ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

ஒரே மேடையில் அமர்ந்தும் பேசிக் கொள்ளாத அத்வானி, மோடி

ஒரே மேடையில் அமர்ந்தும் பேசிக் கொள்ளாத அத்வானி, மோடி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மற்றும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி ஆகியோருக்கு இடையிலான பனிப் போர் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

டில்லியில் பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட ராம் ஜெத்மலானியின் 90 வதுபிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருவரும், ஒரு வார்த்தைக் கூட பேசிக் கொள்ளாமல் நிகழ்ச்சி முழுவதும் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் வெளியேறினர்.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்த அத்வானி, கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தார்.

கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் கட்சியை வழிநடத்தும் முறை தனக்கு வேதனை அளிப்பதாக அத்வானி கூறியிருந்தார். எனினும் அத்வானியின் தொடர் எதிர்ப்பை மீறி பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மோடியிடம் பேசுவதை தவிர்த்த அத்வானி, மோடி விவகாரம் குறித்து யாரும் தன்னிடம் பேச வர வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கிடம் தன்னுடைய அதிருப்தி குறித்து அத்வானி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி