புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
சிறு பராயத்திலேயே பொலிஸ் சீருடையில் ஆசை கொண்டேன்

சிறு பராயத்திலேயே பொலிஸ் சீருடையில் ஆசை கொண்டேன்

முன்னாள் பொலிஸ் போக்குவரத்து பணிப்பாளருமான கே. அரசரட்ணத்தின் நினைவலைகள்

தலைநகர் இலக்கிய மேடைகளில் அண்மைக் காலமாக தடம்பதித்துவரும் நகைச்சுவை பேச்சாளர்தான அரசரத்னம் அவர்கள். பொலிஸ் அதிகாரியாக பணியாற்றியிருந்த போதும் சீருடைக்கான சீற்றமில்லாது சிரிக்க சிரிக்க பேச வைத்து மனதை ஈர்க்கக் கூடிய மனித நேயம் படைத்த அவர், பணியில் எதிர்கொண்ட சம்பவங்கள் கலைத்துறையின் ஈர்ப்புக்கள் பற்றி நிலைவலைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளராகவிருந்து ஓய்வுபெற்ற அவரிடம் பிறந்தகத்தைப் பற்றியும் வித்தியாரம்பத்தைப் பற்றியும் கேட்டேன்.

யாழ். காரைநகர் கிராமம் எனது பிறப்பிடம். எனது தந்தையார் கந்தப்பு கனகரட்ணம் ஓர் அரச ஊழியர். தாயார் பொன்னுப்பிள்ளை. எமது பெற்றோருக்கு ஆசைக்கொரு பெண்ணும் ஆஸ்திக்கொரு ஆணுமாக நாங்கள் இருவர்தான்.

எனது இல்லத்திலிருந்து சற்று நடைத்தூரத்தில் தான் தங்கோடையில் கோவிந்தர் பாடசாலை அமைந்திருந்தது. காலப்போக்கில் யாழ்ரன் கல்லூரி பாலர் பாடசாலையைன அது அழைக்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் அதில் இணைந்த எனக்கு தையல் அம்மா டீச்சர்தான் வித்யாரம்பம் செய்து வைத்தார். இந்திராணி அக்காதான் பாடசாலையை காலையில் திறந்து வைப்பதும் பின் மூடுவதற்கும் பொறுப்பாக இருந்தார். ஆனால் பாடசாலை திறப்பை என்னிடம் தந்து விடுவார். அந்த அரிவரி வகுப்பிலேயே கம்பீர நடைபோட்டு நான்தான் காலையில் பாடசாலையைத் திறப்பதும் பின் மூடுவதுமாக இருந்தேன்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எனது சித்தப்பாவும் சித்தியும் கொழும்பிலிருந்து எங்களது வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும நானும் தங்கையும்தான் பெறாச் செல்வங்கள். எங்கள் மீது அதிக அன்பு கொண்ட அவர்கள் எங்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்று படிப்பிக்க விரும்பினார்கள். தங்கையையும் என்னையும் பிரிய விருப்பமில்லாத தாய் மறுக்கவே ஒருவாறு என்னை மாத்திரமாவது அழைத்துச் செல்ல சம்மதம் பெற்று விட்டார்கள்.

சித்தப்பா கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்க சித்தி வசந்தா அப்புத்துரை இலங்கை வானொலிக் கலைஞராக இருந்தவர். அக்காலத்தில் இலங்கை வானொலியில் ஒலி பரப்பான லண்டன் கந்தையா நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர். கொழும்பிற்கு அழைத்து வந்த என்னை தலைநகரிலுள்ள பிரபல பாடசாலைகளில் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

பாடசாலை அனுமதிக் காலம் பிந்தி விட்டமையால் குறிப்பிட்ட காலத்தில் இடம் கிடைக்காமல் வீட்டிலிருந்த போது வானொலிக் கலைஞர் சோதிநாதன் மாஸ்டர் என்பவர் தற்செயலாக சித்தப்பா வீட்டிற்கு வந்த போது எனது பாடசாலை அனுமதிப் பிரச்சினையைக் கூற, ஏன் அலைய வேண்டும். நான் படிப்பிக்கும் பாடசாலையிலேயே சேர்த்து விடுகிறேன் என்று கூறி, கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள கணபதி வித்தியாலயத்தில் சேர்த்து விட்டார்.

கொழும்பு எனக்கொரு புதிய உலகம் போல் தோன்றி வியப்பைத் தந்தது. வீட்டில் மின்சார லைட், ரேடியோ, வீதியில் இரட்டைத்தட்டு பஸ் இவற்றையெல்லாம் கண்டவுடன் எனக்கு கிராமம் செல்ல மனம் இடம்கொடுக்கவில்லை. கிராமத்தில் லைட் இல்லை, பஸ் இல்லை, வாகனங்கள் அரிதிலும் அரிது. ஆங்காங்கே துவிச்சக்கர வண்டிகளைத் தவிர வேறு எந்த வாகனத்தையும் காண முடியாது. ஆகவே நான் கொழும்பிலேயே சித்தி வீட்டில்தான் இருக்கப் போகிறேன் என்று அப்பாவிற்கும் அறிவித்து விட்டேன்.

இசைப் பிரியனான நான் அக்காலத்தில் சித்தி வீட்டிலிருந்த கிரமப்போனில் இசைத்தட்டு போட்டு பாடல்களைக் கேட்டு ரசிப்பதும், நாடக ஒத்திகைக்கு வரும் கலைஞர்களின் நாடகப் பாணிகளையும் சுவைத்துக் கொண்டு ஓராண்டுக் காலம் படிப்போடு இருந்த என்னை மீண்டும் அழைத்துச் செல்ல அப்பா வந்துவிட்டார்.

அனுராதபுரத்திற்கு இடமாற்றலாகி அப்பா வந்து விட்டதால் அம்மாவும் தங்கையுடன் அங்கேயே வந்துவிடட்டார். என்னையும் தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டுமென்று அம்மாவின் வற்புறத்தலால் நானும் அனுராதபுரம் திரும்ப வேண்டியதாயிற்று.

ஐந்தாம் தரத்தில் அனுராதபுர சென் ஜோசப் கல்லூரியில் இணைந்தேன். தமிழ் - சிங்கள மொழியிலான பாடசாலை அது. ஆறு மாதம் தான் இக்கல்லூரியில் என் படிப்பு. தமிழ் மொழியிலான தனித்துவமான பாடசாலையாக விளங்கிய அனுராதபுர விவேகானந்தா வித்தியாலய ஆசிரியர் நமசிவாயம் மாஸ்டர் என் தந்தையின் நெருங்கிய சிநேகிதர். அவரின் சிபார்சில் என்னை விவேகானந்தாவில் பின்பு சேர்த்து விட்டார். உயர்தர வகுப்புவரை அதே வித்தியாலயத்தில் என் கல்வி தொடர்ந்தது. விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் முதன்மை பெற்றவனாக விளங்கினேன். சிறு பராயத்திலிருந்தே பொலிஸ் அதிகாரியாக வரவேண்டுமென்ற ஆசை. சீருடை, கையில் துப்பாக்கி, துப்பறியும் வேட்கை என என்னுள் ஆர்வம் வேரோடியிருந்தது. நான் வாழ்ந்த சூழலிலிருந்த பொலிஸ் அதிகாரிகளான நவரட்ணராஜா, ரஞ்சித் சமரக்கோன், குமார் போன்றவார்களின் துணிச்சலான செயற்பாடு என்னைக் கவர்ந்தது. இவர்களைப் போன்று நானும் வரவேண்டுமென்ற அவாவே பாடசாலை முடிந்ததும் விண்ணப்பங்களை அனுப்ப தொடங்கினேன்.

நான் முதன் முதலாக பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் பதவிக்கும், மாணவ ஆசிரியர் பதவிக்குமாக இரு விண்ணப்பங்களையும் அனுப்பினேன். இரண்டுக்குமே நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு அழைப்பு வந்தது. பொலிஸ் நேர்முகப் பரீட்சைக்கே சென்றேன். அனுராதபுர மாவட்டத்திலிருந்து பெரும்பான்மை இனத்தவர்கள் மற்றும் எனக்கு படிப்பித்த விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் என பலர் வந்திருந்தனர். இவர்கள் மத்தியில் நான் ஒருவனே தெரிவு செய்யப்பட்டேன்.

அனுராதபுரத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே உதவி இன்ஸ்பெக்டர் என்ற பெருமையுடன் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை மேற்கொண்டேன். பயிற்சிக்குப் பின் உத்தியோகபூர்வமாக முதல் பணியை பாணந்துறையில் ஆரம்பித்து தென் பகுதியின் பல இடங்களில் கடமையாற்றியுள்ளேன். ஹிங்குருவதொட்ட பொலிஸ் நிலையத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்றேன்.

இந்திய அமைதி காக்கும்படை வட பகுதியில் இருந்த காலத்தில் தலைமன்னார், முருங்கன், மன்னார், கிளிநொச்சி ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கமையாற்றியுள்ளேன்.

போர்மேகம் சூழ்ந்த அந்தக் காலப் பகுதியில் பல திகில் சம்பவங்களுக்கு முகம் கொடுத்த காலம். இறுதிக் கட்டப் போரின் போது கிளிநொச்சி மாவட்டப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தேன். சுமார் முந்நூறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என் கண்காணிப்பில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளை போராளிகளின் தாக்குதல் எங்கள் பொலிஸ் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, எதற்கும் முகம் கொடுத்து என் சக உத்தியோகத்தர்களையும் உடமைகளையும் காப்பாற்ற சமயோசிதமாகச் செயல்பட்டேன். என் துணிச்சலான செயற்பாட்டால் அனைத்து சகோதரத்துவ உத்தியோகத்தர்களும் இன்றும் அதைப் பாராட்டி பேசுவார்கள். அதில் சகோரத்துவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிலக்கண்ணி வெடியில் சிக்கி காலில் பலத்த காயமேற்பட்டது. மேலே வான் படையின் தாக்குதல். தரையில் போராளிகள் இதன் மத்தியில் ஒருவாறு பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு காயப்பட்ட அந்த கான்ஸ்டபிளை கொழும்பிற்கு அனுப்பி வைத்தேன். என் உயிரை துச்சமென மதித்து சக ஊழியரைக் காப்பாற்றியதை அவர்கள் இன்றும் நன்றியுடன் நினைவுகூருவர்.

மற்றுமொரு சம்பவம் நான் கொழும்பில் கடமை காரணமாக அளுத்கடை வளாகத்திலிருந்து ஜீப்பில் வந்து கொண்டிருந்த போது, அவ்வழியே ஒருவனைத் துரத்திக் கொண்டு பின்னால் பலர் ஓடி வந்தனர். ஜீப்பை நிறுத்தி அவர்களிடம் விடயத்தைக் கேட்டேன். பணத்தைப் பறித்துக் கொண்டு கள்ளன் ஓடுவதாகக் கூறினர். உடனே நானும் வெளியில் பாய்ந்து கள்ளனைத் துரத்திக் கொண்டு ஓடி களைத்து கள்ளனைப் பிடித்து விட்டேன். எட்டு இலட்ச ரூபா அவனிடமிருந்து மீட்டு பணத்தையும் கள்ளனையும் மருதானையில் ஒப்படைத்தேன். பறி கொடுத்தவர் யார் என்று அறிந்திராத நான், ஒரு நாள் வானொலியில் நேயர்களின் நேர்முக உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு நபர் இச்சம்பவத்தை கூறி ‘நான் வங்கியிலிட எடுத்துச் சென்ற எட்டு இலட்ச ரூபாவையும் கள்ளனிடமிருந்து மீட்டுக் கொடுத்த அந்த பொலிஸ் அதிகாரிக்கு நன்றி கூறி கடமைப் பட்டுள்ளேன்’ என்று கூறினார். அது என் பணிக்குக் கிடைத்த பெறுமதியென்று பெருமைப்பட்டேன்.

இதேபோன்று பல சம்பவங்கள் நினைவில் நிழலாடுகிறது. பக்கம் பக்கமாகச் சொல்லலாம். இருந்தாலும் என் பணிக்காலத்தில் கடமையாற்றிய இடங்களிலெல்லாம் சட்ட விரோதச் செயல்கள் அனைத்தையும் ஒழித்து ஒழுக்கத்தைப் பேண வைத்த பெருமையுண்டு.

கலையார்வத்திற்கு உந்து சக்தியாக அமைந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்.

கொழும்பு டோசன் வீதியிலிருந்த என் பெரியப்பாவின் மகனுக்கு பெளதீகவியல் பாடத்திற்கு ஒரு டியூசன் மாஸ்டரைத் தேடித்தரும்படி பெரியப்பா கேட்டார். அப்போது வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்திற்குப் போனால் நிறைய டியூசன் மாஸ்டரைச் சந்திக்கலாம் என்று கூறினார்கள். இதற்கமைய ஒருநாள் பெரியப்பாவின் மகனுடன் தமிழ்ச் சங்கத்திற்கு போனோம். அங்கே வயது முதிர்ந்தவர்களும் படித்துக் கொண்டு இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர்களெல்லாம் என்ன படிக்கிறார்கள் என்று விசாரிக்க ஒவ்வொருவரும் உயர் பட்டப்படிப்புகளைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் ஓர் ஆசை வந்து விட்டது. அப்படியானால் நானும் படிக்கலாமா என்று கேட்டேன். கடமை நேரம் தவிர ஓய்வு நேரங்களில் வகுப்பில் கலந்து படிக்கலாம் என்று கூறினார்கள்.

பெரியப்பாவின் மகனுக்கு டியூசன் தேடிச் சென்றது எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. பேராதனை பல்கலைக்கழக வெளிவாரி மாணவனாக இணைந்து பீஏ பட்டதாரியாவதற்கு தமிழ்ச் சங்கம் என் கல்விக்கு உயிரூட்டியது. பேராசிரியர் சபா ஜெயராசாவிடம் பொருளியல் பாடம், சிவகுமாரன் போன்றோரிடம் பண்பாட்டு பாடங்களைக் கற்க தமிழ்ச் சங்கம் களம் அமைத்துத் தந்தது. எனக்கு ஆசானாக இருந்த தமிழ் ஆர்வத்தையும் கலையார்வத்தையும் ஊட்டிய அந்த கல்விமான்களின் தொடர்பு இன்று வரை என்னை கலையுலகில் உயர்த்திக் கொண்டு இருக்கிறது. இதை நான் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

தமிழ்ச் சங்கத்தில் பாடம் படித்ததோடு அல்லாமல் அப்பெரியார்களின் தொடர்பால் அங்கே நடைபெறும் கலந்துரையாடல், கலை நிகழ்வுகள் என்று உறவுப் பாலம் நெருக்கமானது.

கம்பவாரிதி ஜெயராஜின் தமிழ்ப் புலமை, இராமாயண வர்ணனை, ஆழமான கருத்துகள் என்னை வெகுவாக கவர்ந்தது. அவரின் சொற்பொழிவுகளை தவறாமல செவிமடுத்து விடுவேன். அவர் நடாத்தும் கம்பன் விழா, இசை விழாக்களில் கலந்து ரசிக்கும் ஆர்வமுள்ள ரசிகன் நான். இதே போன்று சொலமன் பாப்பையா, சுகிசிவம் போன்றவர்களின் பேச்சுக்களிலெல்லாம் என் தேடல் இருக்கும். அந்தத் தேடல்களே என் நகைச்சுவைப் பேச்சுக்கு அடித்தளம் எனலாம்.

இவ்வாறு இலக்கிய விழாக்களில் நான் வழமையாகக் கலந்து கொண்டு வந்தபோது, ஸ்ரீஸ்கந்தராஜா என்றொரு நூலாசிரியரின் புத்தக வெளியீட்டில் என்னை உரையாற்றும்படி அழைத்தார்கள். முதல் மேடைப் பிரவேசம். எப்படியாவது பேசியாக வேண்டுமே, பேசத் தொடங்கினேன். சபையில் இடையிடையே சிரிப்பொலி, கைதட்டல் கரகோஷம். அப்பொழுதுதான் என் பேச்சில் நகைச்சுவை இழையோடுகிறது.

சபையினர் மனப்பூர்வமாக ரசிக்கின்றார்கள் என்பதை உணர்ந்தேன். இதிகாச புராணங்களை நான் தொடவில்லை. அன்றாட இயல்பான வாழக்கையிலுள்ள சம்பவங்களை நினைத்துப் பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும். அதையே நான் சபையறிந்து சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப எடுத்துக் கூறும்போது சுவைத்து இரசிக்கின்றார்கள்.

அன்று வாய்விட்டு சிரித்து ரசித்த அந்த நூலாசிரியர் தொடர்ந்து தான் எழுதிய அத்தனை நூல்களுக்கும் என்னையே தலைமை வகித்து வெளியிட்டு வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அவ்வாறே நானும் தலைமை வகித்து அவரின் பல நூல்களை வெளியிட்டு வைத்தேன்.

இன்று கலை, இலக்கிய வட்டத்தில் இனபேதமற்ற வகையில் பல நிகழ்வுகளுக்கு அழைப்பு. கலைஞர்களை, படைப்பாளிகளை, சபையோரைத் திருப்திபடுத்துவதே என் ஆத்த திருப்தி.

திருமண வாழ்க்கையை

பற்றி கேட்ட போது

உறவுமுறைப் பெண்ணான பொன்மலரை திருமணம் செய்தேன். ஒரு மகளும் இரண்டு ஆண் குழந்தைகளும். இன்று எல்லோரும் வெளிநாட்டில் குடும்பம் சகிதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மனித நேயத்தை ஏற்படுத்தி, இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க வேண்டியதொரு பணியை ஏற்றேன். அதற்கு அணிந்த சீருடைக்கு விசுவாசமாக பணியாற்றி உயர்ந்தேன்.

நல்லிதயங்களின் ஆசீர்வாதம் ஓய்வுபெற்ற பின்னும் அபிமானிகளிடையே சிரித்து சுவைத்து வாழ்கிறேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.