புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
எங்கள் நாட்டில் கற்றறிந்த திறமைமிக்கவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உள்@ர் விசாரணையை நடுநிலையாக செய்வார்கள்

எங்கள் நாட்டில் கற்றறிந்த திறமைமிக்கவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உள்@ர் விசாரணையை நடுநிலையாக செய்வார்கள்

சர்வதேச விசாரணை அவசியமில்லை என்று டாக்டர் கிரிஸ் நொனிஸ் கூறுகிறார்

சி.என்.என். சர்வதேச செய்தித் தொலைக்காட்சி சேவையின் பிரெட் பிட்டிகென் இலங்கையின் லண்டனில் உள்ள உயர் ஸ்தானிகர் டாக்டர் கிரிஸ் நொனிஸ்ஸை பேட்டி கண்டார். கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் கனடா, மொரிசியஸ் மற்றும் இந்திய பிரதம மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை. இலங்கையின் 28 வருட பிரிவினைவாத தமிழ் ஆயுதக்குழுக்களுடன் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை சம்பந்தமாக சி.என்.என். நிருபர் கேள்விகளை எழுப்பினார்.

டாக்டர் கிரிஸ் நொனிஸ் அளித்த பதில்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதென்று தெரிவிக்கும் கண்டனக் குரல் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன். பயங்கரவாத யுத்தத்திற்கு பின்னணியில் இருந்து நிதி உதவி வழங்கியவர்கள் இப்போது பயங்கரவாதிகளின் சார்பில் ஊடகத்துறை யுத்தத்தை நடத்துகிறார்கள். படிப்படியாக இந்த பிரசார யுத்தம் பணம் குறையும் போது தானாகவே நின்றுவிடும்.

எங்கள் நாட்டில் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்தியது எங்களுக்கு இருக்கும் உரிமையாகும். வெளிநாட்டில் மேற்கொள்ளும் இலங்கைக்கு எதிராக போலிப் பிரசாரங்கள் இங்குள்ள உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை.

எங்கள் நாட்டுக்கு பெருமைத் தரக்கூடிய 2500 வருட நாகரிகம் எமக்குப் பின்னணியில் வலுவூட்டிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுபோன்ற சுதந்திர நாட்டின் மீது எவரும் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. எங்கள் நாட்டில் நன்கு கற்றறிந்த மக்கள் இருக்கிறார்கள். எமக்கு உள்ளூர் விசாரணைகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியும், திறமையும் இருக்கிறது.

பொதுநலவாய அமைப்பு 53 நாடுகள் தங்கள் விருப்பத்துடன் இணைந்துக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். இந்த அமைப்பில் முன்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த குடியேற்ற நாடுகள் முதலில் சேர்ந்து கொண்டன.

பொதுநலவாய அமைப்பின் சாசனத்தில் சுதந்திரமான ஜனநாயக சமூகங்களை அமைத்தல் மற்றும் அந்நாடுகளில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தி பொதுநலவாய நாடுகளின் மக்கள் அனைவரினதும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதே குறிக்கோளாக இருந்தது. இவ்வமைப்பின் அங்கத்துவ நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் ஈராண்டுக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு நாட்டில் கூடுவார்கள்.

சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை இலங்கையில் யுத்தக்குற்றச்சாட்டுகள் பற்றி நடத்த வேண்டுமென்று பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் இவ்வுச்சிமாநாட்டின் போது எமது வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்திருக்கிறார். இத்தகைய விசாரணைகள் எமக்கு அவசியமில்லை. எங்கள் நாட்டில் உள்ள கற்றறிந்த திறமைமிக்கவர்கள் எமது உள்ளூர் விசாரணையை வெற்றிகரமாக நடத்த முடியும். வெளிநாட்டு சர்வதேச விசாரணை அவசியமில்லை.

இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாத மூன்று நாடுகளின் தலைவர்கள் எங்கள் நாட்டின் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் வாழும் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர் எட்வட் மிலிபாண்ட், இலங்கையை பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியில் இருந்து அகற்றப் போவதாக தெரிவித்திருக்கும் கருத்து குழந்தைத் தனமானது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

பொதுநலவாய அமைப்பின் இரண்டு தூண்களான ஜனநாயகமும் அபிவிருத்தியும் எங்கள் நாட்டில் தழைத்தோங்கி வருகிறது. நம்நாட்டவர்கள் நல்ல பண்பாளர்கள் மற்றும் மனித நேயம் படைத்தவர்கள். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து எமது அரசாங்கம் இந்நாட்டு மக்களை விடுவித்து அவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தத்தில் சுமார் 70ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டம் 2008 செப்டம்பர் முதல் 2009 மே மாத நடுப்பகுதி வரை இடம்பெற்றது. இலங்கையின் வடபகுதியில் சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேர் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் சிக்கி வெளியேற முடியாத நிலையில் இருந்தார்கள்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் 2011ல் விடுத்த அறிக்கையில் அரசாங்கத் படையினர் பரந்த அடிப்படையில் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதனால் பல பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்ற போதிலும் இலங்கை அரசாங்கம் விடுத்த அறிக்கையில் அவ்விதம் பலர் கொல்லப்பட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்தக் கூற்றை அரச சார்பற்ற அமைப்புகளும் ஊர்ஜிதம் செய்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் குற்றமிழைத்தவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று திட்டவட்டமாக அறிவித்தார்.

நாம் எதனையும் மறைக்க விரும்பவில்லை. அப்பட்டமான உண்மையைத் தான் கூறுகிறோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையில் வலுவான நீதி பரிபலானத்துறை இருப்பதனால் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிவிட வாய்ப்பில்லை. ஒருவர் குற்றம் இழைத்திருந்தால் நிச்சயமாக தண்டிக்கப்படுவார் என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமமந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அந்நாட்டின் தமிழ் அரசியல் குழுக்களிடம் இருந்துவந்த அழுத்தம் காரணமாக கொழும்பு பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். இந்தியாவின் நிலைப்பாட்டை நாம் புரிந்து கொள்கிறோம்.

எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொதுநலவாய அமைப்பின் உயர்ந்த இலட்சியங்களை பேணிப் பாதுகாப்பதுடன் பேச்சு சுதந்திரத்தையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் பாதுகாப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

வட அயர்லாந்தில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இன்றைய பிரதம மந்திரியான டேவிட் கெமரூனுக்கு இலங்கை யுத்தக் குற்றங்களை புரிந்ததென்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது என்றும் குற்றம் சாட்டுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

யுத்தத்தின் பின்னர் அமைதியான முறையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அபிவிருத்திப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தொடர்ந்தும் துன்புறுத்துவதை பிரிட்டிஷ் பிரதம மந்திரி நிறுத்திக் கொள்வது அவசியமாகும்.

புத்த பெருமான் அனைவரும் மற்றவர்களின் குறைபாடுகளை தேடுவதற்கு பதில் ஒவ்வொருவரும் தான் செய்ததையும் செய்யாததையும் பற்றி சிந்திப்பது நல்லது என்ற நற்போதனை பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூனுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.