புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
கிழக்கில் ஒரு பெண் கவிஞர்

கிழக்கில் ஒரு பெண் கவிஞர்

இங்கு எனது நோக்கம், திறன் ஆய்வு செய்வதல்ல, மாறாக, கிழக்கில் உள்ள பெண் கவிஞர்களில் ஒருவரான தம்பிலுவில் ஜெகா என்ற தமிழ் ஆசிரியை பிற மாகாணங் களிலுள்ள தமிழ்பேசும் இலக்கிய நெஞ்சங்களுக்கு அறிமு கப்படுத்துவதே.

இது அவசியமாகிறது. கிழக்கில் பல திறமையான கவிஞர்களும், ஆக்க இலக்கியப் படைப்பாளிகளும் இருந்த போதிலும், அவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய நீரோடையில் அதிகம் பேசப்படுவதில்லை.

இங்கு அறிமுகமாகும் தம்பிலுவில் ஜெகாவின் இயற்பெயர் திருமதி ஜெகதீஸ்வரி நாதன் என்பதாகும்.

இவரைப் பற்றிய சில அறிஞர்களின் கூற்றுக்கள் மூலம் அதிகாரபூர்வமான தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, (“விடைதேடி” என்ற கவிதை நூல்) கருத்துரைகளை முதலில் பார்ப்போம்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள 76 கவிதைகள் எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே அறிஞர்களின் கூற்றுக்களும் கவிஞரின் திறனாற்றலைப் பறைசாற்றும் பாங்காக அமைகின்றன. நூறு பக்கங்கள் இடம்பெற்றமை அவசியமானதே.

இக்கருத்துரைகளின் மூலம் இந்நூல் என்ன கூறுகின்றது. எப்படிக் கூறுகின்றது. ஏன் அப்படிக் கூறுகின்றது என்ற விபரங்களை நாம் அறிந்துகொள்கின்றோம்.

அவற்றுள் என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மாத்திரம் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

“தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்கு முறை, இனத்துன்புறுத்தல், கடமை உணர்வு போன்ற சில விடயங்களை தனது அனுபவவாயி லாகவும், தமிழை வளர்க்க வேண்டும் எனும் உணர்வுடனும் பெயர் சொல்லும் வழிகளாக எழுதியுள்ளார். (கணேஸ்வரி வன்னியசிங்கம்) “இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தனது கவிதை ஆளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். மரபுக்கவிதை எழுதுவதில் திறன்மிக்க இவரது கவிதைகள் தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை... கவிதைகள் மட்டுமன்றி இலக்கியக் கட்டுரைகளும் எழுதும் ஆற்றல் உள்ளவர்”

(நா நவநாயக மூர்த்தி)

“மரபை மீறாப்
பாக்களால் பழமைப்
பண்பினைக் காக்கும்
படைப்பே இந்நூல்” (முல்லைவீரக்குட்டி)

“வாகனத்தில் செல்கின்ற போதில்

ஆண்களின் உரசலால் அவதியுறும்

பெண்கள் பற்றியும் உரைக்கின்ற

தமிழ்க் கவிகள் உயர்ந்தனவாம்” (சீ.வி. பி. மாணிக்கம் குறிஞ்சிவாணன்)

“நூலக உதவியாளராகக் கடமையாற்றினார்

அக்கால கட்டங்களில் அதிகளவு

நூல்களை வாசிக்கும் சந்தர்ப்பம்

பெற்றார்” (சோ. இரவீந்திரன்)

“இவரது பேனா, சிறுகதை விரித்தது. கவிதை மட்டுமன்றி, ஆய்வுகள், பாடல்கள், கதைகள் என பல்வேறு துறைகளில் பார்வை செலுத்தினார். புரையோடிய காயங்கள், பெண்களின் வாழ்வியல் அவலங்கள், சமூகப் பிரச்சினைகள் என யாவற்றையும் எழுத்துருவாக்கினார். பெண்களைக் கூண்டுக்குள் வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க விளையும் கலாசாரத்தை ஒழிக்க விரும்பினார்” (விஜயலெட்சுமி சேகர்)

“சில்லுகள் எனும் கவிதை சுய அனுபவத்தின் ஊடாக சமூக மாற்றத்தைக் கூறும் நல்லதொரு கவிதை. கல்வியும், தொழிலும் பெண்களுக்குக் கொடுத்துள்ள ஒருவகைச் சுதந்திரத்தை, சமூக அந்தஸ்த்தை அது சித்திரிக்கின்றது. சில நூல்கள் சமூக மாற்றத்தின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது. ‘விடைதேடி’ எனும் மறுகவிதை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மன உணர்வைப் பேசுகின்றது... இதில் காணாமற்போன கணவனை எண்ணி ஏங்கும் பெண்ணின் துயரம் எமக்குள்ளும் எழுந்து எம்மையும் சிந்திக்கச் செய்கின்றது” (எம். ஏ. நுஃமான்)

“மரபுக் கவிதை, புதுக்கவிதை எனும் இருவேறு வடிவங்களையும் கையாளும் ஆற்றல் கிழக்கிலங்கைக் கவிஞர்களான மண்டூர் அசோகா முதலான ஓரிருவரையே குறிப்பிடலாம்.

இப்பட்டியலில் தம்பிலுவில் ஜெகாவின் பெயரும் இணைந்து கொண்டமை எனக்கு மகிழ்வைத் தருகின்றது. இன்நூலான ஈழத்துக் கவிதைகள் பலரும் ஆணாதிக்க எதிர்ப்பு, காதல், அரசியல் விடயங்களை பெருமளவு எழுதுகின்றனர். ஆனால் ஜெகாவோ வாழ்வியல் தரிசனங்களையும் மனித நடத்தைக் கோலங்களையும் ஆழமாகப் பார்க்கின்றனர்...

சிறுவர் துஷ்பிரயோகம், மத்திய கிழக்கு நாடுகளின் பெண்களின் தொழிற் பிரச்சினை, காணாமற் போனோர் பற்றிய கண்ணோட்டம் போன்ற பல விடயங்களையும் கவிதைப் பாடுபொருளாகக் கையாண்டு வெற்றிகண்டுள்ளார்.

அது மட்டுமன்றி பெண்களைப்பற்றி குறிப்பிட்ட சில விடயங்களை மட்டும் எழுதாது அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் தனது அகலப் பார்வைக்கு உட்படுத்தியமை பாராட்டுக்குரியது.

இதே போல் வன்னிப் பெண்களின் போர் அவலம் செந்நிறச் சித்திரங்களாகக்கப்பட்டமை ஜெகாவின் கற்பனைத் திறமை வெளிப்படுகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.