ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

அமைச்சர் ஆறுமுகன் ஜனாதிபதியிடம் விடுத்த இரு வேண்டுகோள்கள்

அமைச்சர் ஆறுமுகன் ஜனாதிபதியிடம் விடுத்த இரு வேண்டுகோள்கள்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு வசதிகளையும் தோட்ட மக்களைப் பாதிக்கும் மதுபானசாலைகளை மூடிவிடும் நடவடிக்கையையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தலவாக்கலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட அமைச்சர்கள் இ.தொ.கா. தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உட்பட பிரதியமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்: ஜனாதிபதி அவர்கள் எம்மத்தியில் வருகை தந்திருப்பது அவருக்கும் எமக்குமுள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்துகிறது. மலையக இந்திய வம்சாவளி மக்களுடன் அரசாங்கம் கைகோர்த்து நிற்பதைக் காட்டுகிறது.

சிலர் என்னை எதிர்வரும் 22ம் திகதி இந்தியாவிற்குள் தூக்கி வீசப்போவதாகக் கூறி வருகிறார்கள். அவர்களுக்குப் பதில் கூறுவதாகவே இந்தக் கூட்டம் அமைந்துள்ளது.

நான் ஜனாதிபதியிடம் இரண்டு வேண்டுகோள்களை முன்வைத்துள்ளேன். அதிலொன்று தோட்ட மக்களுக்கும் கிராமிய முறை வீட்டு வசதிகள் மற்றும் தோட்டப்புறங்களிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிடச் செய்வது, அதற்கு ஜனாதிபதியின் உறுதுணையை நாடுகிறேன்.

மகளிர் என்னிடம் தொடர்ந்து இந்த முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். நானும் இது பற்றி ஏற்கனவே ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளேன். இன்று தோட்ட மக்களே நேரடியாக கைகளை உயர்த்தி அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

லயன்களுக்குப் பதிலாக கிராமங்கள் அமைக்கப்பட்டால்தான் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களைப்போல் மலையக மக்கள் இணைந்து வாழ்ந்து சரி சமமான வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையுண்டு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தோட்ட மக்களின் லயன் பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி