினங்களுக்கு இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பி.பி.ஸி. பத்திரிகையாளருக்கு வழங்கியிருந்த பேட்டியில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பரவலாக பாகிஸ்தானிய பிரஜைகள் அமெரிக்காவில் இப்படியான தாக்குதல்களையும் மசூத் அவர்களின் கொலையினையும் கண்டித்துள்ளனர். பேச்சுவார்த்தைகளினால் பாகிஸ்தானுக்கு அமைதி கிடைக்க கூடும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற அச்சத்தினாலே பேச்சுவார்த்தைகளை தோல்வியடையச் செய்ய அமெரிக்கா இப்படியான தாக்குதலை ஏற்படுத்தி நாட்டில் கலவரத்தை உண்டுபண்ணுகிறது எனவும் பரவலாக பேசப்படுகின்றது.

பாகிஸ்தானின் வளிகிஸ்தான் பிராந்தியம் முற்றாக தலிபான் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. வட வளிகிஸ்தான், தென் வளிகிஸ்தான் என இது விளக்கப்பட்டுள்ளது. வட வளிகிஸ்தானில் தலிபான் இயக்கம் மும்முரமாக இயங்குவதாகவும் அல்-கய்தா இயக்கத்தின் நடவடிக்கைகள் இங்கு அதிகரித்து இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இங்கு உள்ள பிரான்ஷாஹ் என்ற பூர்வீக குலங்கள் கோத்திரங்களை கொண்ட இந்த இடத்திலேயே ஹக்கிமுல்லாஹ் மசூத் கொலை செய்யப்பட்டார். இவரது பாதுகாவலர் இருவரும் தாக்குதலினால் பலியாகினர்.

2009ம் ஆண்டு இவர் பாகிஸ்தானிய தலிபான் இயக்க தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார். இவரை பிடிக்கவோ கொலை செய்யவோ தகவல்களை வழங்குபவருக்கு அமெரிக்க அரசாங்கம் ஐந்துமில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்திருந்தது. 2007ம் ஆண்டு கொடூரமான முறையில் பாகிஸ்தானின் 300 இராணுவத்தினரை இவர் சிறைபிடித்தார். இதனைத் தொடர்ந்து இவரது பெயர் பரந்தளவில் அடிபடத்துவங்கியது. தனது முப்பதாவது வயதுகளில் இவர் உயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது தலிபான்களின் உயர் அரசியல் பீட அதிகாரிகள் தலைவர் ஒருவரை தேர்ந்து எடுக்கும் காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வாரத்துக்குள் புதிய தலைர் தெரிவு செய்யப்படும் எனப்படுகின்றது. கிடைக்கப் பெறுகின்ற செய்திகள் பிரகாரம் முன்னாள் உபதலைவர்களில் ஒருவரான கான் செய்யித் சஜ்னா புதிய தலைமைத்துவத்திற்கு தகுதியானவர் என கூறப்படுகின்றது.

இதற்கிடையே பாகிஸ்தான் தலிபான்க ளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் கொண்ட குழுக்களும் இயங்குகின்றன. இவை பொதுவாக தலிபானின் ஒற்றுமைக்கு பாதகமாக அமையாது. இருந்த போதிலும் கூட தலைவர் தெரிவு செய்யப்படும் சமயத்தில் சில கருத்து மோதல்கள் குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடும். கொலைசெய்யப்பட்ட தலைவர் வடக்கு வளிகிஸ்தான் வாசிகளுக்கு பக்கசார்பாக இயங்கினார் என்ற குற்றச் சாட்டு உள்ளது. எனவே இம்முறை தலிபான்கள் தெற்கு வளிகிஸ்தான் சார்பான தலைவர் ஒருவரை தெரிவு செய்யலாம்.

கொலை செய்யப்பட்ட ஹக்கிமுல்லாஹ் மசூத் அமெரிக்க விவகாரத்தில் கொலைசெய்யப்பட்ட உஸாமா பின் லாடனின் கொள்கையினையே கொண்டிருந்தார். தனது முதலாவதும் முக்கியமானதுமான எதிரிகளாக இவர் அமெரிக்காவையே சாடினர். இஸ்லாமிய உலகின் கலவரங்களுக்கு மூல காரணமாக அமெரிக்காவே உள்ளது என்பதில் அதிக விசுவாசம் கொண்டவர் இவர். இஸ்லா மியர்களினதும் இஸ்லாத்தின் எதிரியாகவும் அமெரிக்கா தொடர்ந்தும் இருக்கும் அதேவேளை தலிபான்களும் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளி நாடுகளின் எதிரியாகவே இருக்கும் என பீ.பி.ஸி செய்திக்கு கொலை செய்யப்பட முன்னர் இவர் கூறினார்.

பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள ராஜிய தொடர்புகள் பல விடயங்களை உள்ளடக்கியவையாகும். இதில் முக்கியமானது இராணுவ சம்பந்தப்பட்டதாகும், பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் அமெரிக்காவுக்கு நண்பனாக பாகிஸ்தான் உள்ளது. கூடுதலான இராணுவ தளபாடங்களை அது பெற்றுவருகின்றது. பெருமளவிலான டொலர்களையும் அது பெறுகின்றது. எனவே சில விடயங்களில் வாய்மூடி இருக்கவும் நேரிடுகின்றது.

பாகிஸ்தானின் வர்த்தக சமூகம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினை கண்டித்துள்ளது. நடைபெறவிருந்த சமாதான பேச்சுவார்த்தைகள் கூடுதலான வியாபார நடவடிக்கைகளுக்கு வழி செய்யும் என அவர்கள் நம்பியிருந்தனர்.

மக்களின் ஆவேஷம் இது தொடர்பாக பகிரங்கமாக வெளிவரும் என்பதனை நன்றாக அறிந்திருந்த பிரதமர் நவாஸ் ஷெரீஃப் காலம் தாமதிக்காது பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவரை உடனே அழைப்பித்து அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த எல்லா நடவடிக்கைகளும் பாகிஸ்தானில் எல்லா இடங்களிலும் தலிபான் வாதிகளுக்கு எந்தவிதத்திலோ ஏதோ ஒரு ஆதரவு இருப்பதனை காட்டுகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.