புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

தண்டப் பணம்...

தண்டப் பணம்...

நீதவான் நீதிமன்றம் பகலுணவுக்காக அட்ஜேர்ன் பண்ணப்பட்டிருந்தது.

நேரம் இரண்டரையைக் கடந்திருந்தது. இன்று ஏகப்பட்ட வழக்குகள் காரணமாக காலை ஒன்பதரை மணிக்கு நேரத்தோடு கோர்ட் ஆரம்பித்திருந்ததும் கோலிங் கேஸஸ் மற்றும் நியூ ப்ளைன்ட்ஸ் வழக்குகள் கூப்பிடவே ரொம்ப நேரம் எடுத்திருந்தது.

இன்று விளக்கத்துக்கான அனைத்து வழக்குகளும் நீதவானின் பெஞ்சின் வலப்பக்க ஓரத்தில் இன்று எம்மை விளக்கத்துக்காக விரித்துப்பார்ப் பார்களா? இல்லை இன்னொரு திகதிக்கு ஒத்தி வைத்து விடுவார்களா என்ற சந்தேகம் தீராத தலை வலியாக அடங்கிப் போய்க் கிடக்க, எப்போதோ செய்த விசாரணையில் வழக்கு போடப்பட்டு அதற்கான சாட்சிகளாக வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் சாட்சிகள் இன்றைக்காவது தமது சாட்சி பதிவு செய்யப்படுமா இல்லை சாட்சிக்கு எச்சரிக்கப்ப டுகின்றது. அடுத்த தவணையில் சாட்சி தவறாது வழக்கில் சாட்சியமளிக்க மன்றில் ஆஜராக வேண்டும். இனிமேல் சாட்சிகளுக்கு புதிதாக அழைப்பாணை அனுப்பப்படாது என வழமை போலவே சொல்லி விடுவார்களோ எனகி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவனவன் கவலை அவனுக்கு. கவலைகளின் வடிவங்கள்தான் வித்தியாசப்படுகின்றதே தவிர கவலை என்பதே பொதுவான கன்சப்ட் என்பதனை அந்த நீதிமன்றத்தில் நின்று கொண்டிருந்த கோர்ட் உத்தியோகத்தர்கள் தவிர அத்தனை பேரினதும் முகங்கள் காட்டிக் கொண்டிருந்தன.

அந்தக் கோர்ட் ஷெல்லுக்குள் கம்பிகளின் பின்னால் நிறைந்து போயிருந்தவர்களுக்குள் ஒருவராக தனதிரு கைகளாலும் முகத்தைப் பொத்தி கண்ணீர் வற்றிய கண்களோடு பசியையும் தாகத்தையும் பதிப்பகம் செய்யும் கண்களோடு இயலாமையின் மொத்த உருவத்தினையும் தத்தெடுத்துக் கொண்டேன் என தம்பட்டம் அடிக்கும் கண்களோடு மிரட்சியோடு தெரிந்தார் அனீபா.

அலைகடல் போல் இரைந்து கொண்டிருக்கும் தன் தலைவிதியின் அகோரம் அவரது நெற்றிச்சுருக்கங்களில் வதங்கிப் போன முகத்திலும் உலை ஏற்றி உருகிக் கொண்டிருந்தது.

அவரை உருக்கிக் கொண்டிருந்தது.

காட்டிலிருந்து அன்றாடப் பிழைப்புக்காக குரங்குபாஞ்சான் பிரதேசத்தில் அனீபா வயிற்றுப் பிழைப்புக்காக காய்ந்த விறகுகளை வெட்டிக் கொண்டு வரும் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பகல் பன்னிரண்டு மணியளவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அவருக்கெதிராக அரச காட்டுக்குள் அத்து மீறி நுழைந்தார் எனவும் அவ்வாறு நுழைந்து இருபதினாயிரம் பெறுமதியான பச்சை மரங்களை வெட்டி வீழ்த்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தினார் எனவும் பொலிஸாரினால் குற்றச்சாட்டுப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தனது ஏழ்மை காரணமாக அறியாமை காரணமாக லோயர் எவரையும் தனக்காக அமர்த்தாத அனீபா இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என குற்றச்சாட்டுப் பத்திரம் வாசித்துக் காட்டப்பட்ட உடனேயே ஒப்புக் கொள்ள மொத்தமாக முப்பத்து இரண்டாயிரம் ரூபா தண்டப்பணமும் அவ்வாறு தண்டப்ப ணத்தினைக் கட்டத்தவறும் பட்சத்தில் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு இதோ இந்த கோர்ட் ஷெல்லுக்குள் எந்த வழியும் தெரியாது நிலை குத்திய பார்வையோடு குந்திக் கொண்டிருக்கிறார்.

“ஒரேயடியாய் எப்படி.... எப்படி முப்பத்தி ரெண்டாயிரம் காசினைக் கட்டுவது... கட்டாத பட்சத்தில்... ஆ.. ஆ..று மாத ஜெயில் ஆ... ஆ...” உள்ளுக்குள் திகிலும் பயமும் அவரை எப்பொழுதோ தின்ன ஆரம்பித்திருந்தது.

அன்றாடம் சோத்துக்கே மலையைப் பிளக்கும் நிலையில் உள்ள நான் எப்... படி... இந்த தண்டப் பணத்தைக் கட்டப் போறன்... பொண்டாட்டி மூணு புள்ளங்க.

இவங்க கதி...

இப்படியே மெளத்தாகிரலாமா...

இயலாமை மனசுக்குள் இடியாக இறங்குகின்ற போது கண்களில் கண்ணீர் மழையின் மேக முடிச்சுகள் அடைமழையாகப் பொழிய ஆரம்பித்து விடுகின்றன.

இன்னிக்கு நாலு மணிக்குள்ளே இந்த தண்டப்பணத்தைக் கட்டணுமே... இல்லாட்டா கைல வெலங்க மாட்டி ஜெயிலுக்கு இழுத்திட்டுப் போயிடுவாங்களே... ஜெயிலுக்கு பொயிட்டா ... அப்புறம் பொண்டாட்டி புள்ளங்க கதி...

அடி வயிற்றில் ஒரு டன் ஐஸ்கட்டிகள்.

அடி வயிற்றில் கொட்டப்பட்ட ஐஸ்கட்டிகள் தொண்டை வரைக்கும் படிந்து போயிருந்தது. கம்பிகளுக்கப் பின்னே நின்று கொண்டு காலத்தின் கைதியாகி வாழ்வின் எல்லாப்பக்கங் களிலும் சிரச்சேதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த அனீபாவுக்கு அவரது வீட்டுக்காரி சற்றுத்தள்ளி கோர்ட் விராந்தாவில் இன்னும் அழுதவாறு நின்று கொண்டிருந்த அந்தக்கோலம் கம்பிகளினூடே ஒரு பளிங்காகத் தெரிந்தது.

காலை பொலிஸில் இருக்கும் போது அவரைப்பார்க்க வந்தவள் பொலிஸ் வாசலில் நீதிமன்றத்துக்கு அவரைக் கொண்டு வருகின்ற போது பின்னாலேயே பஸ் பிடித்து கோர்ட்டுக்கு வந்து அவரைப் போலவே அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு இனி என்ன செய்ய எனும் துயர்கவிழ்ந்த சிந்தனையோடு அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

தவிரவும் அனீபாவின் மூன்றாவது பிள்ளை சஹானா உச்சக்கட்ட நியுமோனியாவால் பாதிக்கப்பட்டு முந்தா நாள் பொது வைத்தியசா லையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிவ் அனுமதிக்கப்பட்டு இப்போது வரை உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். மரணத்தோடு மல்யுத்தம் செய்து கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தை உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் கடைசிப் போராட்டத்தின் உச்சக்கட்டக் காட்சி யில் ஐ. சி. யு வோர்ட்டில் நின்று கொண்டிருந்தது.

அனீபாவுக்கும் அனீபாவின் மனைவிக்கும் ஒரே நேரத்தில் ஓராயிரம் துயரங்களும் கவலைகளும் ஒரே அணியில் சேர்ந்து கொண்டு துரத்தித் துரத்திக் கொன்று கொண்டிருந்தது.

அனீபா குந்திக் கொண்டிருந்த ஷெல்லுக்குப் பக்கத்தில் அவனது மனைவி வர ஷெல்லுக்கு காவலிருந்த ஜெயில்கார்டுகள் அவளை “எஹாட்ட யன்ட... எஹாட்ட யன்ட”

ஷெல்லுக்குள் அடைக்கப்பட்டவர்களுடன் வெளியிருந்து வரும் எவரும் பேசுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஜெயில் கார்ட்களுக்கு ஏற்கனவே உத்தரவு போட்டிருப்பதன் பின்னணியில்தான் அனீபாவின் மனைவியை அவரோடு பேச விடாமல் ஜெயில் கார்ட்டுகள் துரத்திக் கொண்டிருப்பது ...

எனினும் அனீபாவின் மனைவி...

“ஒரே ஒரு நிமிஷம்... அல்லாவுக்காக என்ன அவரோடு பேச விடுங்க... காலையிருந்து சோறு தண்ணியில்லாம இங்கதான் கெடயா கெடக்குறன். என்ட புள்ள வேற ஆஸ்பத்திரியில நெனவுல்லாமக் கெடக்கு... எனக்குப் பைத்தியம் புடிச்சிடும் பொல இருக்கு... ஒரு தடவை என்ன அவரோட பேச விடுங்க...” என அழுதாள் அவள்.

“என்னம்மா ஒனக்கு சொன்னா விளங்காதா... நீதவான் ஐயா இந்த இடத்துல யாரையும் அனுமதிக்க வேணாமுன்டு ஓடர் போட்டிருக்கார். இப்ப ஒண்ண விட்டா எங்க தொழிலே பறி போயிடும். இன்னும் பத்து நிமிஷத்துல கோர்ட் தொடங்கிடும். எங்கள சிக்கல்ல மாட்டிடாதிங்கம்மா... அங்கிட்டு போங்கம்மா...” என தம்பக்க நியாயங்களை அந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கீழிறங்கி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“இல்லீங்க... ஒரேயொரு நிமிஷம்.. எனக்கு அனுமதி தாங்க... அப்புறமா ஒடனே யோயிடுவன்... எம்புள்ள ஆஸ்பத்திரியில சாகக் கிடக்குங்க... கொஞ்சம் கருணை காட்டுங்க...” என அவள் அழுததிலும் அவள் ரொம்பவும் அடி பட்டிருக்கின்ற ஆன்மா என்பதனை அவளது அலங்கோலமான தோற்றத்திலும் கண் கண்ட காடசிகளான இந்த ஜெயில் கார்ட்டுகளுக்கு நீதவானின் கட்டளையையும் மீறி கொஞ்சம் கருணை சுரந்திருக்க வேண்டும்.

“சரி... சரி... டக்குன்னு கதச்சிட்ட உடனே இந்த இடத்தை விட்டுப் போயிடணும்.”

என அவளை அனீபாவோடு பேச அனுமதித்தனர். ஏற்கனவே துண்டு துண்டாய் நொறுங்கி சிதைந்திருந்த கூட்டுக்குள் அடை பட்டிருந்த அனீபாவை மிக நெருக்கத்தில் கண்டவள் ஓவென சத்தமிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஏய் என்ன இது... இதுதான்... ஆரம்பத்திலேயே இங்க வர வேண்டாம்னு தடுத்தேன். கேட்டாத்தானே ... இப்படி சத்தம் போட்டு அழுதா... பிரச்சின ஒங்களுக்கிள்ள... எங்களக்குத்தான்... அழறதா இருந்தா கோர்ட்டுக்கு வெளியே போய் அழுங்க. இங்க நின்னுக்கிட்டு அழ வேண்டாம். அங்கால போமா...” எனப் பேசிய ஜெயில் கார்ட்டுகளின் வார்த்தைகளில் நீதவான் மீதான பயம் அபரிதமாகக் கலந்திருந்தது.

“மன்னிச்சுக்குங்க...” என அழுகையை நிறுத்தியவள் “என்னங்க இது... எப்படிங்க... ஏன் அல்லாஹ் நம்மள இப்படி சோதிக்குறான்... அங்கால ஆஸ்பத்திரியில நம்ம புள்ள ஊச பாஷ இல்லாத நெனவில்லாமக் கெடக்கு... இங்க நீங்க ஜெயிலுக்குள்ள... முப்பத்தி ரெண்டாயிரத்துக்கு எங்கெங்க போறது... வீட்டுள ரெண்டு புள்ளங்களும் தனியாக வேற இருக்காங்க... ஆஸ்பத்திரியில புள்ளக்கு மருந்து வாங்க பத்தாயிரம் வேணுமாம்... எங்கங்க போறது... யா அல்லாஹ்... என்ட உசிர எடுத்திடு...” என்று கொட்டித் தீர்த்தாள்.

“என்னால என்னதான் செய்ய முடியும். வெளில வந்தாலாவது ஏதாவது செய்யலாம். யாருக்கிட்டயாவது கால்ல விழுந்து கைய புடிச்சி கடன் ஏதாவது கேக்கலாம்... நான் உள்ளுக்க இரக்கன்... என்னால என்ன செய்ய முடியும்...” சொன்னவரது ஆற்றாமை ஜீரணித்திருக்காதிருந்தது. “அப்ப என்னதாங்க பண்ணுறது...”

“ஏங்க பேசாம இருக்கீங்க...”

“.... என்னய என்ன செய்யச் சொல்லுற...”

“.....?.....”

அல்லாஹ் ஏன் இந்த சோதனை....”

“டைமாச்சு... பேசினது போதும்... இந்தா கோர்ட் தொடங்கப் போவுது... ஜட்ஜ் ஐயா வந்தாஅம்போதான். போங்கம்மா அங்காள... இந்தா போங்கம்மா... எம்மா எங்களப் போட்டு வருக்கிaங்க...” ஜெயில் கார்ட்டுக்குள் அனீபா வின் மனைவியை அவசரப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

“இந்தா போறேங்க... இன் னும் கொஞ்சம்தான்... அப்புறம் போயிடுவேன்... அல்லாஹ் வுக்காக... கொஞ்ச எடம் தாங்க” என்றவள் அனீபாவின் பக்கம் திரும்பி...

“என்னங்க... அப்ப என்னதாங்க வழி... இப்ப தண்டப்பணத்தைக் கட்டாட்டி ஒங்கள நாலு மணிக்கப்புறம் ஜெயிலுக்கு கொண்டு போயிடுவாங்களாமே... அங்காள ஆஸ்பத்திரியில அந்தா இந்தான்னு நம்ம புள்ள... இங்க நீங்க. நான் என்ன செய்யுறது... அப்படி என்னதாங்க நாங்க பாவம் பண்ணினோம்...”

“ஒரு குண்டு மணி நகை கூட இல்ல... அப்படி இருந்தாவாச்சும் அத வித்து கொஞ்ச காசாவது புரட்டி எடுக்கேலும்... நம்ம உசிரு தவிர நம்மட்ட சொத்துன்னு வேறென்ன இருக்கு...”

இதை விட அவளால் விரக்தியாகப் பேச முடியாது...

“ஒண்ணு சொல்லுறன் செய்யறியா...” “என்னங்க..”

இரு விழிகளிலும் கேள்விய லைகள் மிதந்து திரிய அனீபாவை நோக்கினாள் அவள்.

“அதான் நம்ம குடியிருக்கிற காணிய இன்னிக்கே விக்கு றத்துக்கு ஏற்பாடு செய்... இத விட்டா வேற வழியே இல்ல...”

“என்னங்க நாம குடியிருக்கிற காணிய விக்க சொல்லுaங்களா... அதையும் வித்துட்டா நாங்க எங்கதான் குந்துறதுங்க... தெரு வுக்குத்தான் வரணும்.”

“இல்ல... நமக்கு இருக்கிற ஒரே வழி இதுதான்.. மொதல்ல நம்மட காணிட பேர்மிட் பத்தி ரத்த எடுத்துட்டுப் போய் எப்ப டியாவது இன்னிக்கே வித்திடப் பாரு... நமக்கெல்லாம் எவன்டி ஆயிரக் கணக்குல கடன் தரப் பொறான்...” “அதில்லங்க”

“குடியிருக்க காணி இல்லாட் டாலும் உசுராவது மிஞ்சட்டும்...”

“உசாவி நிசப்தவன்”

என்ற கோர்ட் பொலிஸின் அதிர வைக்கும் குரலோடு ஒத்தி வைக்கப்பட்ட நீதிமன்றம் மீண்டு ஆரம்பமாகியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.