ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

சுன்னாகம் சிவபூதராயர் ஆலய வரலாற்று நூல் வெளியீடு

சுன்னாகம் சிவபூதராயர் ஆலய வரலாற்று நூல் வெளியீடு

சுன்னாகம் தெற்கில் அமைதியும் இயற்கை வனப்பும் நிறைந்த சூழலில் சிவபூதராயர் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு கொட்டிலில் அமைந்திருந்த கோயில் இன்று மணிக்கூட்டுக் கோபுரம், வசந்த மண்டபம் அடங்கலாக பரிவார மூர்த்திகள் சகிதம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட புனருத்தாரணப் பணிகள் மற்றும் அடியார்கள், தனவந்தர்கள், புலம்பெயர்ந்த பக்தர்கள் ஆகியோரின் நிதி உதவி காரணமாக இது சாத்தியப்பட்டுள்ளது.

எல்லோரது விருப்பத்திற்கும் வேண்டுகோளுக்கும் அமைய பல ஆண்டு தேடுதல், ஆராய்ச்சியின் விளைவாக ஆலயத்தின் நீண்ட வரலாற்றை தர்மகர்த்தா சபையினர் இம் மாதம் (செப்டெம்பர்) ஆறாம் திகதி, வருடாந்த அலங்கார உற்சவ பூர்த்தியன்று வெளியிட்டுள்ளனர்.

நூலின் முகப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஒரு கிராமத்தின் தோற்றம், வளர்ச்சி, என்பனவற்றை ஆவணப்படுத்தி வைப்பது பிற்காலச் சந்ததியினருக்குப் பேருதவியாகவிருக்கும்.

அது அக்கிராமத்தின் சமூக பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வகையில் சுன்னாகம் எனும் கிராமமும் பல வகையிலும் பெருமைக்குரியதாகும். இது பெரும் புலவர்கள், அறிஞர்கள் வாழ்ந்த கிராமமாகும்.

இக்கிராமத்தின் தென் பகுதி சுன்னாகம் தெற்கு என அழைக்கப்படுகிறது. முருகேச பண்டிதர் பிறந்த இடமும், சிவயோக சுவாமிகள் எனும் யோகர் சுவாமிகளது மூதாதையர் வாழ்ந்த கிராமமும் இதுவாகும். இங்குள்ள ஆலயங்களில் முக்கியமானவை சிவபூதராயர் கோயிலும் கதிரமலைச் சிவன் கோயிலுமாகும்.

வரலாறு

சிவபூதராயர் கோயிலின் தோற்றம் சுமார் நானூற்று ஐம்பது வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரும் பாலும் விவசாய மக்களால் தம்மைப் பாதுகாக்கும் குல தெய்வமாக வழிபட்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கிராமங்களான மயிலிட்டி, பன்னாலை, புன்னாலைக் கட்டுவன், நீர்வேலி, உரும்பிராய், கரந்தன், கோண்டாவில், சுன்னாம் கிழக்கு, இருபாலை, நுணாவில் ஆகியவற்றில் சிவபூதராயர் வழிபாடு இருந்து வந்துள்ளதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லூரை ஆண்ட சங்கிலியன் மன்னனாலும், பூதராயர் வழிபாடு செய்யப்பட்டுள்ளது.

பூதராயர் கோயிலின் தொடக்கம் இருபாலையைச் சேர்ந்த பூதப்பிள்ளை என்பவர் சுன்னாகம் தெற்கில் திருமணம் செய்து குடியேறியதுடன் சம்பந்தப்பட்டது. அவர் தாம் வழிபட்டு வந்த மண் விக்கிரகத்தை எடுத்து வந்து நாற்சார் வீட்டின் ஒரு மூலையில் வைத்து வழிபட்டார். அவரும் குடும்பத்தினரும் வடக்குப் பக்கமாக பிறிதொரு இடத்தில் குடியேறியதனால் பூசை செய்வது தடைப்பட்டது.

இதனால் எஸ். வேதாரணியம் என்பவர் தமது காணியில் கொட்டில் அமைத்து மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்திற்குப் பூஜை செய்து வந்தார். சிறிது காலத்தின் பின் கல்லினால் மடாலயம் அமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. அன்று தொடக்கம் நித்திய பூஜை செய்ய பிராமணர்கள் அமர்த்தப்பட்டார்கள்.

காலப்போக்கில் வே. சீனிவாசகம் என்பவர் 1935 ஆம் ஆண்டு ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று கும்பாபிஷேகம் செய்து வைத்தார். வேதாரணியர் பரம்பரையினரின் அரிய முயற்சி காரணமாக 1936 இல் கோயில் பரிபாலன சபை அமைக்கப்பட்டது. பல வருட கால இடைவெளிக்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அண்மையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக உள்ளூர், வெளியூர் மற்றும் புலம்பெயர்ந்த பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரி சுவாமிகள் அருளாசி உரை வழங்கி சிறப்பித்தார்.

கோயிலின் சில அற்புதங்கள்

சிவபூதராயர் பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்ட காலம் தொட்டு திருவருளால் அற்புதங்கள் நடைபெற்று வந்துள்ளது. இதனை அடியார்கள், பூசகர்கள் மற்றும் பரிபாலன சபை உறுப்பினர்கள் வாயிலாக அறிய முடிந்துள்ளது. ஒருமுறை இந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள வாழைத் தோட்டத்தில் கள்வர் புகுந்து வாழைக் குலையை திருடிவிட்டார்கள். அவர்கள் வெளியேற முடியாதவாறு கண்கள் மறைக்கப்பட்டு, தோட்ட உரிமையாளரிடம் கனவில் தோன்றி திருடர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்காது வாழைக்குலையைப் பெறும்படி கூறப்பட்டது.

மேலும் ஊஞ்சல் பாட்டில் கூறப்படும் மூத்த தாய் இளைய தாய் என்னும் இரு இளம் பெண்கள் தொடர்பாகவும் ஒரு கதையுண்டு.

கோயிலுக்கு அருகில் மரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் காணாமற் போனார்கள். பெற்றோர்கள் கவலையுற்றிருக்க கனவில் தோன்றி கவலைப்பட வேண்டாம். நான் அவர்களை எடுத்துவிட்டேன், இரு பெண் பிள்ளைகள் பிறப்பார்கள் என்று கூறப்பட்டது.

அவ்வாறு அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் பிறந்ததாக சொல்லப்படுகிறது

சி. நவரத்தினம் என்பவர் கிளிநொச்சி சென்றபோது வழிதவறியதனால் சிவபூதராயரை நினைத்து வணங்க ஒருவர் விளக்குடன் முன்சென்று வழிகாட்டியது போன்றன அற்புதங்களில் குறிப்பிடத்தக்கவை.

‘உத்தமனார் வேண்டுவது உன் உள்ளக் கமலம்’ என்ற அருள் மொழிக்கமைய நாம் உள்ளன்போடு இறைவனை வழிபட்டால் நிச்சயம் விமோசனம் கிடைக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி