புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்

- அந்தனி ஜீவா-

கரவை தந்த கலைமாமணி  இசை நாடகமேதை

தமிழ் நாடக வரலாற்றில் இசை நாடங்கள் பெயரும் புகழும் பெற்றுத் திகழ்ந்துள்ளன. நம்மிடையே இசை நாடக மேதைகள் பலர், தங்களின் ஆளுமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்தி மக்களிடையே செல்வாக்கு பெற்று திகழ்ந்துள்ளனர். அத்தகை இசை நாடக மேதைகளில் மிக முக்கியமானவர் கரவெட்டி தந்த கலைமாமணி இசை நாடக மேதை எம்.வீ.கிருஷ்ணாழ்வார் இன்றைய தலைமுறை அவரை மறந்து விட்டனர். கிருஷ்ணாழ்வாரின் கவி ஆற்றல் மகத்தானது அவர் கவிமணி எனப் புகழ்பெற்றார். நடிப்பதிலும் ஆற்றல் மிக்கவர் அதனால் நாடக கலை மாமணி என்ற சிறப்பு பட்டத்தையும் பெற்றார்.

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கரவெட்டி மேற்கில் வீரகத்தி, இலக்குமி அம்மை தம்பதியினருக்கு 1895ல் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ஆழ்வார்ப்பிள்ளை என்பதாகும். கிருஷ்ணன் வேடத்தில் நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றதால், இவர் அனைவராலும் கிருஷ்ணாழ்வார் என்றே அழைக்கப்பட்டார். அதுவே பின்னர் இவர் பெயராக அறியப்பட்டது.

இசை நாடக மேதை கிருஷ்ணாழ்வார் அவர்கள் கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கற்றார். 1910ம் ஆண்டில் அவரது 15வது வயதிலேயே கலைத்துறை மீது கொண்ட காதலினால் நாடக உலகில் தனது காலடிச் சுவடுகளை எடுத்து வைத்தார் 1917ல் முதன் முதலில் கிருஷ்ணாழ்வார் ‘சுபத்திரை’ நாடகத்தில் நடித்தார். இவரின் அழகுத் தோற்றமும், இனிய சாரீரமும் பாடி நடிக்கும் ஆற்றலும் இவரை நாடக உலகில் தனித்துவமிக்க கலைஞராக எடுத்துக்காட்டியது.

அக்காலத்தில் இசை நாடகங்களில் வரும் பெண் பாத்திரங்களில் ஆண்கள் வேடமிட்டு நடித்தாலென்ன பெண் பாத்திரங்களில் நடித்தாலென்ன அதை ஸ்திரி பார்ட் என்றே அழைப்பார்கள் 1917ம் ஆண்டு “சுபத்திரா திருமணம்” என்ற இசை நாடகத்தில் இருபத்திரண்டு வயது இளைஞரான கிருஷ்ணாழ்வார் நாடகத்தின் பிரதான கதாபாத்திரமான சுபத்திரையாக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

சுபத்திரையாக ஸ்திரி பார்ட்டில் பெருமை சேர்த்த கிருஷ்ணாழ்வார் வள்ளித் திருமணத்தில் வள்ளியாக, கோவலன் கண்ணகியில் கண்ணகியாக, பவளக்கொடியில் சுபத்திரையாக அல்லி அருச்சுணாவில் அல்லியாக, சத்தியவான் சாவித்திரியில் சாவித்திரியாக, அரிச்சந்திராவில் சாவித்திரியாக நல்ல தங்காள் நல்ல தங்காளாக இப்படி பல நாடகங்களில் ஸ்திரி பார்ட்டாக நடித்து பாராட்டு பெற்றுள்ளதுடன், அதேபோல ஆண் வேடங்களை தாங்கி ‘ராஜபார்ட்’ டாக பல நாடகங்களில் நடித்துள்ளார் கிருஷ்ணனாக, எமனாக, நாரதராக நடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இசை நாடக மேதையான கிருஷ்ணாழ்வார் அவர்கள் பாடலாசிரியராகவும், இசை ஆசிரியராகவும் வசன கர்த்தாவாக இருந்தமையால் இவரது ஒவ்வொரு நாடகங்களில் புதுமையிருக்கும், மக்கள் இவரது நாடகங்களை பல தடவைகள் பார்த்து இருப்பார்கள். அந்த காலகட்டத்தில் அநேக வசனங்களையும், பாடல் களையும் மனனம் செய்து நடிப்பார் கிருஷ்ணாழ்வார் நாடகப் பிரதியை முழுக்க மனனம் செய்து ஒரு ஒரு வரிகூட மறக்காமல் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர். இதைப் போலவே நடிகமணி வி.வி.வைரமுத்து விடமும் காணப்பட்டது. இதென்ன நான் யாழ்ப்பாணத்திலும், கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மயான காண்டம் நாடகம் நடைபெறும் பொழுது நேரில் பார்த்துள்ளேன்.

இசை நாடக மேதையான எம்.வீ.கிருஷ்ணாழ்வார் பற்றி தெரிந்தவர்கள் ஒரு சிலர் தான் நம்மிடையே வாழ்கிறார்கள்.

அவர் பிறந்த கரவெட்டியில் தான் பேராசிரியர் கா.சிவதம்பியும் வாழ்ந்துள்ளார். ஒரு சமயம் அவருடன் நாடகம் பற்றி உரையாடிக் கொண்டிருந்த பொழுது அவர் சில கருத்துக்களை என்னிடம் கூறினார்.

கரவெட்டியை சேர்ந்தவர் என்ற வகையிலும், அவர் வாழ்ந்த இடத்திற்கு ஓரளவு அயலில் வாழ்ந்தவன் என்ற வகையிலும் நான் அண்ணாவியாரை அறியத் தொடங்கியது நாற்பதுகளில் தான். ஐம்பது அறுபதுகளில் அவரை அறியும் வாய்ப்பு இருந்தது. இந்த காலகட்டத்தில் அவர் யாழ்ப்பாணத்து ஸ்பெஷல் நாடக மரபில் உச்ச ‘ஸ்திரிபார்ட்’ என்ற நிலையை கடந்து மிகச் சில ஸ்திரி பார்ட் வேடங்களையும், பிரதான ஆண் வேடங்களை ஆடுகின்ற ஒரு மூத்த கலைஞராக காணப்பட்டார்.

“நான் அறிந்த நாட்களில் அண்ணாவியார் எமது கிராமத்தில் முக்கிய நாடக பயிற்றுனராக விளங்கினார்.

அவர் பயிற்றும் பொழுது, அவரது நடிப்பு பயிற்சி பற்றி அறிய முடிந்தது அவரது நடிப்பில் குரல் பயிற்சி முக்கியமானது தெளிவு, உணர்ச்சி ஆகியனவும், அதே நேரத்தில், உரத்த குரல் நிலைப்பட்டனவாயும் இது அமையும். அதன் பின்னர் அங்க அசைவுகள் வீச்சுகள் ஆகியன முக்கியம் பெறும். வேடம் புனைவில் அதிகம் கவனம் செலுத்தினார். என் பேராசியர் கா.சிவத்தம்பி என்னிடம் நேரில் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.