ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

யாழ்ப்பாணத்தில் 700 ஆவது நணசல அறிவாலயம் பருத்தித்துறையில் திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் 700 ஆவது நணசல அறிவாலயம் பருத்தித்துறையில் திறந்து வைப்பு

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினர் யாழ்ப்பாணத்தில் 41 நணசல அறிவாலய நிலையங்களைத் திறக்கும் திட்டம் தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சர் நேற்றும், இன்றுமாக இரண்டு தினங்களில் யாழ்ப்பாணத்தில் 20 நனசல அறிவாலய நிலையங்களைத் திறந்து வைக்கிறார். இதன் ஆரம்பகட்டமாக பருத்தித்துறையில் கொட்டடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் முதலாவது அறிவாலய நிலையத்தைத் திறந்து வைத்தார். இதில் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,

ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ அவர்கள் பிரதமராக இருந்த போது முன்னெடுக்கப்பட்ட கருதுகோலுக்கு அமைய நாட்டு மக்களின் தகவல் தொழில்நுட்பத்திறனை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த அறிவாலய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இன, மத மொழி பாராமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்குவதே ஜனாதிபதியின் ஒரே எதிர்பார்ப்பாகும். அதன் முக்கிய கட்டமாக யாழ்ப்பாண மக்களுக்கும் நணசல அறிவாலய தகவல் தொழிநுட்ப மையங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது நாட்டு மக்களின் தொழில்நுட்ப அறிவு 5 வீதமாகவே இருந்தது. அது தற்போது 30 வீதமாக அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் 70 வீதமானவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொ டுப்பதே ஜனாதிபதியின் இலக்காக உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அறிவாலயங்கள் 20 இலும் கணனி, அச்சியந்திரம், இணையத்தள வசதி என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளிலிருக்கும் பாடசாலைகளை மையப்படுத்தியே இந்த நிலையங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இதன்படி இலங்கை பூராகவும் 699 நணசல அறிவகங்கள் திறக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் 700வது நணசல கூடமாக பருத்தித்துறை கொட்டடி மாதர்சங்கத்தில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்ட நனசல அறிவகத் திட்டத்தின் ஒரு அறிவக நிலையத்துக்கு தலா 1 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அறிவக நிலையங்களைத் திறந்துவைக்கும் நிகழ்வில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி பிரசாத் தேசப்பிரியவும் பங்கேற்றுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி