புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
கருத்தரிப்புக்கான சர்வதேச மையமும் ஆய்வு நிலையமும் சென்னை, எழும்பூரில்

கருத்தரிப்புக்கான சர்வதேச மையமும் ஆய்வு நிலையமும் சென்னை, எழும்பூரில்

தமிழக ஆளுநர் டாக்டர் கே.றோசையா தலைமையில் திறப்பு விழா

ஒரு காலத்தில் நாட்டில் சனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் குடும்பப் பொருளதாரத் தின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்படுத்தும் வகையிலும் நாமிருவர் நமக்கிருவர் என்ற கட்டுப்பாடு பேணப்பட்டது. அந்தக் கட்டுப்பாடு தற்போது “நாமிருவர் நமக்கு எவரும் இலர்”, என்ற நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

தென் கிழக்காசிய நாடுகளில் மாத்திரமன்றி, மேற்கத்திய நாடுகளிலும் தற்போது பிள்ளைப்பேறின்மை அதிகரித்த நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் 10% ஆக இருந்த பிள்ளைப்பேறின்மை, தற்போது 15% ஆக அதிகரித்திருக்கிறது என்கிறார் தமிழக ஆளுநர் டாக்டர் கே.றோசையா.

கிராமப்புற வாழ்வியலில் இருந்து நகர் நோக்கிய நகர்வினால் ஏற்பட்டுள்ள மாற்றம், உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் மாசடைவு, குடும்பக் கட்டுப்பாட்டு முறைமை முதலான காரணங்களால், பிள்ளைப்பேறின்மை அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் தமிழக ஆளுநர்.

பிள்ளைப்பேறற்ற நிலைமை இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கையிலும் கணிசமானோருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. திருமணமாகி சில தம்பதியருக்குப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாகியும் குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் பலர் இங்குக் காணப்படுகிறார்கள். இவ்வாறானவர்கள் உலகில் எங்கிருந்தாலும் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளுடன் இப்போது சென்னையில் இயங்குகிறது ஏ.ஆர்.சி சர்வதேச கருத்தரிப்பு மையமும் ஆய்வு நிலையமும்.

அபிஜெய் மருத்துவமனையின் புதிய மருத்துவமனையாக சென்னை, எழும்பூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச கருத்தரிப்பு மையத்தை, தமிழக ஆளுநர் கடந்த வாரம் வைபவரீதியாகத் திறந்து வைத்தார். இந்த வைபவத்தில் இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வ.கிருஷ்ணமூர்த்தி, தமிழக மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கத்தினர் முதலானோர் கலந்துகொண்டனர்.

அபிஜெய் மருத்துவமனையின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான டாக்டர் சரவணன் லக்ஷ்மன், அவரது பாரியாரும் மருத்துவ மனையின் பணிப்பாளருமான டாக்டர் திருமதி மகாலக்ஷ்மி சரவணன் ஆகியோரும் இணைந்தே இந்த சர்வதேச கருத்தரிப்பு மையத்தையும் ஆய்வு நிலையத்தையும் ஸ்தாபித்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக மருத்துத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வரும் இருவரும் பல வெளிநாடுகளுக்கும் சென்று அங்கு நிலைமைகளை ஆய்வு செய்ததன் பின்னரே, இந்த சர்வதேச மருத்துவமனையை உருவாக்கியுள்ளனர்.

மருத்துவத்து றைக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள டாக்டர் சரவணன், சர்வதேச ரீதியாகப் பயன்பெறும் வகையில் சென்னையில் புதிய மருத்துவமனையை ஸ்தாபித்ததன் நோக்கம் பற்றிக் குறிப்பிடு கையில், பிள்ளைப் பேறின்மை அல்லது கருத்தரிக்காமை தொடர்பான பிரச்சினை இந்தியாவில் மட்டுமன்றி உலகில் பல்வேறு நாடுகளிலும் காணப்படுவதைத் தாம் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறிந்திருப்பதாகவும் எனவே, அவ்வாறானவர்கள் சென்னை வந்து இலகுவில் சிகிச்சை பெற்றுச் செல்வதற்கு வழிவகுப்பதே தமது எண்ணம் என்றும் குறிப்பிட்டார்.

டாக்டர் சரவணன் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, குழந்தைப் பேறின்மை என்பது பெண்களிடம் மலட்டுத்தன்மை காணப்படுவதால் ஏற்படுகிறது என்ற நிலை மாறி, இப்போது ஆண்கள் மலடாகும் நிலை வேகமாகிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிவதாகக் கூறுகிறார்.

“குழந்தையில்லாத் தம்பதிகள் வெற்றியை அடைவதற்கு முக்கிய காரணம், ஜீவ அணுக்கள் என்று சொல்லக்கூடிய உயிரணுக்களும் முட்டையும்தான். உயிரணுக்கள், முட்டையில் ஒருவருக்குக் குறையிருந்தாலும்கூட, குழந்தைப்பாக்கியம் தள்ளிப்போகலாம், தாமதமாகலாம். அல்லது கர்ப்பம் தரித்தாலும் ஒரு பத்துமாத காலம் பயனில்லாமலும் போகலாம். இந்த நிலைபெண்களுக்குச் சரிசமமாக ஆண்களுக்கும் பிரச்சினைகள் கூடிக்கொண்டே வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளின் பின்னர், பெண் மலட்டுத் தன்மை என்பதைவிட நேர்மறையாக ஆண்களைச் சார்ந்துபோகுமா? என்ற ஓர் ஐயம் ஏற்படுகிறது.

ஏனெனில், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும்போது ஆண்கள்தான் அதற்குக் கூடுதலாக முகங்கொடுக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரம் பயணித்து பதற்றமான நிலையில் தொழில்புரிவது, நேரமற்ற நேரத்தில் உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியின்மை, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் முதலானவை ஆண்களைக் கூடுதலாகத் தாக்கத்திற்கு உள்ளாக்கும். ஆகவே, பிள்ளைப் பேறின்மைக்குத் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்கள் இருக்கிறார்கள். காலப்போக்கில் பெண்களைவிட கூடுதலான ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு” என்கிறார் டாக்டர்.

இது தொடர்பாக டாக்டர் சரவணனின் மேலதிக விளக்கங்களும் அவர் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர் அளிக்கவிருக்கும் சிகிச்சை முறைகள் முதலான பல்வேறு தகவல்கள் அடுத்த வாரம் தொடரும்..

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.