புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

அதிகபட்ச தண்டனையே குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும்

அதிகபட்ச தண்டனையே குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும்

நாட்டில் குற்றச் செயல்கள் பரவலாக அதிகரித்திருப்பதனை மறுப்பதற் கில்லை. இன, மத, ரீதியான வன்முறைச் சம்பவங்கள் ஒருபுறம் இடம்பெற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, பாலியல் துஷ்பிரயோகம் என்பனவும் ஆங்காங்கே அதிகரித்திருப்பதனைக் காண முடிகின்றது. இதற்கு எதிர்க்கட்சியினர் போன்று அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இந்த நாட்டின் முன்னேற்றத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உள்ளது என்பதை உணர்ந்து நாம் செயற்பட முன்வர வேண்டும். அந்த மனநிலைக்கு எதிர்க்கட்சியினர் போன்று மக்களில் ஒருசிறு பிரிவினரும் முன்வராமலிருப்பது கவலை தரும் விடயமாகும். நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண் டிராது இதற்கான காரணத்தைக் கண்டறிய முதலில் தலைப்பட வேண்டும்.

எமது நாட்டுச் சட்டங்களிலுள்ள சில சரத்துக்கள் குற்றவாளிகள் இலகுவாகத் தப்பிக்கக் கூடியதாக அமைந்திருப்பதனால் அதனைக் குற்ற வாளிகளும் அவர்களுக்காக வாதாடும் சட்டவல்லுநர்களும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் சட்டம் இறுக்கமாகவுள்ள நாடுகளை எடுத்து நோக்கினால் அந்நாடுகளில் குற்றச் செயல்கள் மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது. ஏனைய நாடுகள் எமது நாட்டைப் போலவே இதற்கு முகங்கொடுத்து வருகின்றன.

எனவே தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்களை இறுக்க மானதாக மாற்றியமைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கட்டுப் படுத்த வேண்டியது அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் தலையாய கடமையும், பொறுப்புமாகும். இத்தகைய அதிகபட்ச தண்டனைகளே குற்றச் செயல்களில் ஈடுபட முனைவோருக்கு பயத்தை ஏற்படுத்தும். இல்லாவிடின் குற்றமிழைத்தாலும் தப்பிக்க வழியுள்ளது என எண்ணிச் செயற்படுவோர் தொகை அதிகரிக்க குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும்.

தற்போது அதிகரித்துவரும் படுபாதகமான சில குற்றச் செயல்களை நோக்குமிடத்தில் மரண தண்டனையை அமுலாக்குவது குறித்து இனியும் ஆலோசனை நடத்துவதிலோ கருத்தறிவதிலோ அர்த்தமில்லை என்றே கூறத்தோன்றுகிறது. குறிப்பாக இனங்களை மத ரீதியாகக் கூறுபோடும் செயற்பாடு, இளைஞர் சமுதாயத்தை அழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனை, சிறுவர்கள், மீதான பாலியல் பலாத்காரம், அதன் பின்னரான ஈவிரக்கமற்ற கொலை, பெண்களை மானபங்கம் செய்தல் என்பன இப் போது மலிந்துவிட்ட ஒரு சமாச்சாரமாகவே கருதப்படுகின்றது. அதிகபட்ச தண்டனை வழங்கப்படாது இவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம். சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமென அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வெறுமனே கூறிக் கொண்டிருப்பதில் எந்தவிதமான அர்த்த முமில்லை. இனியும் காலந்தாழ்த்தாது உடனடியாகவே செயலில் இறங்கி ஆகவேண்டும். அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்றுவரும் இன, மத ரீதியான நிந்தனைகள், வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை, சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான தொடர் செய்திகளைப் பார்க்குமிடத்தில் ஒழுக்கம் மிகுந்த எமது நாட்டு மக்களின் கலாசாரம் குறித்து வெட்கப்படும் நிலை ஏற் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் கலாசாரம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையைக் காண முடிகின்றது. சாதாரண சிறு சண்டை சச்சரவுகளுக்கும் சரமாரியான வாள் வீச்சுக்கள் சாதாரணமாக இடம் பெறுகின்றன. பொலிஸார் எவ்வளவோ எச்சரிக்கைகளை விடுத்தும் இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதற்கு அதிகபட்ச தண்டனை விதிப்பே அவசர தேவையாக உள்ளது. அதற்குச் சட்டத்தில் இடமளிக்கப்பட வேண்டும்.

ஊடகங்களில் வெளிவரும் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்ந்து வெளியே வராத சம்பவங்கள் நிறையவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையாக இருக்கலாம். குடும்ப உறவுகளுக்கிடையே இடம்பெறும் இவ் வாறான சம்பவங்கள் பெரும்பாலும் மூடி மறைக்கப்படுவதுடன் இதுவே கொடூரர்களின் தொடர் குற்றமிழைப்பிற்கும் பெரிதும் காரணமாகவும் அமைந்து விடுகின்றது. இத்தகைய பல சம்பவங்களில் இன்னார்தான் குற்ற வாளி எனக் கண்டுபிடிக்கப்படினும் தண்டனை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதும், வருடக்கணக்கின் பின்னர் குறைந்த பட்ச தண்டனை வழங்கப்படுவது குறித்தும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

கிராமப் புறங்களில் வெளியே சொல்ல வாய் கூசும் பல சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. பாடசாலை செல்லும் வழியில் பாதையோர காமுகர் களால் வஞ்சிக்கப்படும் இளம் தளிர்கள் தமது கல்விச் சுமைக்கு மத்தியில் இவற்றையும் தாங்கிக் கொள்ள நேரிடுகிறது. பாடசாலை வான்களில் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் மேலதிகக் கவனம் செலுத்தியே ஆக வேண்டும் எனும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் சட்டம் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும். பாலியல் பலாத்கார விசாரணைகளை வருடக்கணக்கில் இழுத்துச் செல் லாது தீவிரமான விசாரணை நடத்தி குற்றவாளியை இனங்கண்டதும் கடு மையான தண்டனையை விதிக்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் அதிகபட்சமான தண்டனைகள் மூலமாக இனி இவ்வாறு குற்றமிழைக்க முயல்பவர் பயப்பட வேண்டும்.

இந்தியாவில் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகிப் பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்களது புகைப்படங்கள் பத்திரிகைகளில் பகிரங்கமாகவே வெளியிடப்படும். சம்பவ இடத்திற்குப் பத்திரிகையாளர்கள் அழைக்கப் பட்டு புகைப்படம் எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்க பொலிஸாரே இடமளிப்பர்.

தொலைக்காட்சிகளிலும் இவ்வாறானவர்களின் படங்கள் ஒளிபரப்பப் படும். இது ஒருவகையில் குற்றமிழைக்க முயல்வோரைச் சிந்திக்க வைக்கும். தமக்கும் இதே நிலைவரும், ஊர் உலகம் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் எனும் ஒரு வகைப் பயத்தை மனங்களில் உருவாக்கும். இலங்கையிலும் இந்த நடைமுறையை பொலிஸார் ஊக்குவிக்க வேண்டும். ஊடகங்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் காலம் தாழ்த்தாது உடனடியாக தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அத்துடன் மக்களிடையேயும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சட்ட இறுக்கமே இவ்விடயத்திற்கு விடை தரும் என்பது பொதுவான கருத்து. மக்கள் அனைவரும் விழிப்பாக இருந்து நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக அமைக்க ஒன்றிணைந்து திடசங்கற்பம் பூண வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.