புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
இலங்கை சுற்றுலாத்துறையின் அண்மைக்கால போக்கு

இலங்கை சுற்றுலாத்துறையின் அண்மைக்கால போக்கு

மது நாட்டில் 1983 ஆண்டு யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டுகளிலிருந்து பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் அந்நிய செலாவணியை ஈட்டும் மூலங்களில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்பட்டது. இருந்தும், யுத்தம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து சென்றது. பலநாடுகள் அக்காலப் பகுதியில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள தமது நாட்டு மக்களை தடை செய்தன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய - ஆபிரிக்க நாடுகளும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதனை தவிர்த்து கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தன. எனவே, யுத்தம் இடம்பெற்ற 30 வருட காலமானது மனித உயிர்களை பறித்து, சொத்துக்களை அழித்து பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியதே ஒழிய இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் எத்தகைய குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் அடைந்து கொள்ள முடியவில்லை.

2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய நோக்கமானது இலங்கையை அமைதி நிறைந்த ஒரு நாடாக்குவதாகும். ‘மஹிந்த சிந்தனை’ மூலம் நாட்டினை அபிவிருத்தி செய்ய விழைந்தார்.

சுற்றுலாத்துறைக்கு மஹிந்த சிந்தனையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஏனெனில் சுற்றுலாத்துறை வளர்ச்சியின் மூலமே நாட்டினை சமூக, பொருளாதார ரீதியில் உயர்த்த முடியும் என்பதனாலாகும். மேலும் இலங்கையை ஆசியாவிலேயே சிறந்ததொரு சுற்றுலாத்தள மையமாக மாற்றுவது மஹிந்த சிந்தனையின் நோக்காகும். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையை தொடர்ந்து இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகையானது மாதாந்தம், அதிகரித்த மாதாந்தம், வருடாந்த அதிகரித்த போக்கினை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்களில் மொத்த வெளிநாட்டவர்களின் வருகையை அவதானிக்கின்ற பொழுது மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக வருகை காணப்படுகின்றது. 2012 ஆண்டு 373,063 பேர் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்து இருந்தனர். இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் இந்தியாவிலிருந்து அதிகமானோர் வருகின்றனர். 2012ம் ஆண்டு 176,340 இந்தியர்கள் இலங்கைக்கு வந்தனர். இலங்கைக்கு அருகில் காணப்படும் உப கண்டமாக இந்தியா அமைந்து இருக்கின்றமையும் பல காலமாக அரசியல் சமூக பண்பாட்டு, வியாபார ரீதியாக தொடர்பு கொண்ட நாடாக அமைந்துள்ளமையும் பிரதான காரணங்களாகும்.

இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றவர்களில் அதிகமானவர்கள் விடுமுறை காலங்களை மகிழ்ச்சி கழிப்பதற்கே வந்து செல்கின்றனர். மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 57% ஆண்களாகவும் 43% பெண்களாகவும் காணப்படுவதாக விமான சேவை புள்ளி விபரத் தரவுகள் தெரிவிக்கின்றது. அதேவேளை, 70% முதன் முதலாக இலங்கைக்கு வருபவர்களாகவும் ஒரு தடவை இலங்கைக்கு வந்தவர்கள் 27% ஆகவும் 2வது தடவையாக இலங்கைக்கு வருபவர்களாக 17% ஆனோர் காணப்படுவதாகவும் 2012 ஆண்டு விமான சேவை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் பெறும் வருவாயின் அளவானது அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. 2011ஆம் ஆண்டு 830 மில்லியன் வருவாயினை இலங்கை பெற்றதுடன் 2012ஆம் ஆண்டு 1.039 மில்லியனை இலங்கை பெற்றுக் கொண்டது அதேவேளை இவ்வாண்டின் சுற்றுலாக் கைத்தொழிலில் வாய்ப்புக்கள் 17.4% காணப்படுகின்றது. சுற்றுலாத் துறையானது 2013 ஆண்டு 26.7% வளர்ச்சியை காட்டியது. இலங்கை சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் சுற்றுலாத்துறை தொடர்பான பிரதான நோக்கமாக 2016 இல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதும் 2.75 பில்லியன் வருவாயை பெற்றுக் கொள்வதுமாகும்.

இலங்கை அரசாங்கமானது சுற்றுலாத் துறை தொடர்பான இப்பாரிய நோக்கத்தை அடைந்து கொள்ள துரிதமாக செயற்பட்டு வருகின்றது. இதனை அடைந்து கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றுலா வலயங்களாக பிரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகள் சுற்றுலா வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கமும் இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையும் இதில் ஒருமித்து செயற்படுகின்றன. கற்பிட்டி, பாசிக்குடா, குச்சவெளி, யால முதலிய பிரதேசங்களும் ஏனைய வாய்ப்பான பிரதேசங்களும் துரித அபிவிருத்தி திட்டங்களுக்குள் உட்பட்டு வருகின்றன.

பாசிக்குடா பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்காக 650 மில்லியன் தொகை அரசாங்கத்தினால் முதலிடப்பட்டுள்ளது. பாசிக்குடா கடற்கரையை சூழ 14 ஹோட்டல்களை அமைப்பது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. அதேபோல் கற்பிட்டி பிரதேசத்தில் 80 ஆடம்பர லக்ஷரி ஹோட்டல்கள் அமைப்பது இலக்காக கொள்ளப்பட்டு மொத்தமாக 175 மில்லியன் முதலிடப்படவுள்ளதுடன் ஆரம்ப கட்ட பணிகளுக்காக 75 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதேபோல் ஏனைய பிரதேசங்களும் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றன.

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிப்பதற்காக பல நிகழ்ச்சித் திட்டங்களை இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. இலகுபடுத்தபபட்ட வரிமுறைமை சிறந்த உற்பத்தி மற்றும் தரமான கொள்வனவுக்கான நாடாக இலங்கையை மாற்றுதல், முதலீட்டு அங்கீகார செயன்முறைகள் இலகுபடுத்தப்படல் என்பன அவற்றில் சிலவாகும்.

இதற்கு மேலதிகமாக தாவரவியல் பூங்காக்களை அமைத்தல், மிருகக் காட்சி சாலைகளை அமைத்தல், சரணாலயங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. வவுனியாவில் தாவரவியல் பூங்காவொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய அபிவிருத்தி திட்டங்களினால் இலங்கையின் சுற்றுலாத்துறை மாத்திரம் இன்றி ஆடை, போக்குவரத்து, உட்கட்டுமானம், வியாபாரம், தகவல் தொடர்பாடல் போன்ற துறைகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இலங்கையில் 05 ஆவது அந்நியச் செலவாணியை பெறும் மூலமாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. அதனை 03 ஆவது இடத்திற்கு உயர்த்துவதே தற்போதைய அரசின் நோக்கமாகும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்தி உபாயங்கள் மூலம் அதனை அடையும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாக புலப்படுகின்றது எனலாம்.

ஏ. எச். எப். நிரோஸா...

4ம் வருடம் புவியியல் சிறப்புக்கலை

தென் கிழக்கு பல்கலைக்கழகம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.