ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அத்தனை சேவைகளையும் மலையகத்துக்கு தொடர்ந்தும் வழங்கத் தயார்

அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அத்தனை சேவைகளையும் மலையகத்துக்கு தொடர்ந்தும் வழங்கத் தயார்

தேயிலை தோட்டங்களில் மீள் நடுகை இன்றேல் அதனை அரசு மேற்கொள்ள வேண்டிவரும்: தலவாக்கலையில் ஜனாதிபதி

தலவாக்கலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், நோட்டன் பிரிஜ் தினகரன் நிருபர்

மலையக மக்களுக்காக அமைச்சர் தொண்டமான் கேட்டுக்கொண்ட அத்தனையையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்போம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

லயன் காம்பிராக்களுக்குப் பதிலாக தனி வீடுகளை அமைக்கத் தீர்மானித்துள்ளதுடன், தோட்டப் புறங்களிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிடுவது பற்றியும் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மலையகத் தொழிலாளர்களின் குடியிருப்புப் பிரச்சினை மற்றும் தோட்டப்புற மதுபான விற்பனை நிலையங்களை மூடுவது ஆகிய இரண்டு வேண்டுகோள்களை தம்மிடம் முன்வைத்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் மனைவிமாரும், தாய்மாரும் மதுபான நிலையங்களை மூடிவிடுமாறு தம்மிடம் முறைப்பாடுகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் தலவாக்கலை நகரில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமான், நிமல் சிறிபால டி சில்வா, பிரதியமைச்சர்கள் முத்துசிவலிங்கம், பிரேமலால் ஜயசேகர, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட மாகாண சபை அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலவாக்கலை நகருக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு மலையக மக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தமிழ் கலாசார முறைப்படியும் மலைய கத்துக்கே உரித்தான கலாசார அம்சங்க ளுடனும் ஜனாதிபதி அவர்கள் வரவேற் கப்பட்டதுடன் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் ஜனாதிபதிக்கு ஆளுயர மலர் மாலையொன்றை அணி வித்து கெளரவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய போது,

தலவாக்கலையில் அணி திரண்டிருக்கும் மாபெரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது நுவரெலியாவில் வெற்றிலைக்கு மகத்தான வெற்றி கிடைப்பது உறுதியாகி விட்டது.

அரசாங்கம் 2005 தொடக்கம் தோட்ட மக்களுக்காக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கேட்ட அனைத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். தோட்டத் தொழிலாளர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் போதியளவு ஆசிரியர்களை நியமித்துள்ளதுடன் பாடசாலைகளையும் ஏனைய வசதிகளையும் வழங்கியுள்ளோம். அத்துடன், சித்தியடைந்துள்ள சகல பட்டதாரிகளுக்கும் அரசாங்கத் துறையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

நாம் அத்தோடு நின்று விடவில்லை. தோட்டப் பகுதிகளிலுள்ள பாதைகள் புனரமைக்கப்பட்டு கொங்கிரீட் மற்றும் காபட் போடப்பட்டுள்ளன. தோட்டக் கம்பனிக்காரர்கள் செய்ய வேண்டியதையும் மக்களுக்காக நாமே முன்வந்து மேற்கொண் டோம். இந்த விடயத்தில் எவரையும் நாம் பார்த்திருக்காமல் மக்களுக்கான சேவையாகக் கருதி நாம் அதனைச் செய்தோம்.

தோட்டப் புறங்களிலிருந்து ஆஸ்பத்தி ரிகளை அரசாங்கத்திற்கு சுவீகரித்து அவற்றை சகல வசதிகளுடன் தரமுயர்த்தி யுள்ளோம். அத்துடன் தோட்ட மக்களின் குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு முன்னரும் இது போன்ற செயற்பாடுகளை நாம் படிப்படியாக நடைமுறைப்படுத்தியே வந்துள்ளோம். அரசாங்கத்தினால் வழங்கக் கூடிய அத்தனை சேவைகளையும் நாம் தொடர்ந்தும் வழங்கத் தயாராகவுள்ளோம்.

சில தோட்டங்களில் தேயிலை மரங்கள் அழிந்து மீள்நடுகை இல்லாமல் காணிகள் தரிசு நிலங்களாக உள்ளன. கம்பனிகள் இவ்வாறு செயற்படும் போது அதனால் தொழிலின்றி பாதிக்கப்படுபவர்கள் தோட்டத் தொழிலாளர்களே, தொழிற் சங்கங்கள் தேயிலை மீள் நடுகை தொட ர்பில் கம்பனிகளுக்கு அறிவுறுத்துவது முக்கியமாகும். இன்றேல் அரசாங்கம் இதனை மேற்கொள்ள வேண்டி வரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி; மலையக மக்களும் இந்த நாட்டின் உயிர் நாடிகளே. இதனை எவரும் மறுக்க முடியாது.

தோட்டத் தொழிலாளர்கள் எப்போதும் இந்த நிலையிலேயே இருக்க முடியாது. நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே எமது விருப்பம். மென்மேலும் வசதிகளைப் பெற வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும். அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். பிள்ளைகள்தான் உங்களதும் எங்களதும் நாட்டினதும் செல்வங்கள்.

லயன் காம்பரா வாழ்க்கை இனி வேண்டாம். அந்த யுகத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம். மலையக மக்களுக்கான வீடு, மின்சாரம், கல்வி, வீதிகள் உட்பட சகல வசதிகளையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். தொடர்ந்தும் வசதிகளை ஏற்படுத்தித் தருவோம்.

தோட்டப் பகுதிகளில் சாராயத் தவறணைகள் வேண்டாம் என்பவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்க முடியும். இப்பகுதியில் சிறுசிறு பிரச்சினைகள் இன்னும் உள்ளன. அவற்றை நாம் தீர்த்து வைப்போம்.

இந்த நாட்டில் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும். சுயகெளரவத்தோடு ஒரே நாடு, ஒரே மக்கள், சம வசதிகள் என்பதே எமது ஒரே நோக்கம். அதுதான் எமது வழி.

உங்கள் பிரதேசம் முன்னேற்றமடை வதோடு நீங்கள் மென்மேலும் வசதிகளைப் பெற வேண்டும். உங்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலம் நிச்சயம்.

நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்களைப் பாதுகாப்பேன். அது எனது பொறுப்பும் கடமையுமாகும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெற்றிலைச் சின்னத்தை வெற்றி பெறச் செய்வோம். வெற்றிலையின் வெற்றி உங்கள் வெற்றி இந்த நாட்டின் வெற்றி, உங்கள் பிள்ளைகளின் வெற்றி, வெற்றியின் சின்னம் வெற்றிலைச் சின்னம், அதனை வெற்றி பெறச் செய்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி