ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

ஐ.ம.சு.முவுக்கு மக்கள் பேராதரவு: மூன்று சபைகளிலும் வெற்றி உறுதி

எதிர்க்கட்சியில் மக்களுக்கு ஆர்வமில்லை;

ஐ.ம.சு.முவுக்கு மக்கள் பேராதரவு: மூன்று சபைகளிலும் வெற்றி உறுதி

தேர்தல் பிரசாரங்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை உறுதிசெய்துள்ளதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் சர்வதேச அழுத்தங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேர்தல் பிரசாரங்களில் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை யெனவும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னொரு போதும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார வேலைதிட்டங்கள் மக்கள் ஆதரவோடு மிகவும் அமர்க்களமாக

முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போட்டியிடுமளவுக்கு எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் காண்பதற்கில்லை. தாம் சென்ற இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு அலுவலகம் அல்லது ஒரு பச்சைக் கொடியைக் கூடகாண முடியவில்லை. அந்தளவிற்கு அவர்களது தேர்தல் ஆர்வம் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

தாம் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எமக்கு கிடைத்த மக்கள் ஆதரவு, அவர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் இதுவரை காணாத அமோக வெற்றி இந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைக்கப்போகிறது என்பதனை அறிந்துக்கொள்ள முடிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தான் அந்த கட்சியையே இல்லாமல் செய்துள்ளார் என்பதனை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். அரசியல் திட்ட மின்மை, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக மக்களுக்கும் அந்தக் கட்சிகள் மீதுள்ள ஆர்வம் குறைவடைந்துள்ளது. ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலுள்ள கிராமத்திற்கு கிராமம் மக்கள் எமது ஜனாதிபதியவர்களுடன் இருப்பதனை நாம் நேரடி அனுபவமாகவே அறிந்துக் கொண்டோம்.

மூன்று மாகாண சபைகளிலும் பத்து மாவட்டங்களில் எதிர்வரும் 21ஆம் திகதி மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் அங்கம் வகிக்கின்றனர். நாட்டின் 1/3பகுதி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியவர்களுக்கும் கிடைக்கும் அமோக வெற்றியானது தேசிய ரீதியாக ஒரு அரசியல் உண்மையை நிலைநாட்டுவது மாத்திரமின்றி சர்வதேச ரீதியாக நாட்டிற்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தத்திற்கு தகுந்த பதில டிக்கொடுக்குமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி