வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
சுதந்திரம் என்ற பெயரில்அபாண்டங்கள் சுமத்தப்படுவதை தலைமைத்துவம் அனுமதிக்காது

சுதந்திரம் என்ற பெயரில்அபாண்டங்கள் சுமத்தப்படுவதை தலைமைத்துவம் அனுமதிக்காது

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேர்காணல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கருத்துச் சுதந்திரம் தாராளமாக உண்டு. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம்கிடையாது. ஆனால் அபாண்டமான பழிசுமத்தல்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அதனை தலைமைத்துவம் எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை. கட்சிக்குள் சிலர் வேரறுக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டதன் காரணமாக சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குள் தலைமைத்துவம் தள்ளப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார்.

கட்சியின் செயற்பாடுகள், உள்ளக விவகாரங்கள். தற்போதைய அரசியல் நிலவரங்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இந்த நேர்காணலில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அமைச்சர் ஹக்கீமிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாகவே பதிலளித்தார். நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு.

கேள்வி – முஸ்லிம் காங்கிரஸில் அண்மைக்காலமாக உருவாகியுள்ள நெருக்கடிகள் தீர்க்கப்படாமல் தொடர்வது கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கமாட்டாதா?

பதில் – ஜனநாயக நீரோட்டத்தில் அரசியல் கட்சியில் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கின்றது. கருத்துச் சுதந்திரம் இதில் பிரதானமானது. அந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸில் சகல மட்டத்தினருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அதனை நான் ஒரு போதும் மறுக்கவில்லை. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அபாண்டங்கள் சுமத்தப்படுவதை தலைமைத்துவம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு, உண்மைக்குப் புறம்பானவற்றுக்கு எப்படி பதிலளிக்க முடியும்? அண்மைக்காலமாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்மீதும், கட்சி மீதும் அடிப்படையற்ற விதத்தில் குற்றச் சாட்டுகளை பரப்பிவருகின்றனர். இதனை தலைமைத்துவம் எப்படி அனுமதிக்கமுடியும்?

கட்சியின் உட்கட்ட மட்டத்தில் பேசப்பட வேண்டிய சில விடயங்கள். அதுவும் சின்ன விடயங்களை இவர்கள் ஊதிப் பெருப்பித்து அதன் மூலம் நன்மை அடைய முயற்சிக்கின்றனர். கட்சி தனிநபர்களுடையதல்ல. தமது சொந்த அரசியல் அபிலாஷைகளை அடையும் பொருட்டு கட்சிகளையும், தலைமைத்துவத்தையும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு சில ஊடகங்களும் துணை போய்க் கொண்டிருக்கின்றன. அந்த ஊடகங்களும் விவகாரத்தை ஊதிப்பெருப்பித்தே வெளியிட்டு வருகின்றன. இதற்கு தலைமைத்துவம் கைகட்டி, வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி – பிடிவாதமான போக்குகள் கட்சிக்கு அபகீர்த்தியைக் கொண்டுதராதா?

பதில் – பிடிவாதம் என்பதை விட கட்சியின் நலன் பற்றியே நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமக்குப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அரசியல் ரீதியில் நெருக்கடிகளை உருவாக்கும் வங்குரோத்துச் செயற்பாடுகளில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்பது வெளிப்படையான விடயம். சில ஊடகங்கள் நாளாந்தம் இவர்களுக்காக பக்கங்களை தாராளமாக ஒதுக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

அடிப்படையில்லாத விடயங்களுக்காக சில ஊடகங்கங்கள் ஊடக தர்மத்தை மீறிச் செயற்பட்டு வருகின்றன. இதனை ஊடக தர்மமாகப் பார்க்க முடியுமா? கட்சிக்குள் உட்பூசல் என்று கூறுவதற்கு எதுவுமே கிடையாது. தங்களது சுயநலனுக்காக அடிப்படையில்லாத விசயங்களை ஊதிப்பெருத்து வருகின்றனர்.

கட்சியின் முன்னேற்றத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு இடமளிக்கவும் போவதில்லை. துடிப்புள்ள போராளிகள் அரணாக நின்று கட்சியை பாதுகாத்து வருகின்றார்கள். அவ்வாறான நிலையில் சிலரின் செயற்பாடுகளால் கட்சியை எதுவும் செய்து விடமுடியாது.

கேள்வி – கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலியின் பிரச்சினைக்கு தலைமைத்துவம் ஏன் உறுதியான முடிவை எடுக்காதிருக்கின்றது?

பதில் – ஹசன் அலி அவர்களின் விடயத்தில் மிகச் சுமுகமான தீர்வைக் காண்பதில் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆர்வம் காட்டி வருகின்றேன். அவர் உறுதியான முடிவெடுக்காமல் அல்லது முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவரை நாம் ஒருபோதும் புறந்தள்ளிச் செயற்படவில்லை. சில பேர்வழிகளின் அழுத்தத்துக்குள் அவர் அள்ளுண்டு போவதாகவே நினைக்க வேண்டியுள்ளது.

எம்மோடு பேசிவிட்டுப் போகும் போது நம்பிக்கையுடனேயே செல்கிறார். பின்னர் வேறுவிதமாக பேசமுற்படுகிறார். அது ஏன் என்பது எனக்கே புரியவில்லை. அடிக்கடி தடுமாற்றமடைகின்றார். அவர் விடயத்தில் இன்னமும் வாய்ப்பு இருப்பதாகவே நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன். ஆனால் அவரது மனநிலை உறுதியானதாக காணப்படவில்லை என்பதையிட்டு வேதனையாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே உதறித்தள்ளும் போக்கில் அவர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

நடுநிலையான போக்கில் அவரது விவகாரத்துக்கு தீர்வுகாணும் முயற்சியில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

கேள்வி – ஹஸன் அலிக்குரிய இடம் வழங்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கின்றீர்களா?

பதில் – உண்மையிலேயே அவருக்கான இடம் கட்சியில் இருக்கவே செய்கிறது. அவர் மீதான நம்பிக்கை வீண்போக மாட்டாது. எந்த நேரத்திலும் அவருடன் பேசத் தயாராக இருக்கின்றேன். மற்றவர் இவரின் அழுத்தங்களுக்குள் சிக்காமல் தனக்கே உரிய ஆளுமையுடன் அவர் செயற்பட வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

கட்சியை ஏலம் போடுவதற்கு நாம் யாருக்கும் இடமளிக்க மாட்டோம். மு.காவை யாரும் பிளவுபடுத்த முடியாது. அது ஆழமாக வேரூன்றிய மரம் சிலர் வேரறுக்க முனைகின்றனர். ஆரம்பத்தில் கிளைகளை வெட்டினார்கள். நடந்தது ஒன்றுமில்லை. வெட்டப்பட்ட கிளைகள் “புல்லுறுவிகள்” என்பதை நிதர்சனமாக காண்கின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிப் பாதையில் எவரும் தடைக்கற்களை போடமுடியாது. அப்படி தடைகள் போட்டாலும் தடைகளைத் தாண்டி வீரியமுடன் அது பயணிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றேன்.

கேள்வி – அரசியல் ரீதியில் கட்சி முரண்பாடு பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டாதா?

பதில் – வெளியே கூறுவது போன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள் பெரிதாக எந்த பிளவுகளும் கிடையாது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதற்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தலைமைத்துவத்துக்கு கட்டுப்படவேண்டிய கடப்பாட்டை ஒவ்வொரு உறுப்பினரும் கொண்டிருக்கின்றார்கள். அது உயர்பதவி வகிப்போரிலிருந்து அடிமட்ட போராளி வரையில் ஒரே விதமாகவே இருக்கும்.

இன்றைய அரசியல் நிலையில் மு.காவுக்கு மட்டுமல்ல. அனைத்துக் கட்சிகளிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஜனநாயக நீரோட்டத்தில் கருத்து முரண்பாடு மரபுரீதியானது. அப்படி இல்லையென்றால் அது ஜனநாயக நடைமுறையாகாது. மு.காவுக்குள் சர்வாதிகாரம் கிடையாது. தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவுகளை சர்வாதிகாரமாக கூறமுடியாது. தலைமைத்துவ தற்துணிவு யாப்பில் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிலர் அதனை விமர்சிக்க முற்படுவது அபாண்டமானதாகும்.

நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை வித்தியாசமானதாகவே உள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை ஆட்சி புரிந்தது தனிக்கட்சியே ஆகும். இடையிடையே கூட்டு அரசுகள் அமைந்தாலும் தனிக் கட்சியொன்றின் கீழேயே ஆட்சி நடத்தப்பட்டது. 2015 ஜனவரிக்குப் பின்னர் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டது. தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசு என்ற புதிய ஆட்சி முறை அமுலுக்கு வந்தது. நாட்டு மக்கள் அதற்கான ஆணையை இரண்டு பிரதான கட்சிகளுக்கும் வழங்கினர்

பிரதான இரண்டு கட்சிகளும் இன்று ஒரே பாதையில் பயணிக்கின்றன. அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் கைகொடுத்து ஒத்துழைத்து வருகின்றன. மைத்திரி ரணில் நல்லாட்சிக்கு சர்வதேச ரீதியில் அபரிமிதமான வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகின்றது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக உதவிகளும், முதலீடுகளும் வந்து குவியத் தொடங்கியுள்ளன. விமர்சிப்புகளை கண்டு நாம் பயப்படவில்லை. கடந்தகாலத்தில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

கேள்வி – மக்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதில் தாமதம் காட்டப்படுவதாக கூறப்படுகின்றதே?

பதில் – பொருளாதாரம் சீர்குலைந்து போன நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த அரசு பதவியேற்றது. ஒரே இரவுக்குள் சகலவற்றுக்கும் தீர்வு கிட்டும் என எதிர்பார்க்க முடியுமா? நீண்ட தூரத்தை இலக்கு வைத்து பணிகள் தொடரப்படுகின்றது. நாட்டை ஸ்திரமான நிலைக்கு கட்டியெழுப்புவது முதற் பணியாகும். அதைத் தொடர்ந்தே ஏனைய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு ஒரு போதும் மறந்துவிடவில்லை. சில பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவை கூட சரியாக அடையாளப்படுத்தப்படவில்லை. எதிர்ப்பு அரசியல் செய்பவர்களுக்கு நல்லனவே கண்களுக்கு புலப்படுவதில்லை.

குறைகண்டு பிடிப்பவர்களைப்பற்றி அரசு அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்துவரும் சிலமாதங்களின் பாரிய மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன. சர்வதேசம் அதற்கு கை கொடுக்க உத்தரவாதமளித்துள்ளன.

யார் என்ன சொன்னாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிப் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. கனவுலகில் சஞ்சரிக்கும் எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்கள் அப்படியே கனவுலகில் மிதக்கட்டும். நாம் எமது பணியை தனியுலகில் இருந்து தொடர்வோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.