புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
கொழும்பு தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள வீதி சங்கம் ஒழுங்கை எனப் பெயர் மாற்றம்

கங்கை வேணியனின் அயரா முயற்சிக்குக் கிடைத்த அபார வெற்றி

கொழும்பு தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள வீதி சங்கம் ஒழுங்கை எனப் பெயர் மாற்றம்

கொழும்பு தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள 57 ஆவது ஒழுங்கையை சங்கம் ஒழுங்கை எனப் பெயர் மாற்றம் செய்யும் நிகழ்வு கடந்த செவ்வாயன்று மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கங்கை வேணியன் கடந்த மூன்று வருடங்களாக அயராது மேற்கொண்ட முயற்சியின் பலனாக இப்பெயர் மாற்றியமைக்கப்பட்டமை பாராட்டத்தக்க விடயமாகும். தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புக்கள் கிளம்பிய போதும் தனிமனிதனாக நின்று அவர் இதில் வெற்றி கண்டிருக்கிறார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, மாநகர முதல்வர் முஸம்மில் மற்றும் மாநகர பிரதி முதல்வர் ரியுட்டர் பெரேரா, மாநகர ஆணையாளர் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இம்முயற்சியை வெற்றிகரமாக வென்றெடுத்த கங்கை வேணியன் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியிலிருந்து ஒருவரேனும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் இந்தச் சங்கம் அமைந்துள்ள வீதியின் பெயரை மாற்ற வேண்டும் என கங்கை வேணியன் பாடுபட்டாரோ அத் தமிழ்ச் சங்கத்திலிருந்தும் கூட எந்தவொரு அங்கத்தவரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

மாநகர சபையில் கங்கைவேணியன் எவ்வாறு தனித்து நின்று இவ்வீதியின் பெயர் மாற்றப் பிரேரணையைக் கொண்டு வந்தாரோ அதேபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் பின்னால் தனது ஆட்டோவில் தனது பணத்தையும் செலவு செய்து தனித்தே ஓடித்திரிந்து எடுத்த காரியத்தை வென்றெடுத்து அதனைத் தனித்து நின்றே இன்று அவ்வீதியின் பெயர்ப்ப லகையைத் திறந்தும் வைத்தி ருக்கிறார். உண்மையிலேயே பாராட்டத்தக்கதொரு விடயம் இது. சக பிரதிநிதிகள் எதிராக நின்றபோதும் ஜனாதிபதி வரை இவ்விடயத்தைக் கொண்டு சென்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய காரியத்தைச் சாதித்து முடித்துள்ளார்.

தனக்கு உதவி செய்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஆளுநர் அலவி மெளலானா, மேயர் முஸம்மில், பிரதி மேயர், மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு கங்கை வேணியன் கண்ணீர் மல்கித் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். சொந்த உறவுகள் தனது கனவை உருக்குலைக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலும் இந்த ஆளுங்கட்சி உறவுகள்தான் கைகொடுத்து இன்று தனது கனவை நனவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாதை பெயர் மாற்று விழாவில் பொதுபல சேன அமைப்பு அங்கத்தவர்கள் வந்து தாக்குவார்கள் எனப் பிரசாரம் செய்து பொது மக்களை விழாவில் பங்கெடுக்க விடாது தடுத்ததில் தனது கட்சிக்காரருக்கே பெரும் பங்கு இருந்தது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும் காட்டிக் கொடுக்காது விழாவை அவர் சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறார். இனியும் நீங்கள் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கத்தான் வேண்டுமா என்றே விழாவில் கலந்து கொண்ட பலரும் இவரைக் கேட்டதாகக் கேள்வி. அதற்கும் அவர் அலட்டிக் கொள்ளாது மெளனமாகவே இருந்துள்ளார். சங்க முன்வாசலில் மேடை அமைத்து விழா நடந்து கொண்டிருக்கையில் உள்ளே அமர்ந்திருந்தும் வெளியே முகம் காட்ட விரும்பாத சங்க அங்கத்தவர்கள் குறித்தும் கங்கை வேணியன் கவலைப்படவில்லை. தான் எடுத்த கருமத்தைச் சிறப்பாகவே செய்த முடித்தார்.

தமிழ்ச் சங்க வீதி எனப் பெயரை மாற்றவிடாது சங்கம் வீதி எனப் பெயரை வைத்தமை சிலரது தேவையற்ற, விதண்டாவாத விமர்சனத்திற்கு ஆளாகியமைக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விழாவில் தெளிவானதொரு பதிலளித்தார். அதாவது தமிழ்ச் சங்கத்திற்கு வடக்கே மூன்று வீடுகள், கிழக்கே இரண்டு வீடுகள் மட்டுமே உள்ளது. மொத்தமாக சுமார் நூறு அடி தூரத்தையே இப்பாதை கொண்டுள்ளது. அதனால் சங்கம் வீதி என்பது இந்தத் தமிழ்ச் சங்கத்தையே குறிக்கும். இதனைச் சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனை உள்ளேயிருந்த தமிழ்ச் சங்க அங்கத்தவர்கள் ஒலிபெருக்கி மூலமாகக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள், பொதுபல சேன வரும் என்று கதை அளந்து குழப்பத்தை ஏற்படுத்த முனைந்த அவரது கட்சிக்காரர்களும் விழாவை வேவு பார்க்க அனுப்பிய தமது சகாக்கள் மூலமாக உடனடியாகவே அறிந்திருப்பர். ஒரு நூறு அடிப் பாதை விடயத்தில் நூறு பிளவு தேவைதானா?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.