புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
கமரூன் வழி தவறிப் போயுள்ளார் முத்தையா முரளிதரன்

கமரூன் வழி தவறிப் போயுள்ளார் முத்தையா முரளிதரன்

செனல்4 தொலைக்காட்சி பேட்டியில் தெரிவிப்பு

யுத்தத்தின் இறுதி கட்டத்தில் வடக்கே நடந்ததாக கூறப்படும் காணாமல் போதல் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கூறியிருப்பது அவரது அறியாமையினால் நடந்துள்ளதாக புகழ்பெற்ற கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்துவரும் பிரித்தானியாவின் செனல் 04 தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்ட போதே முரளிதரன் இக் கருத்தினை வெளியிட்டார்.

ஒரு இலங்கை தமிழர் என்றவகையில் அவர் வாயால் இலங்கைக்கு எதிரான கருத்துக்களைப் பெற்று அவற்றை உலகறியச் செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே செனல் 04 முரளிதரனை பேட்டி கண்டது. ஆயினும் இலங்கையின் உண்மையான நிலை, மற்றும் யுத்தத்தின் பின் இந்நாட்டுத் தமிழ் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்ற செய்தி ஆகியவற்றை இதற்கு முன்பே உலகறியச் செய்திருந்த செனல் 04 தொலைக்காட்சி சேவைக்கு தகுந்த பதிலை பெற்றுக் கொடுத்தார்.

மேலும் தமது கருத்தை தெரிவித்த முரளிதரன்,

‘யுத்தம் என்பது இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெறும் மோதல். அதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உங்கள் பிரதமர் தெரிவித்த கருத்து முழுக்க முழுக்க அவர் உண்மை நிலையை அறியாததால் தெரிவித்தகருத்துக்களே. அவர் இதற்கு முன் யாழ் சென்றிருக்கவில்லை. அதுமட்டுமன்றி அவர் இதற்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்ததும் இல்லை. நான் சிறுவனாக இருந்த சமயம் அவர் இலங்கைக்கு வந்தாரா என்பதும் எனக்குத் தெரியாது. இருந்தும் அன்று அவர் யாழ் சென்றபோது 20-30 தாய்மார்கள் தமது நெருங்கிய உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு இவரைச் சந்திக்க வந்ததால் இவர் அவ்வாறு கூறி இருக்ககூடும். அவரிடம் யாரோ சொன்னதை கேட்டு வழிதவறியதாலேயே அவர் இவ்வாறு கூறி இருக்கின்றார் என முரளிதரன் செனல் 04 தொலைக்காட்சியிடம் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் தமது கருத்தை தெரிவித்த முரளிதரன் ‘நாம் ஏன் கடந்த காலத்தை திரும்பத் திரும்பத் தோண்ட வேண்டும்.’ கடந்த காலத்தை தோண்டி இல்லாத எதிரியை தேடிக்கொள்வதே உங்கள் முயற்சியாக இருக்கின்றது. ஆனால் எனது கொள்கை அதுவல்ல’ என்றார் முரளி. அதற்கு அப்படி என்றால் உங்களது கடந்த காலத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா? என்று செனல் 04 வினவியபோது,

‘எனக்கு எனது கடந்த காலம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நானும் ஒரு தமிழன். 1977ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக் கலவரத்தின் போது தனிப்பட்ட ரீதியில் எனக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. எமது வீட்டை தீ வைத்து எரித்தார்கள். எனக்கும் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது. ஆயினும் நான் அந்த கடந்த காலத்தை எண்ணி அலட்டிக்கொள்ள வில்லை. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அந்த கடந்த காலத்தை மறந்து, அதை மன்னித்துவிட்டு எதிர்காலத்தைபற்றி சிந்திப்பதே ஆகும்? என்றதுடன் “இயேசு நாதர் கூட ஒரு முறை இதையே கூறியிருக்கின்றார் தானே?” என்று செனல் 04 விடம் திருப்பிக் கேட்டார் முரளி.

யுத்தம் என்பது இரு தரப்பு மோதல். அதில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

வேறு எவரோ சொன்னதை வைத்தே கெமரூன் பேசுகின்றார்.

கடந்த காலத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாது எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயல்படுவோம்.


நான் சொன்னதையே மறைத்துவிட்டது செனல் 4

முத்தையா முரளிதரன்

செனல் 4 தொலைக்காட்சிக்காக தான் வழங்கிய 45 நிமிட நேர்காணலை 3 நிமிடங்களுக்கு குறைத்திருக்கும் அந் நிறுவனம் தாம் கூறியதை விட அவர்களுக்கு தேவையானதை மாத்திரம் ஒலிபரப்பி இருப்பதாகவும், அது ஒரு ஒழுக்கக் கேடான செயல் எனவும் தெரிவித்திருக்கின்றார் முரளிதரன்.

தமது அந்த ஊடக நிகழ்ச்சி பற்றி அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்தின் பின் அப்பகுதி மக்களின் நலனுக்காக இலங்கை அரசு முன்னெடுத்த சமூக அபிவிருத்திப் பணிகளைப் பற்றி மிக விரிவாகவும், தெளிவாகவும் நான் எடுத்துக் கூறினேன். நான் உண்மை நிலையினை அவர்களிடம் விளக்கிக் கூறினேன், யுத்தத்தினால் ஒரு தரப்பினர் மாத்திரம் கஷ்டங்களை அனுபவிக்கவில்லையென்றும், யுத்தம் இரு தரப்பினரையும் வெகுவாக பாதித்தது என்றும் நான் எடுத்துக் கூறினேன். இந்த யுத்தம் இருதரப்பினதும் பெற்றோர்களை கண்ணீர் சிந்தி, கதற வைத்தது என்றும், நான் வடக்கே சென்று என் கண்களால் கண்ட விடயங்களைப் பற்றியும் அவர்களிடம் கூறினேன் என்று தெரிவித்திருக்கும் முரளிதரன் தாமும் அங்கத்துவம் வகிக்கும் ‘குட்னஸ்’ அமைப்பின் ஊடாக யுத்தத்தின் பின் யுத்த பிரதேசத்தைச் சேர்ந்த 11,000 குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக 36 மாதங்களாக அடிப்படை தேவைகளை வழங்கி வந்ததாகவும், அதற்கென ‘குட்னஸ்’ அமைப்பு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாகவும் கூறுகின்றார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபுல மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததுடன், ‘குட்னஸ்’ அமைப்பு மூலம் அப் பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக 4000 மிதிவண்டிகளை அன்பளிப்பாக வழங்கியதாகவும் கூறும் அதேவேளை தமது செவ்வியின் முக்கியமானவற்றை வேண்டுமென்றே அப்புறப்படுத்தி இருக்கும் செனல் 4 தொலைக்காட்சி அவர்களுக்கு சாதகமான விடயங்களை மாத்திரம் ஒலிபரப்பி இருப்பதாக குற்றம்சாட்டுகின்றார்.

- ரவி ரத்னவேல் -

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.