புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த தேசப்பற்றும் புரிந்துணர்வும் அவசியம்
ஜனாதிபதியின் நல்லெண்ணத்தை நிறைவேற்றுங்கள்:

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த தேசப்பற்றும் புரிந்துணர்வும் அவசியம்

நான் நாட்டுப்பற்றுள்ள ஒரு மனிதன். எங்கள் நாட்டில் வாழ்ந்து வரும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரையும் நான் எனது உடன் பிறப்புக்களாகவே எண்ணி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறேன். இந்நாட்டு மக்களிடையே இன ரீதியிலோ, மத ரீதியிலோ கருத்து மோதல்களும் பகைமையுணர்வும் இனிமேலும் நீடிப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன். எங்கள் நாட்டின் தேசிய கீதத்திற்கு அமைய ஒரு தாய் பிள்ளைகளைப் போன்று நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டால் மாத்திரமே எங்கள் நாட்டில் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள அதியுன்னதமான கருத்தை நாம் மனதார வரவேற்கிறோம்.

இலங்கையில் இதற்கு முன்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களின் பின்னர் எந்தவொரு தேசத் தலைவரும் இப்படியான யோசனையையும், நல்லிணக்கப்பாட்டையும் முன்வைக்கவில்லை. அன்றைய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களும் இவ்விதம் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தால் எங்கள் நாட்டில் இனக்கலவரங்கள், மதக்கலவரங்கள் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது.

1956ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் மொழிவாதம் எழுப்பப்பட்டு பொது இடங்களில் இருந்த தமிழ் பெயர்ப்பலகைகள் மீது தார் பூசி அழிக்கப்பட்டன. இந்த மொழிவாதம் படிப்படியாக இனவாதமாக மாறியது. இதற்கு அன்றைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவும், தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் செய்து கொண்ட அதிகாரப்பகிர்வு ஒப்பந்தமே அடித்தளமாக அமைந்தது.

இந்த ஒப்பந்தம் நாட்டைப் பிளவுபடுத்தவோ பிரிவினை வாதத்தை தோற்றுவிக்கவோ அடித்தளமாக அமையவில்லை. அவ்விதம் அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தால் அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை நன்கறிந்திருக்கக் கூடிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க போன்ற அரசியலில் அனுபவம் மிக்க ஒரு பிரதம மந்திரி இந்த ஒப்பந்தத்தை திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் செய்து கொண்டிருக்க மாட்டார்.

பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச சபைகள் போன்ற அமைப்புக்களை ஏற்படுத்துவதற்கே வழிகோலியது. இந்த உண்மையை நன்கு அறிந்திருந்த சிங்கள பேரினவாதிகளும் பெளத்த மத அடிப்படைவாதிகளும் அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மறைமுகத் தூண்டுதலின் பேரில் இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவை அநாவசியமாக அச்சுறுத்தி அவ்வொப்பந்தத்தை கிழித்தெறியச் செய்தார்கள்.

இந்த சம்பவமே இலங்கையில் இனப் பிரச்சினையும், பிரிவினை வாதமும் படிப்படியாக வளர்ச்சி அடைவதற்கு அடித்தளமாக அமைந்தது. அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினர் பஞ்சமகா சக்தியான ஆசிரியர்கள், சுதேச வைத்தியர்கள், மகா சங்கத்தினர், தொழிலாளர் வர்க்கத்தினர், விவசாயப் பெருமக்கள் ஆகியோரை பக்கபலமாகக் கொண்டு ஆட்சி அமைத்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்காவின் பலம் வாய்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்பது கடினம் என்பதை நன்கறிந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய முக்கிய தலைவராக விளங்கிய ஜே.ஆர்.ஜயவர்தன நாட்டுக்கு பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட அதனை நாட்டை அழித்துவிடும் ஒரு பயங்கரமான ஒப்பந்தமாக மக்களுக்கு காட்டி சிங்கள மக்களை அரசாங்கத்துக்கு எதிராக கொதித்தெழச் செய்வதற்கு முயற்சி எடுத்தார்.

எவ்வாறாயினும் பிரதம மந்திரி பண்டாரநாயக்க தமக்கு ஆதரவளித்த பஞ்சமகா சக்தியின் எதிர்ப்பை தவிர்க்கும் முகமாக இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். இதனைக் கொண்டு அரசியல் நடத்தும் எண்ணத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்தன இவ்வொப்பந்தத்திற்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் கொழும்பில் இருந்து கண்டிக்கு பாதயாத்திரை சென்றார். இந்த பாதயாத்திரை நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அஞ்சிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.டி.பண்டாரநாயக்க கம்பஹாவில் வைத்து இந்த பாதயாத்திரைக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து அந்த பாத யாத்திரையை வாபஸ் பெற வைத்தார். இந்த நல்ல மனிதர் எஸ்.டி.பண்டாரநாயக்க சமீபத்தில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வொப்பந்தத்தை கிழித்தெறிந்த சிங்கள, பெளத்த தீவிரவாதிகள் தொடர்ந்தும் இனவாதத்தை முன்னெடுத்துச் சென்றதினால் 1958ஆம் ஆண்டின் முதலாவது இனக்கலவரம் தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்டது.

அதையடுத்து, 1977ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் நாட்டின் அதிகாரப் பீடத்தில் ஏறியவுடன் இன்னுமொரு இனக்கலவரம் ஏற்பட்டது. பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுஅதிகார மமதையில் பிரதம மந்திரியாக 1977ல் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பித்த போது பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் உங்களுக்கு யுத்தம் வேண்டுமானால் யுத்தத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று தமிழர்களை ஆக்கிரமிக்கும் தனது அடிமனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அதையடுத்து அன்றைய தினமே கொழும்பிலும் நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று இனங்களுக்கு இடையில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்த விரும்பாத ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழ் மக்களின் அட்டூழியங்களை அடித்து ஒழியுங்கள் என்று தனது இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இராணுவத்தினரின் அடக்கு முறை அதையடுத்து வடபகுதியில் கோரத்தாண்டவம் ஆட ஆரம்பித்தது. இதனால் செய்வதறியாது இராணுவத்தினரின் கொடுமைகளுக்கு இலக்காகிய தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்துவதைத் தவிர தங்களுக்கு விடிவு ஏற்படாது என்ற வேதனைக்குரிய முடிவை எடுத்தார்கள்.

1978ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதியன்று பிரதம மந்திரி ஜே.ஆர். ஜெயவர்தன தனது சர்வாதிகார ஆட் சியை நடத்துவதற்கு மேலும் அதிகா ரத்தைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணத் துடன் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக காலி முகத்திடலில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவ்விதம் ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழர்கள் மீது கொடுமைகளை புரியும் எண்ணத்துடன் செயற்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கத்தில் பெற்றோலியத்துறை அமைச்சராக இருந்த சிறில் மெத்தியு 1983இல் கொழும்பில் முதலில் ஆரம்பித்த கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் போது தனது ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்களை பெற்றோலியக் கூட்டுத்தா பனத்தின் லொறிகள் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிக்கு அனுப்பி வைத்து வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டார்.

இதனால் ஓரிரு மணித்தியாலங்களில் கொழும்பு நகரமே தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கலவரத்தை அடக்குவதற்கு காலதாமதப்படுத்தினார். கொழும் பிலும் ஏனைய நகரங்களிலும் உள்ள தமிழர்களின் சொத்துக்களும் கட்டடங்களும் சீர்குலைக்கப்பட்டு 36 மணித்தியால இடைவெளிக்குப் பின்னர் கலவரங்களை அடக்குவதற்கு இராணுவத்தினரையும் பொலிசாரையும் சேவையில் இறக்கினர்.

1983ஆம் ஆண்டு ஜுலை இனக்கலவரம் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுப்பதற்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அசமந்தப் போக்கும் தமிழர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அவரது அடிமனதில் இருந்த விருப்பமுமே காரணமாகும்.

1983 ஜுலை இனக்கலவரத்துடன் இலங்கையில் ஏற்பட்ட வன்முறைகளினால் எங்கள் நாடு இன்றும் கூட விடுபட முடியாத நிலையில் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் வேதனைக்குரிய நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

1956ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டத்துடன் பாடசாலைகளில் தாய்மொழி மூலம் பாடங்களை கற்றுக் கொடுக்கும் செய்முறை அமுலாக்கத்திற்கு பின்னரே பிள்ளைகள் மத்தியில் நான் சிங்களவன், இவர் தமிழர் மற்றவர் முஸ்லிம் அல்லது பறங்கியர் என்று பிரித்துப் பார்த்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான சூழ்நிலை தானாகவே உருவாகியது. 1956ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையிலுள்ள சகல பெரும்பான்மையான பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமே கல்வி கற்பிக்கப்பட்டது. அன்று ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ் அல்லது சிங்கள மொழி ஒரு பாடமாகவே கற்பிக்கப்பட்டது. இதனால் ஒரே வகுப்பில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என சீனர்கள் கூட ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் போல ஒற்றுமையாக கல்வி கற்றார்கள். அவர்களிடையே இனபேதமோ, மத பேதமோ இருக்கவில்லை.

நாட்டு மக்களிடையே இன, மத பேதங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமாயின் அதனை பாடசாலைகளில் பாலர் வகுப்புக்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அவ்விதம் சகல இனங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் பாடசாலைகளில் ஒற்றுமையாக கல்வி கற்க ஆரம்பித்தால் அவர்கள் பெரியவர்களாகி நாட்டின் எதிர்கால தலைவர்களாக மாறும் போது அவர்களிடையே இனபேதமோ மத பேதமோ இருக்காது.

இந்த உன்னத நோக்கத்தை நாடெங்கிலும் பாடசாலைகளின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாலர் வகுப்பில் இருந்தே சகல இனங்களைச் சேர்ந்த சிறுவர்களும் சிறுமியரும் இன, மத பேதமின்றி ஒற்றுமையாக நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தமது விருப்பத்தை படிப்படியாக பாடசாலைகளில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதற்காகத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாம் இந்தியர்கள், பாகிஸ்தானியர், அமெரிக்கர் போன்று எங்களை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தும் போது நான் இலங்கைத் தமிழன், நான் இலங்கை முஸ்லிம், நான் சிங்களவன் என்று அறிமுகம் செய்துகொள்ளும் பழைய பழக்கத்தை கைவிட்டு இந்தியர்களைப் போன்று அமெரிக்கர்களைப் போன்று நான் இலங்கையன் என்று அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அவ்விதம் செய்தால் தானாகவே எங்கள் மனதில் தேசப்பற்று வலுப்பெறும் என்று பல தடவைகள் தமது உரைகளின் போது ஞாபகப்படுத்தி இருக்கிறார்.

நாம் அனைவரும் எங்கள் மதத்தின் மீதும் இனத்தின் மீதும் பற்று வைத்திருக்கிறோம். நாம் எங்கள் மதத்தையும் இனத்தையும் அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமாயின் இலங்கையில் சகல இன மக்களும் தேசப்பற்றுடன் செயற்பட வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.