ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221

உட்கட்சி பூசல்களால் பலவீனமடைந்துள்ள கூட்டமைப்பு வடபகுதியை வளமாக்குமா?

உட்கட்சி பூசல்களால் பலவீனமடைந்துள்ள கூட்டமைப்பு வடபகுதியை வளமாக்குமா?

தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்காக இலங்கை அரசாங்கத்துடன் போராடுவதற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக போட்டியிடுகிறோம் என்று மார்பு தட்டிக் கொண்டு பொது மேடைகளில் உரை நிகழ்த்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தங்களு க்கிடையில் பெரும் அதிகாரப் பலப்பரீட்சையில் தற்போது ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

மாவை சேனாதிராஜா போன்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற அரசியலில் பல்லாண்டு காலம் இருந்துவரும் தலைவர்களும் தங்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் பிரதம வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதமை குறித்து பலத்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக வும் அதனால், அவர்கள் பகிரங்கமாக முதலமைச்சர் பதவிக்கு போட்டி யிடும் சி.வி. விக்னேஸ்வரனை ஆதரிப்பதைப் போல் இருந்தாலும் திரை மறைவில் அவரைவிட மற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு இப்போது பெருமுயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இன்றைய நிலைமை குறித்து அபிப்பிராயம் தெரிவித்த தமிழ்ப் புத்திஜீவிகளும் அரசியல் அவதானிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக்குறியாக இருக்கும் இவ்வேளையில் அந்தக் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்களும் பகைமை உணர்வும் அதிகரித்திருப்பதனால் கட்சி மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் இரண்டு மூன்றாக பிளவடைந்துவிடும் என்று ஹேஷ்யம் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதனாலோ என்னவோ யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரிப் பதற்கான பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு குழுமியிருந்த மக்களிடம் யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், கல்விமான்கள், பண்பட்ட அரசியல்வாதிகள், சமூகத்தலை வர்கள் இல்லையா? என்று கேள்வி எழுப்பி, அதற்கு தாமே யாழ்ப்பா ணத்தில் பெருமளவு அரசியல் அனுபவம் உடையவர்களும், புத்திஜீவிகளும், சமூகத்தலைவர்களும் இருக்கும் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏன் கொழும்பில் இருந்து முதலமைச்சர்

வேட்பாளர் பதவிக்கு யாழ்ப்பாணத்தைப் பற்றியே அறியாதிருக்கும் கொழும்பி லேயே வாழ்ந்து வந்த சி.வி. விக்னேஸ்வரனை நியமித்தது என்று கூறினார்.

இவ்விதம் வடபகுதிக்கு பொருத்தமற்ற ஒருவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்களது முதன்மை வேட்பாளராக தெரிவு செய்திருப்பதனால் அவர் வடபகுதி மக்களின் உள் உணர்வுகளையும், அபிலாஷைகளையும் சரியாக புரிந்து கொள்ளாமல் கொழும்பில் இருப்பவர்கள் சிந்திப்பதைப் போன்று சிந்தித்து செயற்பட்டால் வடபகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை சம்பந்தப்பட்ட முதன்மை வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவரால் அம்மக்களின் துயரத்தை துடைக்க முடியாமல் போய்விடும் என்றும் புத்திஜீவிகளும், அரசியல் அவதானிகளும் கூறுகிறார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேரளவில் சாத்வீகமாக அரசியலை நடத்துவதாக பாசாங்கு செய்தாலும் கூட்டமைப்புக்குள் சாதி, குல வேறுபாடுகள் தழைத்தோங்கி இருப்பதனால் வடக்கில் தாழ்த்தப்பட்ட தமிழர்களை கூட்டமைப்பு ஓரங்கட்டுகிறதென்று பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதலைவர் மாணிக்கம் லோகசிங்கம் ஜனாதிபதியிடம் வேதனையுடன் தெரிவித்து அன்னாரது முன்னிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார்.

வடக்கில் தாழ்த்தப்பட்ட தமிழர் என்பதனால் பெயர்ப்பட்டியலில் இருந்து தான் புறக்கணிக்கப்படுவேன் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்ததனால் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டேன் என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் ஓரிருவரே தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் அவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளையில் வடமாகாணத்தின் மேம்பாட்டுக்காக பாடுபட்டுவரும் தம்மீதான பல்வேறு தற்கொலை முயற்சிகளின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண மக்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்தத் தடவை கைநழுவ விடக்கூடாதென்று கூறியிருக்கிறார். வடபகுதி மக்கள் அரசாங்கக் கட்சிக்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை நல்கினால் மூன்றில் இருந்து ஐந்து வருடங்களில் செல்வம் கொழிக்கும் பிரதேசமாக வடமாகாணத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எமது நம்பிக்கை கற்பனையானதல்ல. அது யதார்த்தமானதென்று சுட்டிக் காட்டும் அமைச்சர், வடக்கை வளம் கொழிக்கும் மாகாணமாக மாற்றும் பொறுப்பு மக்களின் கைகளிலேயே இருக்கிறதென்று கூறினார்.

30 ஆண்டுகாலம் முடங்கிப் போயிருந்த வடமாகாணத்தின் கல்வி இன்று அரசாங்கத்தினால் மறுமலர்ச்சி அடையக்கூடிய வகையில் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் சீர்குலைந்து போன சகல பாடசாலைக் கட்டிடங்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. வடமராட்சி, வலிகாமம் ஆகிய பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளில் தங்கியிருந்த இராணுவத்தினர் இப்போது படிப்படியாக அங்கிருந்து வெளியேறி அக்காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கப் படுகின்றன.

வடபகுதியின் பிரதான பாடசாலைகளில் ஒன்றாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரி சுமார் 23 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகி இருப்பது வடபகுதி மக்களின் எழுத்தறிவை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த அறிகுறியாக விளங்குகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி