ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

வடக்கு மக்களின் மனதை வெல்வதற்கு மாகாணசபை தேர்தல் சிறந்த அடித்தளம்

வடக்கு மக்களின் மனதை வெல்வதற்கு மாகாணசபை தேர்தல் சிறந்த அடித்தளம்

* மலையகத் தமிழர்கள் ஜனாதிபதிக்கு வழங்கும் பேராதரவு சர்வதேசத்திற்கு தக்க பாடம் புகட்டும்

* தமிழ்க்கூட்டமைப்பு தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு என்ன விளக்கம் கொடுத்தாலும் நாட்டை பிளவுபடுத்துவதாகவே நாம் கருதுகிறோம் - அமைச்சர் நிமல்

வடக்கிலுள்ள மக்கள் மனதை வெல்வதற்கு இந்த மாகாண சபைத் தேர்தல் ஓர் ஆரம்பம் மாத்திரமேயென அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சிங்கள இராஜ்யமென்பது ஒரு இராட்சத இராஜ்ஜியமாகுமென கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பிரபாகரனினால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களின் மனதில் ஒரு நாளில் இடம்பிடிப்பதென்பது இயலாத காரியம். அதற்கு இந்த மாகாண சபைத் தேர்தல் ஆரம்பத்தினை எமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.

இதன் மூலம் வடக்கைச் சேர்ந்த மக்கள் எம்மையும் எமது வேலைத் திட்டங்களையும் படிப்படியாக புரிந்து கொள்வார்களென்ற நம்பிக்கை எமக்கு உண்டு எனவும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு அவருக்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.

அதுவே எமக்கு பாரிய பலமாக அமைந்துள்ளது. மக்களின் மனதில் இடம்பிடிப்பது தான் எமது முக்கிய இலக்கேயன்றி வட மாகாணத்திலிருந்து எத்தனை எம். பிக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவாகின்றனர் என்பது அல்ல.

முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் நோக்கத்தை தெளிவாக விளங்கி கொண்டுள்ளனர். அவர்களும் எம்முடன் இணைந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் சாதாரண மக்கள் மனதிலும் நிச்சயமாக எமக்கு இடமுண்டு. ஆனால் அது ஒரு இரவில் அடையக் கூடிய விடயமல்ல எனவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமது விஞ்ஞாபனத்துக்கு எத்தனை விளக்கங்களைக் கொடுத்தாலும் அது நாட்டை இரண்டாக பிளவுபடுத்தக் கூடியதாகவே நாம் கருதுகின்றோம்.

தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேட்பாளர்கள் தமது வாய்க்கு வந்தவற்றைக் கூறி பிரசாரம் செய்வது தான் இயல்பு. கருத்துச் சுதந்திரமுள்ள எமது நாட்டில் அதனை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் மக்கள் தான் இதில் உண்மை எது? நடைமுறைக்கு சாத்தியமானது எது? என்பதனை பிரித்தறிந்து தீர்மானம் எடுக்க முன்வர வேண்டும்.

சர்வதேசத்தின் அழுத்தங்களின் கீழ் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் இன, மத, பேதமின்றி நாட்டின் அபிவிருத்தி மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குறிக்கோளாக கொண்டு செயற்படுகிறது.

என்பதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கமென்ற வகையில் சரியான நேரத்தில் அவசியமான தீர்மானத்தை நாம் எடுப்போம். அதற்காக இப்பொழுது முதலே குழப்பமடையத் தேவையில்லை. எதற்குமொரு எல்லையுண்டு. எல்லை மீறினால் அதற்கான மருந்தும் எம்மிடம் உண்டெனவும் அமைச்சர் நிமல் இதன்போது சூளுரைத்தார்.

மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அமோக வெற்றி கிடைக்குமென்பது உறுதி. அவர்கள் தனியான மலைநாட்டு கேட்கவில்லை. தனியாட்சி பெற்றுக்கொள்வதல்ல அவர்களது குறிக்கோள், மாறாக தமது முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் மட்டுமே கருத்திற் கொண்டு எம்மை வெற்றியடையச் செய்வதில் ஆர்வமாக செயற்படுகின்றனர்.

கண்டி, மாத்தளை மற்றும் நுவரேலியாவில் ஜனாதிபதியவர்களுக்கு அமோக வெற்றி கிடைப்பது உறுதி. மலைநாட்டிலுள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கும் ஆதரவு, அரசாங்கத்திற்கு எதிராக சதி முயற்சிகளை முன்னெடுக்கும் சர்வதேசத்திற்கு பதிலடியாக அமையுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி