புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

‘KAVITHAIMANJAREY’

வருக றமழானே!

வருக வருக இனிய றமழானே
வசந்த வாசலின் தாழைத் திறந்திடு
தருக தருக புதிய சுகந்தமே
தரணியில் யாவரும் சமமென உணர்த்திடு
பெருநா ளென்னும் திருநாளைக் கொணர்ந்து
பேரின்ப வெள்ளத்தில் எமை யாழ்த்திடு
விருந்தினர் ஒன்றுகூடிடுமொரு நாளாகிட
வாழ்த்தி வரவேற்கிறேன் றமழானே வா

ஏழை யெளியவ ரென்ற பேதம் பாராமல்
எவருக்கும் பசியென்னும் மந்திரமதை ஓதிடவும்
பாலையாகிக் கிடந்த மனங்கள் செழிப்புற்று
பக்திப் பரவசத்தில் மூழ்கிடவும்
சோலையாக மாற்றி வாழ்வை சிறப்பாக
சோபனமாக்கி சுகமாக்கிடவும் தகுந்த
வேளையில் வனப்பூட்ட வந்திருக்குமுனை வர
வேற்பதில் மகிழ்கிறேன் றமழானே வா

புனித ‘லைலத்துல்கத்ரைத்’ தாங்கிவரும்
புதிய சூரியனே இளைய றமழானே
மனிதஇனம் மகத்துவமடையவும் மாண்புறவும்
மண்ணில் வந்து தித்திட்ட மாசில்லா மணியே இள
வேனிலையே ந்தி குருதி சுத்திகரிக்க வந்தாயே
வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்தவும்
நானிலமும் நன்மை பயக்கும் மாதமே
நானுனை உளமாற அழைக்கிறேன் வா


வசந்தமாய் ரமழான்!

வசந்தமாய் நல் ரமழான்
வரியவர்கள் வாழ்வினில்
புனிதனாக நோன்பை
இனியதாக நோற்றிட!

பட்டினியால் நாளாந்தம்
ஒட்டி உருகிட்ட போலன்றி
உண்டு பருகி நலமாய்
உவகையுடன் நோற்று!

மீண்டு வர முடியாத நிலை
தாண்டியே நிராகரிப்பில்
களவு கொள்ளை கொலையால்
விளைவு வாழ்வு குலைந்திடும்!

வல்லவன் அல்லாஹ்
செல்வர் மீது ஸகாத்தை
வலியுறுத்தி வகைசெய்தான்
வறியர் வாழ்வு விடிவு பெற!

பணப்பற்று, கீழ் பண்புகளை
மனதில் இருத்தல் கொள்ளாது
உள்ளம் செல்வமதும் தூய்தாக
அள்ளிவரும் நன்மையை ஸகாத்!


ரம்ழானே! உன்வரவால்...

பிறைதந்த வசந்தமே! ரம்ழானே!
உன்வரவால்
சந்தோசப் பூங்காற்று தாலாட்டுதே!
சன்மார்க்க தேனூற்று சுகம்மேவுதே!

புண்ணியம் பூத்தாடும்
கண்ணியமிகு மாதமே! ரம்ழானே!
உன்வரவால்
ஆசைகள் அடிமைபட்டு அடங்கிப்போனதே!
ஆத்மிகம் சுடர்விட்டு பிரகாசமானதே!

பாவங்களைச் சுட்டெரிக்கும்
பக்குவமிகு மாதமே! ரம்ழானே!
உன்வரவால்
தீமைகள் திசைமாறிய பறவையானதே!
நன்மைகள் வளமேவிய பயிரானதே!

தேன்மதுர வான்மறையும்
லைலத்துல்கதிர் இரவுந்தந்த ரம்ழானே!
உன்வரவால்
இப்லிசின் சாம்ராஜ்ஜியம் சரிந்துபோனதே!
இஸ்லாத்தின் விசுவாசம் உயர்ந்தோங்குதே!

சமத்துவத்தின் மகத்துவத்தை
சாற்றிநிற்கும் சாந்தமிகு ரம்ழானே!
உன்வரவால்
‘ஏழைவரி’ சக்காத்தும் ஏற்றம்பெற்றதே!
இவ்வுலகம் அதைப் பார்த்து போற்றிப் புகழுதே!


றமழானை வரவேற்போம்

செழிப்புடைய றஜபும்
வனப்புடைய சஃபானும்
பொலிப்புடன் வரவேற்க
இறையருட்கலமாம்
அல்குர்ஆன் வேதமதை
பொழிந்துவந்த
லைலத்துல் ‘கத்ர்’ ஐ
ஏந்தி வரும் றமழானே!

உறக்கம் உணவு ஆசைகளடக்கி
வணக்க வழிபாடுகளை நடத்தி
பாவச் செயல்களை முடக்கி
பரிகாரமாய் ‘அமல்கள்’ செய்து
இலக்கங்கள் உள்ளங்களில்
தீனின் ஒளி படைக்க
நாடிவரும் றமழானே!

வருடத்தின் உழைப்புகளில்
சேமித்த வருவாய்களை
பக்குவமாய் பிரித்தெடுத்து
ஏழைகளின் பங்குகளாம்
‘சக்காத்’ ஐ பகிர்ந்தளிக்கும்
ஈகையின் மாதமுன் வரவை
கரமேந்தி வரவேற்போம்
சங்கைமிகு றமழானே!


அவள்

முன்னே இரண்டு மொக்குடை யாளவள்
முல்லைச் சிரிப்புடையாள்! - கவின்
என்னே யென்று ஏங்கிட வைக்கும்
எழிலாள் எனக்குடையாள்!
பின்னே இரண்டு பின்னல் அசையும்
பேதை நடந்திடுங்கால் - தினம்
கன்னம் தடவிக் களிக்கத் தருவாள்
காதல் விருந்திடுவாள்!
*
காலைப் பெயர்த்து ஆடி நடப்பாள்
காந்தம் போலிழுப்பாள்! - தினம்
வேலைப் பழிக்கும் விழியால் வீசி
வெற்றிக் கணை தொடுப்பாள்!
நூலை நிகர்த்த இடையுடை யாளவள்
நுங்காய் மார்புடையாள்! - நிதம்
சாலை தனிலே சந்திப் பாளவள்
சந்தோ சம்தருவாள்!
*
மூன்று கனிகள் தாங்கும் உடலாள்
மோகம் தந்திடுவாள்! - இதழ்
தேன்தா னென்று திளைக்கத் தந்தென்
தேவை தீர்த்திடுவாள்!
கான்வாழ் மயிலின் சாயல் மிகுத்தாள்
கவிஞன் உள்ளத்தில் - அவள்
நான்தான் உங்கள் உயிரே யென்று
நடனம் புரிகின்றாள்!


பூச்சி வீடு

பட்டாம்பூச்சிக்கு பளபளப்பாய் ஒரு வீடு
வண்ணாத்திப்பூச்சிக்கு வடிவான ஒரு வீடு
சிலந்திக்கூடு போல சிறப்பான ஒரு வீடு
வடிவான பூச்சுகட்கு வலையால் ஒரு வீடு

இனங்கள் பெருகி இன்பமாய் வாழவென்று
மிதமான சூட்டினிலே மிகப்பெரிய வீடு
பலவண்ணப்பூச்சிகள் பக்குவமாய் வாழவென்று
பலரின் உழைப்பினிலே பளிச்சென்று ஒரு வீடு

கூட்டுப்புழுக்களுக்கு குட்டிக் குட்டி அறையமைத்து
குடும்பங்கள் வாழ கூட்டாக வழியமைத்து
சலசலக்கும் ஓடை செய்து தாகத்திற்கு வழிசமைத்து
பறந்து சென்று அமர்ந்திருக்க பலமரங்கள் நட்டு வைத்து

தோடம்பழங்களை துண்டு துண்டாய் வெட்டி வைத்து
சாறு குடிக்கும் சாகசத்தைப் பார்க்கின்றார்
பூவிலும் மென்மையுடன் பூச்சிகளைப் பார்க்கின்றார்
பூரிப்புடன் நானும் அதைப் பார்த்து ரசிக்கின்றேன்.


சாமரம் வீச வந்த ரமழானே!

வந்து விட்டாயா புனித ரமழானே
உலக முஸ்லிம்களுக்கு மகிழ்வூட்ட
தந்து விட்டோமே எங்கள் மகிழ்ச்சிதனை
நலமாகவே நோன்பு நோற்றிடவே!

மாதங்கள் பன்னிரெண்டிலே ஒரு மாதமாய்
ஜொலித்திட வந்துதித்திட்டாயே தவறாமல்
வேதமாம் புனித இஸ்லாமிய மார்க்கத்திலும்
நான்காம் கடமையாய் இருக்கின்றாயே நீ

பாவங்கள் சுமந்த மானிட வர்க்கத்தாருக்கு
மன்னிப்பருளும் மாதமும் நீதானே ரமழானே!
சுவனத்தின் கதவுகளையெல்லாம் நோன்பாளிகளுக்காக
திறந்திடவும் வைத்திட வந்த ரமழானே!

வறுமையில் உழல்பவர்களின் கஷ்ட துன்பங்களை
வசதி படைத்தவர்களுக்கு உணர்த்திடும் ரமழானே
மறுமையில் அவர்களுக்கெல்லாம் ஈடேற்றம் கண்டிட
வந்துதித்து விட்டாயே இனிய ரமழானே!

புனிதமான ஓரிரவாம் லைலத்துல் கத்ர் இரவு
எந்த இரவுகளுக்குமில்லாத மகிமையாமதற்கு
மனிதர்களுக்கெல்லாம் பாவமன்னிப்பளிக்குமாமது
இவ்விரவையும் கொண்டுவந்த ரமழானே!

ஏற்றத்தாழ்வுகளின்றி நல்லமல்கள் செய்தோர்க்கு
சுவனம் ஏகிட வைக்க வந்த ரமழானே!
குற்றம் களைந்த நல்லடியார்களாக அவர்களை
மாற்ற வந்த உன்னை வரவேற்கிறோம் ரமழானே!


நஞ்சான அமுதம்!

உன்னை
என்னில் செருகினான்
ஆனாலும்
எனக்கு இரையல்ல...
நீ! என் உடலில்
நீ ஏறும் போது
வளைந்து நெளிந்துதான்
ஏறிக்கொண்டாய்
அதையும் உணர்ந்தேன்
இன்று தூண்டில் முள்
புழுவோடு
பேசிக் கொண்டிருக்கையில்
எச்சிலைத்துப்பி
எறிந்தேன் குளத்தில்!
உணவுத்துண்டை கண்டதும்
இரை கொண்டது மீன்!
மனிதனின்
இரை என்பது தெரியாமலும்
மனிதனுக்கே
இரையாவது புரியாமலும்


பணம் வந்தால்

பணம்வந்தால் நேர்பாதை மாறும் - நல்ல
பண்புகளெங்கோ மறைந்தே ஓடும்!
இனம்வந்தால் முகம் இருளாய் மாறும் - தன்
இரக்க மனமோ அரக்கனாய்ப் போகும்!
குணம்தானாய் மாயம்போல் மாறும் - தான்
குடியிருந்த குடிசை குப்பையாய்த் தோணும்!
தனை ஈன்றோர் ஒரு சுமையாய்ப் போகும் - பணம்
தனிலே புரள்வோர் பெரும் சுகமெனத் தோணும்!

செல்வந்தச் சீமான்கள் நட்பை நாடும் - மனம்
செருக்கால் நிறைந்தே கற்பனைபோடும்!
சொல்வந்தே ஏழ்மை உறவைச் சாடும் - மனம்
சொக்கியே மேலும் பணத்தினைத் தேடும்!
நல்லவனாகவே வாழ்ந்ததை மறக்கும் - மனம்
நாளுக்குநாளாய் இறைதுதியைக் குறைக்கும்!
வல்லவனாகவே தன்னையே நினைக்கும் - மனம்
வரவையும் தாண்டி வீண் செலவினை நிறைக்கும்!

அல்லும் பகலுமாய் அலைந்ததை மறக்கும் - பிடி
அன்னமின்றி வயிறு துடித்ததை மறக்கும்!
சொல்லும் செயலும், கடந்ததை மறக்கும் - தன்
சொந்தம் புரிந்திட்ட பாசத்தை மறக்கும்!
நல்ல நண்பர்கள் நட்பினை மறக்கும் - தனை
நாளும் நேசித்த உயிர்க்காதலைத் துறக்கும்!
செல்லாக்காசுக்காய் வாயை ஆவெனத்திறக்கும் - பணம்
சேர்ந்தாலோ பேராசையால் “மானமோ” பறக்கும்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.