ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

சிரியாவின் விடயம் ஈரானுக்கு சிறந்த பாடம்: ஜனாதிபதி ஒபாமா

சிரியாவின் விடயம் ஈரானுக்கு சிறந்த பாடம்: ஜனாதிபதி ஒபாமா

பலமான அழுத்தம், நெருக்குதல்கள் இராணுவ நடவடிக்கையை விட சிறந்தது

அணு ஆயுதம் தொடர்பான சர்ச்சைகள், முரண்பாடுகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதில் சிரியாவின் விடயம் ஈரானுக்கு நல்லதொரு பாடம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளதுடன் ஈரானின் அணு விவகாரம் "மிகத் தூரத்திலுள்ள பாரிய விடயமெனவும்" குறிப்பிட்டுள்ளார். சிரியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்காததையிட்டு ஈரான் செளகரிகமாக இருக்கக் கூடாது.

இராணுவ நடவடிக்கைகளை விட மிகப் பலமான அழுத்தங்களும், நெருக்குதல்களும் சில சர்ச்சைகளை தீர்த்துக்கொள்ள சிறந்த வழி எனத்தான் நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர் களுக்குமிடையிலான மோதலில் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்து நானூறு பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

ஐ.நா. நிபுணர்கள் குழு சிரியா சென்று தாக்குதல் நடந்த பிரதேசத்தில் சோதனை நடத்தியது. இக்குழுவிற்கு சுவிடனைச் சேர்ந்த அதிகாரி தலைமை தாங்கினார். இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கைகள் ஐ.நா. செயலாளர் பான்கீ மூனிடம் நேற்றுத் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சிரியாவில் இரசாயன தாக்குதல் நடந்துள்ளதென்பதை இந்த அறிக்கை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில் சிரியாவிலுள்ள இரசாயன ஆயுதங்கள், அணு உலைகள் தொடர்பான பட்டியல்கள் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டுமென அமெரிக்காவும், ரசியாவும் கூட்டாக கோரிக்கை விடுத்தன. பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்படு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டே ஈரானுக்கும் இவ்விடயம் ஒரு பாடம் என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

யுரோனியத்தை செறிவூட்டி ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. நீண்டகாலமாக நிலவும் இக்குற்றச்சாட்டால் ஈரான் மீது பல தடவைகள் அமெரிக்கா போருக்கு தயாராகி பின்னர் காலம் கடத்தப்பட்டது.

இப்போது ஈரானின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரொஹானி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோர் இவ்விடயம் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி