புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

கிராமங்களை விட்டு மக்கள் தப்பி ஓட்டம்

ஈராக்கில் முன்னேறிவரும் தீவிரவாதிகள்

கிராமங்களை விட்டு மக்கள் தப்பி ஓட்டம்

சீரசுப் படைகளின் எதிர்ப்பை முறியடித்து ஈராக்கின் வடக்குப் பகுதியில் தீவிரவாதிகள் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதையடுத்து அச்சமடைந்துள்ள பொதுமக்கள் தமது கிராமங்களை விட்டு வெளியேறி குர்துக்களின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை குவிந்தனர்.

பிற பகுதிகளை விட இந்த பிராந்திய பாதுகாப்பு மிக்கதாக கருதி நூற்றுக்கணக்கானோர் இங்கே தஞ்சம் புகுந்துள்ளனர். தஞ்சம் புகுபவர்களில் ஏராள மானோர் ஷியா பிரிவினர். இவர்கள் மோசுல் நகருக்கும் வெளியே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நகரை இந்த மாத தொடக்கத்தில் ஐஎல்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சன்னி தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

சிரியா ஈராக் எல்லைகளின் இரு புறத்திலும் முழுக்க முழுக்க இஸ்லாமிய அதிகார பகுதியை அமைப்பது என்ற நோக்குடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஈராக் அரசுப் படைகளை எதிர்த்து போரிட்டு முன்னேறி வருகின்றனர்.

வடக்கில் கிறிஸ்தவர்கள் வசிக்கும் கிராமங்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதால் கிறிஸ்தவர்களும் குர்து தன்னாட்சிப் பகுதியில் தஞ்சம் கேட்டு வருகின்றனர். குர்திஷ் பிராந்தியத்தின் எல்லைப் பகுதியிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஹம் தானியா என்ற இடத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

ஷியா பிரிவினர்களை ஈவிரக்க மின்றி தீவிரவாதிகள் கொல்கின்றனர். ஷியா பிரிவினரின் வீடு ஒவ்வொன்றையும் தீ வைத்து கொளுத்துகிறார்கள். குபாபகுதியில் தங்கி இருக்க அஞ்சி அனைவரும் வெளியேறி விட்டனர் என்று ஒருவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் மீது சிரியா தாக்குதல்

பாக்தாதின் வடக்கே உள்ள பலாத் பகுதியில் உள்ள விமானப் படை முகாமை தாக்குவதாக அச்சுறுத்தி இருந்த சன்னி தீவிர வாதிகளை எதிர்த்து அரசு ஆதரவு படைகள் சண்டையிட்டன என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கில் அரசுப்படைகளை எதிர்த்து சண்டையிடும் சன்னி தீவிரவாதிகளை எதிர்த்து சிரியா நாட்டின் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதை ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி வியாழக்கிழமை உறுதி செய்தார்.

ஆனால் இந்த தாக்குதலை நடத்தும்படி ஈராக்கால் வேண்டுகோள் விடுக்கவில்லை என்று தெரிவித்த மாலிகி, தீவிரவாதிகள் மீதான தாக்குதலை வரவேற்பதாக அறிவித்தார். இந்நிலையில், பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் பாக்தாதுக்கு பயணம் மேற்கொண்டு ஈராக் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்கிடையில் ஈராக் தளபதிகளுடன் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஜூலை 1ல் நாடாளுமன்றக் கூட்டம்

ஜூலை 01ம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது. அதில் பங்கேற்க புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய அரசு அமைப்பது பற்றி விவாதிக்கப்படும் என அறிவித்துள்ளார் அதிபர் ஜலால் தலிபினி.

இஸ்ரேல் அதிபர் ஷிமோன் கருத்து

இதேவேளை ஈராக் இனியும் ஒருங்கிணைந்த தேசமாக இருக்க சாத்தியம் இருப்பதாக தான் நினைக்கவில்லை என இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரிஸ், அமெரிக்க அதிபரிடம் கூறியுள்ளார்.

ஈராக்கில் உள்நாட்டு பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் ஐக்கிய எமிரேட் மற்றும் இஸ்லாமிய நாடுகள் பேச்சுவார்த்தை நடாத்தி ஆலோசனை கூற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரிஸ், அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலத்தில், அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசியபோது ஈராக் தற்போது பிளவுப்பட்டிருக்கும் நிலையிலிருந்து மீள உள்நாட்டு தலைவர்கள் இணைந்து சுமுகமான நிலைப்பாட்டை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றே நான் எதிர்ப்பார்க்கிறேன்.

அங்கிருக்கும் 3 தரப்பினரும் இணைந்து செயல்படும் நிலையில், தகுந்த சமயத்தில் அமெரிக்காவும் தனது படைகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இராணுவத்தால் மட்டுமே இந்த முடிவு கொண்டுவரப்பட கூடாது. ஆனால், ஈராக் கட்சிகள் இதனை செய்ய முன்வராது என்று நன்கு தெரிகிறது. ஆகையால் ஈராக் இரண்டாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளது இவ்வாறு பெரிஸ் அதிபர் ஒபாமாவிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒபாமா - பெரிஸ் சந்திப்பின்போது அமெரிக்காவில் இயங்கி வரும் யூத அமைப்புத் தலைவர்கள் சிலரும் உடனிருந்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.