வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
தெற்கின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு கூட்டமைப்பு பலியாகக் கூடாது

தெற்கின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு கூட்டமைப்பு பலியாகக் கூடாது

போராட்டங்களே பேச்சுவார்த் தைகளின் போது தமிழர்களுக்கு பலத்தினைத் தந்ததென்று கூறும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழர்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுகாணக்கூடிய சூழலில் கூட்டமைப்பு ஒற்றுமையாக அதன் பலத்தினை வெளிப்படுத்த வேண்டுமே தவிர, எல்லா கட்சிகளையும் போலவே, கூட்டமைப்பிலும் காணப்படும் சிறுசிறு முரண்பாடுகளை ஊதிப் பெருப்பித்து பிரித்தாள நினைக்கும் தெற்கின் தந்திரங்களுக்கு பலியாகிவிடக்கூடாது என்று கூறுகின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி...

யாழ்ப்பாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எழுக தமிழ் பேரணி தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்த பல்வேறுபட்ட சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்பேரணியானது தமிழ் மக்களுக்குப் பலம் சேர்த்திருப்பதாக நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்?

ஆமாம். எழக தமிழ் பேரணியானது விரக்தியுற்ற மக்களது குரலாகவே நோக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலை, படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்றனவற்றில் காட்டப்படும் அசமந்தம், காணாமல் போன தங்களது உறவுகள் தொடர்பில் விடை கிடைக்காமை என தொடர்ச்சியாக பல்வேறு ஏமாற்றங்களைச் சந்தித்த மக்களின் நீதிக்கான குரலாகவே அது அமைந்திருந்தது. வரலாற்று ரீதியாகப் பார்க்கின்றபோது, இவ்வாறான போராட்டங்களே தமிழர்களின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்த்திருந்தன. விடுதலைப் புலிகள் இருந்தபோது தமிழ்த்தரப்பு கலந்து கொண்ட ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் போதும் போராட்டங்களும் புலிகளின் இருப்பும் பேரம் பேசுவதற்கான ஒரு பலமான நிலையை எங்களுக்குத் தந்திருந்தது. மாற்றங்கள் நிகழ்கின்ற, புதிய அரசியல் யாப்பு குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள இதுபோன்ற காலகட்டங்களில் இவ்வாறான போராட்டங்கள் மூலம் கொடுக்கப்படுகின்ற அழுத்தமானது தமிழ்தேசிய கூட்டமைப்பு க்கு, அதன் பேரம் பேசும் சக்திக்கு கூடுதல் பலத்தினையும் அதிகாரத்தினையும் தந்திருக்கின்றது என்பதே எனது வாதம்.

கருணாவைப் பிரித்து, விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தியது போல , கூட்டமைப்பை பலவீனப்படுத்த அரசு முயற்சிப்பதாக நீங்கள் குற்றம்சாட்டியிருந்தீர்கள் இதன் பின்னணி என்ன?

அப்போதைய அரசினால் கருணா திட்டமிடப்பட்டே பிரிக்கப்பட்டதும், சர்வதேசத்தின் தலையீடும் விடுதலைப் புலிகளை பலமிழந்தவர்களாக்கி ஆயுதப் போராட்டத்தையே மௌனிக்கச் செய்தது. அதனைப் போன்றே இன்றைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள கருத்த முரண்பாடுகளை பூதாகரமானதாக்கி எங்களைப் பிரித்து அரசியல் இலாபம் தேட தெற்கின் சக்திகள் விளைகின்றன. எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் அது தென்னிலங்கைக்கு ஒரு துரும்புச் சீட்டாக அமைந்து விடும். நாங்கள் தீர்வைத் தர விளைந்தோம் இவர்களுக்குள் ஒற்றுமையின்மையால் எதனையும் கொடுக்க முடியாது போய்விட்டது என்று தட்டிக்கழித்து விடுவார்கள், நாங்கள் வலுவாக இருக்கின்றபோதுதான் தென்னிலங்கையின் பிரித்தாளும் தந்திரங்களை முறியடிக்கலாம் என்பதனை உணர்ந்து ஒற்றுமையாக, வலுவாக தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதனையே நான் கூறியிருந்தேன்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்தை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் எந்தளவில் உள்ளன? அவ்வாறான அத்துமீறல்களால் மன்னார் மாவட்ட மீனவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக நீங்கள் குற்றம்சாட்டி யிருந்தீர்கள். இப்போது நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

நிலைமைகளில் எந்தவித முன்னேற்றங்களும் இல்லை. எங்கள் கடற்பரப்பில் எங்கள் வளங்களை, எங்கள் மீனவர்களின் எதிர்காலத்தை சூறையாடும், இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதனை விட தென்னிலங்கை மீனவர்களின் வருகையும் அவர்கள் படையினருடன் இணந்து எமது மக்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனைத் தடுப்பதும் தொடர்ந்தபடிதான் உள்ளது. எங்கள் மீனவர்களைப் பொறுத்தவரை மிகவும் மோசமானது அவர்களது நிலை. தமிழக மீனவர் சமாஜங்கள், இலங்கை மீனவர் சமாஜங்களுடன் பேசுவதன் மூலம் தீர்வுகள் கிட்டப்போவதில்லை. எனவே இந்திய-, இலங்கை அரசாங்கங்களும் இப்பிரச்சினை உடனடியாக தீர்வுகாணப்படவேண்டியது என்பதனை கருத்திற்கொண்டு, அதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். இந்தியாவைப் பொறுத்த மட்டில், அது தமிழ்நாட்டு மீனவர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்கின்றது. அந்த நிலைமையை மாற்றி அந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நாங்கள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, ஆழ்கடல் மீன்பிடியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியிருந்தோம். அல்லாவிட்டால் எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகளவில் இடம்பெறலாம். இது காலப்போக்கில் எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து விடும் என்பதனை தெளிவுபடுத்தியிருந்தோம். இப்போதே மீன் வளம் தேய்வுறத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் கரையோரப் பகுதிகளை, குறிப்பாக இராமேஸ்வரம் போன்ற பகுதிகளைப் பார்த்தால் அங்கே மீன் வளம் என்பது இல்லாமலேயே போய்விட்டது. அங்கே மீன் இல்லாத நேரங்களிலேயே இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள். மீன்வளம் இல்லாதநிலை எங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. எங்கள் பகுதிகளில் அதிக மீன் உற்பத்தி செய்யப்படும் இடங்களான மன்னார் வளைகுடா மற்றும் கரையோரப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மடிகளைக்ெகாண்ட ரோலர்களின் பாவனையால் பவளப் பாறைகள் அழிவடைந்து வருகின்றன. மீனுற்பத்தியே இல்லாமல் போகக்கூடிய ஆபத்தான நிலையே தற்போது உள்ளது.இந்திய, இலங்கை அரசுகள் முழுமூச்சாக தமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இதனை அணுகவேண்டும், மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் இதனைப் பார்க்க வேண்டும்.

வடக்கில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றது என்ற கவலை ஒருபுறமிருக்க, புதிதாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பிலும் போராடவேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றார்களே ?

உண்மைதான். குறிப்பாக முல்லைத்தீவில் புதிதாக பல காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கையகப்படுத்தலுக்கான நில அளவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது மக்களின் ஆர்ப்பாட்டங்களால் அவை தவிர்க்கப்பட்டுமுள்ளன. ஆனாலும் அவ்வாறான சம்பவங்கள் அங்குமிங்குமாக அறியக் கிடைக்கின்றது. மக்களது நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்த ஐ.நா பிரதிநிதி வலியுறுத்திச் சென்றுள்ளார். தமது நிலங்கள் விடுவிக்கப்படுவதில் தாமதம், மேலதிக நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலையில் தாமதம் என்பன மக்களை விரக்தி நிலைக்கே இட்டுச் சென்று, எதிர்நிலைகளில் அவர்களை செயலாற்றத் தூண்டுகின்றது. இந்நிலையை மாற்ற அரசு விரைந்து செயலாற்றுவது அவசியம். இதனை நாங்கள் பாராளுமன்றத்திலும் பிரதமர், ஜனாதிபதியுடனான சந்திப்புகளின் போதும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். நிலஅபகரிப்பு உடன்நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்குச் சொந்தமான காணிகள் உடன் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலிறுத்திவரும் விடயங்கள். இவற்றை சாதாரண மாக எண்ணி, இதனைத் தீர்க்க முனைப்புடன் செயலாற்றஇலங்கை அரசு தவறினால் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்று அது அரசுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தி விடும். மாற்றத்தை வேண்டி எங்கள் மக்கள் அதனைக் கொண்டுவந்தார்கள். அரசும் அதனைப் புரிந்து கொண்டு தனது போக்கில் மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சுமுகமான இன நல்லுறவு மலரும். வாய்ப்பேச்சளவில் மட்டுமல்லாமல், நல்லிணக்கத்தை மக்கள் உணரக்கூடியதாகவும் இருக்கும்.

எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், சிறுபான்மையினத்தவர்களின் தயவில் வந்த அரசு என்று தமிழர்கள் தங்கள் பேரம் பேசும் சக்தியை வலுப்பெறச் செய்யக்கூடிய பல்வேறு சாதகத்தன்மைகள் இருந்தபோதும் அரசியல் கைதிகளின் விடுதலை, மீள் குடியேற்றம், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு என்பனவற்றில் ஏன் இழுத்தடிப்புத் தொடர்கின்றது?

தாங்கள் தெரிவுசெய்த அரசு குறித்த அனேக எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் எங்கள் மக்களிடம் இருந்தன. ஆனால் புதிய அரசு பதவியேற்று ஏறத்தாள ஒருவருடம் கழிந்து விட்ட நிலையில், ஒரு சில வாக்குறுதிகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்கம், காணாமல்போனோருக்கான அலுவலகம் என்பனவற்றில் சாதகத்தன்மைகள் இருந்தாலும் எமது மக்களின்அனேக காணிகள் இன்னமும் படையினர் வசமே இருப்பதும், அரசியல் கைதிகளின் விடுதலையில் பாராமுகம், மீள்குடியேற்றத் தாமதம் என்பனவும் மக்கள் மனங்களில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் தோற்றுவித்துள்ளன. ஆனால் சர்வதேசத்தின் பிடியில் இருந்து அரசு தப்ப முடியாது. சர்வதேசத்தினை மதிக்காதவர்களுக்கு என்ன நிகழும் என்பதனை நாங்கள் கடந்த காலங்களில் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். சர்வதேசத்தையே மிரட்டுகின்ற பலத்துடன் இருந்த விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் அழித்ததைப்போல, சர்வாதிகாரப்போக்கால் எதிர்த்த முன்னாள் ஜனாதிபதியை மாற்றுவதற்கு முன்னின்றதும் சர்வதேசமே. இன்று எமது பலம் சர்வதேசத்தினை அனுசரித்து அவர்களிடம் நியாயம் கேட்பது. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதனை ஐ.நா வரைக்கும் சென்று வலியுறுத்தக் கூடியதாகவுள்ளது. புதிய அரசுக்கு எங்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கின்றோம். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளில் இருந்து தவறும் பட்சத்தில், இவ்வாறான ஒரு அரசினாலேயே தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்படாமல் போகுமானால் இனி ஒருகாலத்திலும் அதனைத் தீர்க்க முடியாதென்பதனை ஐ.நா வரைக்கும் கொண்டு செல்வோம். அரசியல் கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவர் என்று அரசு உறுதியளித்திருக்கின்றது. அந்த வாக்குறுதி பூரணமாக நிறைவேற்றப்படுமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். காணாமல்போனோர், காணி விடுவிப்பு என்பன தொடர்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றபடாது விட்டால் அவர்களது செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக நாங்கள் அரசுக்கு சொல்லவேண்டியிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தினை அரசு ஏற்படுத்தக்கூடாது என்பதே எங்கள் விருப்பமாக உள்ளது. தமிழ் மக்கள் எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்படுமாயின் ஒரு வலுவான செய்தியினை அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்லவேண்டியதாயிருக்கும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் முரண்பாடுகள் குறித்து மக்களிடையே குழப்பங்கள் நிலவுகின்ற நிலையில் ரெலோவின் அலுவலகம் அண்மையில் முல்லைத்தீவில் திறக்கப்பட்டுள்ளமைக்கு பிரத்தியேக காரணங்கள் இருக்கக்கூடுமா?

இது பற்றி மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக இன்னமும் பதியப்படாத நிலையில், ஒரு கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கம், அதன் அந்தந்த வருடங்களுக்கான செயற்பாடுகளை வருடாவருடம் தேர்தல் திணைக்களத்தில் இற்றைப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அல்லாவிட்டால் எங்கள் கட்சியின் சின்னம் தேர்தல் திணைக்களத்தினால் பறிக்கப்பட்டுவிடும். அதன் ஓர் அங்கமாகவே தமிழீழ விடுதலை இயக்கம் அதன் கட்சி அலுவலகத்தினை அண்மையில் முல்லைத் தீவில் திறந்து வைத்தது. அது மாத்திரமல்ல எங்கள் மக்களது குறைகேள் மையமாகவும் இவ்வலுவலகங்கள் அமையும். எங்கள் மக்களது குறை களைதல், கட்சியைப் பாதுகாத்தல் இவை இரண்டு நோக்கங்களுக்காகவுமே இவ் அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதியப்பட்டால் இந்நிலைமை நிச்சயமாக மாற்றமடையும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியதில் நாங்களும் பங்காளர்கள் என்ற வகையில், கூட்டமைப்பானது கட்சியாகப் பதியப்படும்வரை இவ்வாறு அதன் பங்காளிக்கட்சிகள் தங்கள் அடையாளங்களை முதன்மைப்படுத்துவதற்காகச் செயற்படுவதென்பது தவிர்க்கமுடியாதது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் அபிலாஷைகள் பலப்படுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. புதிய அரசியலமைப்பு தமிழர்களுக்குச் சாதகமாய் உருப்பெற வேண்டுமாயின், தெற்கின் இனவாதிகளால் அது நிராகரிக்கப்படாதிருக்க வேண்டும். அதற்கு நல்லிணக்க முயற்சிகளே இன்று அதிகம் தேவைப்படுகின்றன. அவ்வாறான நல்லிணக்கச் செயற்பாடுகள் எந்தளவில் உள்ளன?

உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பானது தமிழர்களின் அபிலாஷைகளை பலப்படுத்தும் அம்சங்களைக் கொண்டிருக்குமானால் அது நிறைவேற்றப்பட சிங்கள மக்களின் மனங்களையும் நாங்கள் வெல்வது அவசியம். அவ்வாறான செயற்பாடுகள் பெரியளவில் இதுவரை இடம்பெறவில்லை என்றே சொல்லவேண்டும். தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் வாயிலாக எங்கள் கருத்துக்களை நாங்கள் கூறினாலும், கிராமப்புறங்களில் உள்ள சிங்கள மக்களை அவை சென்றடைய மாட்டா. கிராமப்புற அடித்தட்டு மக்களிடம் தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றி தெளிவை ஏற்படுத்தம் முகமான வேலைத்திட்டங்கள் பற்றி நாங்கள் சிந்திப்போம். அதற்கான முயற்சிகள் குறித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கவனத்திற் கொள்ளும்.

புதிய அரசியலமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் வெல்லப்பட வேண்டும். எனவே, தமிழ் வாக்குகள் கிடைக்க வேண்டுமாயின் அம்மக்களின் அபிலாஷைகளை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைவதும் அவசியமானதாகின்றது.

மன்னாரில் தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவினைக் கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்து நிறையவே பேசப்பட்டுள்ளது. இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?இப்போது இரு தரப்பினருக்குமான உறவுநிலை சீரடைந்து விட்டதா?

மன்னாரில் முஸ்லிம்- தமிழ் சமூகங்களுக்கிடையிலான உறவு விரிசலடைய கடந்த காலங்களில் காரணமாயிருந்தவர்கள் அரசியல்வாதிகளே. அதற்காக இப்போது நிலைமை முற்றாக சீரடைந்து விட்டதென்று சொல்ல மாட்டேன். இது குறித்து நாங்கள் முஸ்லிம் சகோதரர்களுடன் பேசி வருகின்றோம். ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று நாங்களும் விளைகின்றோம். அதற்கான முனைப்பினை முஸ்லிம் சகோதரர்களும் காண்பித்து வருகின்றார்கள். அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாகவே இவ்விரு இனங்களுக்கிடையிலான பிரச்சினை கடந்த காலங்களில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. கடந்தகாலத் தவறுகளை உணர்ந்து செயற்படுவதன் மூலமே விரிசலைத் தவிர்க்க முடியும். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இவ்விரு சமூகங்களிடையிலான நல்லிணக்கம் என்பது மிகக் குறைந்தளவில் இருப்பதற்கு இனம் சார்ந்துசெயற்படுவதும் காரணமாக இருக்கலாம் இவ்வாறு இனம் சார்ந்து செயற்படுவது தவறல்ல. ஆனால் வேலைவாய்ப்பாக இருக்கட்டும் வீட்டுத் திட்டம் என எதுவாக இருந்தாலும் ஒட்டுமொத்த மன்னார் மக்கள் அல்லது வன்னி மாவட்ட மக்கள் என்று செயற்படும்போது இவ்விரு இனங்களுக்கிடையிலான நல்லுறவென்பது மேம்பாடடையும். வேறுபாடுகள் காட்டப்படும்போதுதான் பிரச்சினைகள் வெடிக்கின்றன. அரசியில்வாதிகளாக நாங்களும் இன நல்லுறவைப் பேணும் வகையில் செயற்படுவது அவசியம். இல்லாவிட்டால் இவ்விரு இனங்களுக்கிடையிலான உறவானது பெரும் பிளவாக மாறிவிடக்கூடிய ஆபத்து அங்கு நிலவுகின்றது.

வடக்கின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்திச் செயற்பாடுகளில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக நீங்கள் முன்பொருதடவை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்நிலைமை இன்னமும் தொடர்கின்றதா?

இது நான் அடிக்கடி குறிப்பிடுவது. இராஜதந்திரிகளோ வெளிநாடுகளின் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் A9 பாதையூடாக யாழ்ப்பாணத்துக்கே செல்கின்றார்கள். அமைச்சர்கள் கூட செல்வது அங்குதான். மாதமொன்றுக்கு சிலவேளைகளில் மூன்று நான்கு அமைச்சர்கள் அங்கு வந்துபோகின்றனர்.

அதற்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டாம் என்று நான்சொல்ல வரவில்லை. ஆனால் அதனைப்போலவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டதிற்கும் வெளிநாடுகளின், அரசின் உதவிக்கரம் நீள வேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம். யாழ்ப்பாணத்துக்கே அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது எங்கள் வன்னி மாவட்டம் தான் அபிவிருத்தியை அதிகம் வேண்டிநிற்பதும் அதுதான். வன்னி மாவட்டம் என்பது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற மூன்றினையும் உள்ளடக்கியது. எல்லோரும் அங்கும் வரவேண்டும் வன்னி மாவட்டைத்தினையும் புறக்கணிக்காது அபிவிருத்தி செய்யவேண்டும் என்பது எப்போதும் எனது கோரிக்கையாக இருந்திருக்கிறது.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.