புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
கோணாபுல மாணவர்களின் கோரிக்கை

கோணாபுல மாணவர்களின் கோரிக்கை

கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக வர வேண்டும் அதற்கு எம்மை எமது சொந்த இடத்தில் மீள் குடியேற்றுங்கள் என மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலிட்டி வடக்கில் இருந்து கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் இடம் பெயர்ந்து இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாது மல்லாகம் கோணப்புலம் முகாமில் 200 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

குறித்த நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மாணவர்கள் பலர் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்கள். அவர்கள் மேலும் தமது கல்வியினை சிறப்பாக முன்னெடுக்க வறுமை காரணமாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முகாமில் வசிக்கும் மாணவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்கின்றனர். முகாமில் படித்து புலமை பரீட்சையில் சித்தியடைந்து யாழில் உள்ள பிரபல பாடசாலைகளில் பல மாணவர்கள் கல்வியை தொடர்கின்றனர் என முகாம் தலைவர் இன்பராஜா தெரிவித்தார்.

சிறுவயதில் கல்வியில் சிறந்து விளங்கும் சில மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் கல்வி கற்கும் போது வறுமை காரணமாக இடைநடுவில் கல்வியை கைவிடுகின்றனர். சிலர் இளவயது திருமணங்களை செய்கின்றனர்.

பாடசாலை மட்டங்களில் சிறந்த பெறுபேறுகளை இந்த மாணவர்கள் பெறும்போது சிலர் ‘முகாம் மாணவர்கள்’ என ஒரு விதமாக பார்ப்பதனால் எமது பிள்ளைகள் படும் வேதனைகளை சொல்லமுடியாது வீட்டுக்கு வந்து அழுவார்கள்.

சில நேரங்களில் வறுமைகாரணமாகவும் முகாம் மாணவர்கள் எனக் கூறியும் புறக்கணிப்புக்கள் இடம்பெறுகின்றன.

பாடசாலைகளில் புதிதாக ஆசிரியர்கள் வந்து வகுப்புகள் ஆரம்பிக்க முன்னர் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களை அறிமுகம் செய்ய சொல்லுவார்கள்.

அதன் போது எல்லா மாணவர்களும் தான் இந்த இடத்தில் இருந்து வருகிறேன் என்றும் அவர்களின் அப்பா அம்மா செய்யும் தொழில்களை கெளரவமாக கூறுவார்கள்.

ஆனால் எம் பிள்ளைகள் முகாமில் இருந்து வருகின்றோம் அப்பா கூலி வேலை என சொல்லும் போதும் அவர்கள் படும் வேதனைகள் கொஞ்சம் அல்ல.

எமது சொந்த மண்ணிலே நாம் கல்வி கற்கும் போது எமது மண்ணிலே இருந்தே பாடசாலையில் தரமான கல்வியினை கற்றோம் எமது பெற்றோர்கள் தொழில் செய்து எம்மை வறுமையின்றி கல்வி கற்க உதவினார்கள்.

இடம்பெயர்ந்த பின்னர் எமது கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வறுமையும் சூழ்ந்து கொண்டுள்ளது. ஒரு தலைமுறையில் கல்வியே நாசமாகி உள்ளது.

எமது பிள்ளைகளாவது கல்வியினை சிறந்த முறையில் கற்று சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும். அதற்கு எம்மை சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதித்தால் எமது கடற்தொழிலை செய்து சொழிப்போடு வாழ்வோம். சுய தொழில்களை முன்னெடுக்க முடியும். எமது தொழில்களின் ஊடாக வறுமை நீங்கி எமது பிள்ளைகளை சிறந்த முறையில் கல்வி கற்பிக்க முடியும் என மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக சூழல் காரணமாக கல்வியினை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியவில்லை, முகாம்களில் மிக நெருக்கமாக குடியிருப்புக்கள் இருப்பதனால், அயல் வீட்டில் குடும்ப தகராறு என்றால் கூட எம்மால் அன்றைய இரவு படிக்க முடியாது.

எமது பாடசாலையில் சக மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று கற்பதன் மூலம் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றார்கள். எம்மால் வறுமை காரணமாக தனியார் வகுப்புக்களுக்கு சென்று கற்க முடியாவிடினும் பாடசாலையில் கற்றவற்றை வீட்டில் சிறந்த முறையில் மீளவும் கற்பதன் மூலம் சக மாணவர்களுடன் போட்டி போட்டு பெறுபேறுகளை பெற முடிகின்றது.

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று தற்போது நடேஸ்வரா கல்லூரியில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வருகின்றேன். பாடசாலையில் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசில்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்று உள்ளேன்.

எமது பாடசாலையான காங்கேசன்துறை நடடேஸ்வராக் கல்லூரியும், தற்போது தற்காலிக இடத்திலே வளபற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது. எம்மை எமது சொந்த இடத்தில் மீள் குடியேற்றி எமது பாடசாலையினையும் சொந்த இடத்தில் இயங்க அனுமதித்தால் நாம் எமது கல்வியினை சிறப்பான முறையில் முன்னெடுப்போம் என நலன்புரி முகாமில் வசிக்கும் இன்பராஜா மதிஸ்ரா எனும் மாணவி தெரிவித்தார்.

குறித்த முகாமில் வசிக்கும் மற்றுமொரு நடேஸ்வரா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் இன்பராஜா கிருஸ்ணராஜா எனும் மாணவன் புலமை பரீட்சையில் சித்தியடைந்ததுடன், சமூக விஞ்ஞான போட்டியில் பாடசாலை மட்டத்தில் இருந்து வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் ஏழாம் இடத்தினையும் பெற்று உள்ளார்.

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியினை தொடர்ந்த யுவராஜ் யூவிட்சன் எனும் மாணவன் புலமை பரீட்சையில் சித்தி பெற்று தற்போது யாழ். இந்துக் கல்லூரியில் தரம் 6இல் கல்வியினை தொடர்ந்து வருகின்றார்.

இந்த மாணவர்களின் பெற்றோர்களின் கவலை எல்லாம் இடப்பெயர்வினால் தமது கல்வி இடைநடுவில் நாசமானது போன்று தம் பிள்ளைகளின் கல்வி நாமமாக கூடாது என்பதே.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.