புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
உலகின் ஆளுமை மிக்க தலைவர்களில் றிசாத்

உலகின் ஆளுமை மிக்க தலைவர்களில் றிசாத்

500 முஸ்லிம் தலைவர்களுள் ஒருவராக தெரிவு

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் இலங்கையின் முதல் அரசியல் பிரதிநிதியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலகில் உள்ள 1.7 பில்லியன் முஸ்லிம் களில் பல்துறைகளில் அதிக செல்வாக்கை செலுத்தும் முதல் 500 முஸ்லிம்களின் தெரிவில் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீனும் தெரிவு செய்யப் பட்டுள்ளதாக ஜோர்தானை தலைமையகமாக கொண்டு இயங்கும் றோயல் இஸ்லாமிய கற்கை மையத்துக்கான ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 / 2014 ஆம் ஆண்டின் சிறந்த செல்வாக்குள்ள உலக நாடு களில் உள்ள முஸ்லிம்களை ஆய்வுக்குட்படுத் தியதன் போது இலங்கையில் இருந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகளாவிய ரீதியில் சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அkஸ் அல் சவுத், துபாய் முடிக்குரிய இளவரசர் ஜெனரல் சேக் முஹம்மத் பின் செய்த் அல் நஹ்யான், ஈரான் நாட்டின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா ஹஜ் செய்த் அல் கொமெய்னி, துருக்கிய பிரதமர் ரீசப் தையிப் ஏர்டன்க், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், டாக்டர் சாகிர் நாயக் போன்றவர்களும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் குறிப்பாக 2008 - 2009 களில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை பராமரித்து குறுகிய காலப்பகுதிக்குள் அவர்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுத்திருந்தமையினை சர்வதேசம் பாராட்டியிருந்தது.

அதேவேளை இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக தாம் வகிக்கும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சு பதவியினைக் கொண்டு வர்த்தக உலகில் இலங்கையின் சர்வதேச வர்த்தக உறவிற்கான புதிய அடித்தளத்தினை இட்டு வருகின்றமை சிலாகிக்க கூடியதொன்று.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இத்தரப்படுத்தல் வரிசையில் ஒரு அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

தகவல் - இர்ஷாத் றஹ்மத்துல்லா.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.