புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
இலங்கையின் சுகாதாரத்துறையின் உடனடி அவதானத்தை வேண்டி  நிற்கும் HIV தொற்று

இலங்கையின் சுகாதாரத்துறையின் உடனடி அவதானத்தை வேண்டி  நிற்கும் HIV தொற்று

ஒருவனுக்கு ஒருத்தி என்பது கீழைத்தேய நாடுகளில் பொதுவாக வலியுறுத்தப்பட்டு முக்கியமளிக்கப்பட்டு வந்தாலும் நடைமுறையில் இதற்கு முரணான செயற்பாடுகளே அதிகளவில் இடம்பெறுவதன் விளைவே, கீழைத்தேய நாடுகளில் எயிட்ஸ் அதிகளவில் பரவுவதற்கு காரணமாகின்றது. எயிட்ஸ் தொற்றுக்கு பிரதான காரணமாய் அமைவது பாதுகாப்பற்ற உடலுறவு, ஊசி மூலம் ஏற்றப்படும் போதைப்பொருள்கள், ஒருபால் உறவு என்பனவாகும்.

சர்வதேச ரீதியில் எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் 1ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றமையினால் தற்போது எயிட்ஸ் நோய் குறித்தான பரிசோதனைகளை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட 1982 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர் இறந்துள்ளதுடன், சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும், இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம். இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1987 ஆம் ஆண்டே இனங் காணப்பட்டார்.

தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதாக பொது சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ் நோயினை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380,367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார கல்வி பணியகத்தின் பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே கருத்து தெரிவிக்கையில், எச்.ஐ.வி. என்ற வைரஸானது கண்டுப்பிடுக்கப்பட்டு, உலக நாடுகள் இவ்வருட முடிவுடன் மூன்று தசாப்தத்தை கடந்துள்ளது. அந்தவகையில் எச்.ஐ.வி. என்ற வைரஸ் ஒரு நபரின் சில செயற்பாடுகளினால் இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்டமையினால் அது எயிட்ஸ் என்ற ரீதியில் பாலியல் நோயாக கண்டறியப்பட்டதோடு இன்று உலக நாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட இந்த பாலியல் நோயினை கட்டுப்படுத்தும் முகமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. எயிட்ஸ் நோய் தொற்றினால் எமது நாட்டில் வாரத்திற்கு 9 பேர் இனங்காணப்படுகின்றனர். அந்த வகையில் இதுவரை நாடளாவிய ரீதியில் 2241 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்திய பரிசோதனைகள் மூலம் உரிய சிகிச்சைகளை தொடர்ச்சியாக பெற்றுவரும் நிலையில் அது ஏனைய நபருக்கு பரவுவதை தடுப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதோடு அவரின் குறித்த செயற்பாடு காரணமாக முழு சமூகமே பாதுகாக்கப்படும். மறுபுறம் அவரும் சாதாரண வாழ்க்கையினை தொடர்வதற்கான சந்தர்ப்பங்களும் காணப் படுகின்றது. எனவே, எயிட்ஸ் நோய் குறித்து அனைவரும் மிகவும் தெளிவுடன் செயற்படுவது அவசியமானது.

எயிட்ஸ் நோயின் பரம்பலுக்கு பாலுறவு முக்கியத்துவம் பெற்றாலும் எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் இன்னொருவருக்கு செலுத்தப்படும் போதும், எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது அக்குழந்தையும் பாதிக்கப்படும். விசேடமாக போதைவஸ்து பாவனைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மூலமாகவும் எச்.ஐ.வி. வைரஸ் பரப்பப்படுகிறது. அத்துடன் முறையற்ற பாலுறவு (ஓரினச் சேர்க்கை) மூலமாகவும் எயிட்ஸ் பரப்பப்படுகிறது.

எச்.ஐ.வி. வைரஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பினலிருந்து உடல் உறவின் போது வெளியேறும் இரத்தத்திலும், திரவத்திலுமிருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இதற்கான நிவாரண மருந்தின்மையினால் மரணமே சம்பவிக்கும். எச்.ஐ.வி. தொற்றின் மூலம் ஏற்படும் மரணத்தின் நுழைவாயில் தான் எயிட்ஸ். இத்தொற்றுக்கிருமியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆபத்துமதிகமாகும். எயிட்ஸ் நோயாளியிடமிருந்து பரவும் எயிட்ஸ் கிருமி மிகவும் அபாயகரமானது எளிதில் தொற்றக் கூடியது. வைரஸ் என்பது நோய் உண்டாக்கக் கூடிய ஒரு கிருமி. இந்த வைரஸ் ஒரு புதிய களத்தில் நுழைந்து அதை அழித்துவிடும். HIV + என்பது ஒரு மனிதன் எச்.ஐ.வியால் பீடிக்கப்பட்டுள்ளான் என்பதையும் HIV - என்பது எச்.ஐ.வியால் தாக்கப்படவில்லை என்பதையும் குறிக்கும்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட தனி நபரின் தொற்று எச்.ஐ.வி. (கிருமி) ஒருமுறை உடலில் நுழைந்து விட்டால் அது மெதுவாவும் சீராகவும் CD4 என்ற எதிர்ப்பு சக்தியுள்ள களங்களை அழித்து, AIDSி என்ற சாவை நோக்கிப் பயணிக்கும் கட்டத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.

எச்.ஐ.வி. பரவுவதற்கான வெவ்வேறு வகைகள் இத்தொற்று பாதிக்கப்பட்டவர்கள்களின் உடலிலிருந்து வெளியேறும். இரத்தம் மற்றும் ஆண் பெண் உடலுறுப்புக்களிலிருந்து வெளியேறும் திரவங்கள் ஆகியவை மூலமே பெரும்பாலும் இத்தொற்று பரவுகிறது.

எச்ஐ.வி அல்லது எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் உங்களது இரத்தத்துடன் ஏதேனும் ஒரு முறையில் கலந்தாலன்றி நீங்கள் தாக்கப்பட வாய்ப்பில்லை. மற்றப்படி முத்தம் கொடுத்தல், தொடுவதாலோ இத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்பதே மருத்துவர்களின் கருத்தாகும்.

ஆரம்ப நிலை: எச்.ஐ.வி. பரவி 3 முதல் 6 மாதங்கள் வரை, இந்நிலையில் வைரஸ் கிருமிகள் தீவிரமாக விருத்தியாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். வைரஸ் தீவிரமாவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவும்.

தீவிரமானது: சாவுக்கும் வைரஸ¤க்குமான இடைப் பட்ட நேரம். உடலை தொடர்ந்து அழித்துக் கொண்டே நிலையாயிருக்கும்.

விளி4 இந்நிலை 2 இலிருந்து 10 ஆண்டு வரையிலான எண்ணிக்கையிலிருக்கும். இந்தக் காலக்கட்டம் அம்மனிதனின் உடல் நிலையையும் வைரஸையும் பொறுத்தது. இலங்கையைப் பொறுத்த வரையில் மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகள் தட்டுப்பாடு, மருந்துகள் இறக்குமதி மற்றும் சுகாதார துறை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. எமது நாட்டின் சுகாதாரத் துறைக்கு எலிக்காய்ச்சல் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் எயிட்ஸ் என கொடிய தொற்றுநோய்களும் போர் தொடுக்கின்றன.

எனவே, எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பது, அவர்களை உடனடி சிகிச்சைக்குட்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களை உசார்படுத்தி இக்கொடிய நோயின் தாக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சில வருடங்களில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்ந்து விடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.