வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
இப்போதுதான் நிம்மதியாக மக்களுக்கு சேவை செய்யக்கூடியதாக இருக்கிறது

இப்போதுதான் நிம்மதியாக மக்களுக்கு சேவை செய்யக்கூடியதாக இருக்கிறது

பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டைத் தொடர்ந்து இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் தினகரன் வாரமஞ்சரிக்காக சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் சேமநலன்கள் தொடர்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு தொழிற்சங்கங்களுக்குமிடையே செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் இம்முறை இழுபறி நிலையில் இருந்ததற்கான காரணம் என்ன?

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இழுபறியில் இருந்த தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு மார்ச்சில் ஒப்பந்தம் காலாவதியானபோது சம்பள உயர்வு குறித்து பேசமுடியாததொரு சூழல் காணப்பட்டது. தேயிலை விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி முதலாளிமார் சம்மேளனம் இப்பிரச்சினையை இழுத்தடித்து வந்தது. ஒரு சிறுதொகை சம்பளத்தையேனும் அவர்கள் வழங்கத்தயாராக இல்லை. தற்போது 730 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைக்கும். அத்துடன் ஊழியர் சேமலாப நிதி இதர கொடுப்பனவுகளையும் சேர்த்தால் 824 ரூபா கிடைக்கும்.

நாம் முதலாளிமார் சம்மேளனத்திடம் வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென கோரினோம். அவ்வாறு வழங்க முடியாதென கூறினார்கள். நாம் கலந்து பேசி வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. தோட்டங்களில் எங்கெங்கு வெற்றுக்காணிகள் இருக்கின்றனவோ அவற்றை சுத்தம் செய்து தொழிலாளர்களின் பாவனைக்கு வழங்க வேண்டும் என கோரியுள்ளோம்.

அதேநேரம் புதிய சரத்து ஒன்றையும் சேர்த்திருக்கிறோம். தோட்டங்கள் காடுகளாக மாறி வருகின்றன. எனவே, அவற்றை உரியமுறையில் பராமரிப்பதன் மூலம் தொழிலாளர்கள் எதுவித அச்சமுமின்றி வேலை செய்யக்கூடியதாக இருக்கும். அவ்வாறு தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லையென்றால் அதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கக்கூடியவாறு சில விடயங்கள் அந்த சரத்தில் உள்ளடங்கியுள்ளன.

கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் காலாவதியான காலப்பகுதியிலிருந்து புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையான காலப்பகுதிக்கான தொழிலாளர்களின் நிலுவைப்பணத்தையும் பெற்றுக்கொடுத்தோம். இம்முறை அந்த நிலுவைப்பணத்தை முதலாளிமார் வழங்க முடியாது என தெரிவித்திருக்கின்றனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கமொன்று இடைக்கால ஒப்பந்தத்தில் எந்தவித நிலுவைப்பணமும் வேண்டாம் என கைச்சாத்திட்டுள்ளதால் அதனை வழங்கமுடியாது எனக்கூறினர். அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது இலக்கு ஆயிரம் ரூபாய். ஆனால் 730 ரூபாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஒருபுறமிருக்க அடுத்த வாரத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இத்தொகைக்கு இணங்கினோம். தொழிலாளர்களின் நிலுவைப்பணத்தை பெற்றுக்கொடுப்பதில் இ.தொ.கா பின்வாங்கப்போவதில்லை. ஒற்றுமையாக இருந்து இந்த நிலுவைப் பணத்தை பெற்றுக்கொடுக்க போராடுவோம். அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது அடுத்து கட்ட நடவடிக்கைகள் என்ன?

தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக காலங்காலமாக நாம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க முடியாது. நமது மக்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டியிருக்கிறது. கடந்த 200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் பெருந்தோட்ட மக்கள் தேயிலைக் கைத்தொழிலை கைவிட்டு செல்லக்கூடாது. அதுதான் அவர்களின் இருப்பு. எதிர்காலத்தில் தோட்டங்கள் கிராமங்களாக மாறுவதற்கேற்ற வகையில் சில முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு கிராமங்களாக மாறும்போது ஏனைய சமூகத்தினரைப்போல மலையக மக்களும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தமுடியும். தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாறும்போது தமது வாழ்க்கையை தாமே தீர்மானித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

தொழிலாளர்களின் சேமநலன்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் சேமநலன்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது உரியமுறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தைகளின்போது இவ்விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது. ஞாயிறு நாட்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு ஒன்றரைநாளுக்கான சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் சில கம்பனிகள் அவர்களுக்கு ஒன்றரைநாள் சம்பளம் வழங்குவதில்லை மேலதிக கொடுப்பனவு எதனையும் வழங்குவதில்லை. தொழிலாளர்கள் கைகாசுக்கு வரச்சொன்னதும் போய்விடுகிறார்கள். அதனை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து விட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்துகொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் பிரச்சினை இல்லையா?

எந்த பாதிப்புகளும் இல்லை. இப்போதுதான் நிம்மதியாக மக்களுக்கு சேவை செய்யக்கூடியதாக இருக்கிறது. சுதந்திரமாக இயங்கக்கூடியதாக இருக்கிறது. நாம் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெருந்தோட்ட மக்கள் நலனில் இ.தொ.கா எப்போதும் கூடிய அக்கறை செலுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

இ.தொ.காவின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

தொழிலாளர்களாக இருப்பவர்களை முதலாளிகளாக மாற்ற வேண்டும் என்பதே எமது அடுத்த நடவடிக்கையாகும். தேயிலை மலைகளை தொழிலாளர்களிடமே தனியாக பிரித்து கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

சம்பள உயர்வுப்போராட்டங்களின் போது தொழிற்சங்கங்களுக்கு சந்தாப்பணம் செலுத்த மாட்டோம் என கோஷமெழுப்பியிருந்தார்களே?

நானும் அவதானித்தேன். மக்கள் மனதில் இவ்வாறான கோபங்கள் எழுவது இயற்கையே. தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் தான் தொழிற்சங்க அலுவலக விடயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கத்தில் இருக்கும் வரைக்கும்தான் அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு இருக்கும். ஆரம்பத்தில் நமது சமூகம் எப்படியிருந்தது. தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. படிப்படியாக முன்னேறி முதலாளியாக மாறிவிட்டால் தொழிற்சங்கம் என்ற ஒன்று இருக்காது. ஏன் நாமும் அப்படி மாறக்கூடாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.