புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

ராசாக்கள் வாறாங்கள்...

ராசாக்கள் வாறாங்கள்...

புயற்காற்று திடீரென எழுந்து சுழற்றி அடித்து வீசத் தொடங்கியது. பாலைதீவைத் தாண்டி வலைகளைப் படுக்கத் தொடங்கிய கந்தன், சலீம், பண்டா மூவரும் வலைகளைப் படுத்து ஓயவும் காற்று எழுந்து வீசவும் தொடங்கி இருந்தது.

கடையாலில் யேசு சுக்கானைப் பிடித்துக் கொண்டு நின்றான். தொழிலில் மண்டாடி யெனப்படும் அவனது திறவுக்கே பாலைதீவுக்கு அப்பால் கச்சதீவை நோக்கி எஞ்சின் போட் ஓடத் தொடங்க வலைகளையும் படுக்கத் தொடங்கி இருந்தனர்.

அறுபத்தைந்து வலைகளும் கடலில் நீளப்படுக்கத் தொடங்கி முடிவாகப் போகையிலே கடற்களத்தில் இந்த மாற்றமும் ஏற்படத் தொடங்கிற்று.

கடலில் போட்ட வலைகளில் இடையிடையே கட்டப்பட்டிருந்த போயா மிதவைகளால் அடையாளப்படுத்தி அவை நீண்டு காணப்பட்டன.

கடற்களத்தில் தோன்றிய மாற்றத்தைக் கண்ட மண்டாடி யேசுவுக்கு நோக்கம் பிழையாகவே தென்பட்டது. உடனடியாக போட்டைத் திருப்பிக் கொண்டு கரை வரவும் முடியாத விதத்தில் இரு மணி நேரமாக ஓடி ஆழ்கடல் பிரதேசத்தில் இயந்திரப் படகு நுழைந்திருந்த பின்பாகவே இந்தப் பிரளயம் தோன்றியதால் ஏதும் செய்ய முடியவில்லை.

திடீரென மேலேழுந்து வந்த கடலலை போட்டை அரைப்பனை உயரத்துக்குத் தூக்கிப் போட்டது. கூடவே கடல் நீரையும் படகினுள் அள்ளிப் போட்டு நிறைத்திருந்தது.

‘டேய் சலீம் போட்டெஞ்சினைக் குறைச்சுவிடடா...’ கடையாலில் நின்ற யேசு உரக்கக் கத்தினான். தோஞ்சு போன கோழியைப் போல சலீம் இஞ்சின் கூட்டுக்கை இறங்கி படகு ஓடும் வேகத்தைக் குறைத்து விட்டான்.

‘அல்லாஹு அக்பர்...’

தெய்வத்தை வழிபட்டுக் கொண்டே இஞ்சின் கூட்டால் சலீம் வெளியே படகின் மேல் தளத்துக்கே வருகையில், இன்னொரு தடவையும் கடலலை மேலெழுந்து படகைத் தூக்கி வீசியது.

சுக்கானைத் தளம்பாமல் பிடித்துக் கொண்டாலே படகு கடலில் மூழ்காமல் இருக்கும் என்பதில் கவனம் எடுத்துக் கொண்ட யேசு.

‘ஆண்டவரே எம்மைக் காப்பாற்றும்...’ என்றும் வேண்டிக் கொண்டான்.

‘புத்தம்... சரணம்... கச்சாமி...’

பண்டா பெலத்தை குரலெழுப்பிக் கொண்டே சுக்கான படகின் உள்ளே நின்று பிடிக்கக் கூடியதாக நீண்ட சுக்கான் கட்டையை எடுத்து யேசுவிடம் கொடுக்க முயன்றான்.

‘கந்தண்ணே வலைகளை இணைத்துள்ள கயிறுகளை போட்டில் இருந்து அறுத்தெறி யண்ணே...’

மண்டாடி போட்ட சத்தத்தைக் கேட்டபடி ‘சிவ சிவா’ என வேண்டிக் கொண்ட கந்தன் பிணைத்துள்ள கயிறுகளை வெட்டி அகற்றுவதில் மாய்ந்தான்.

‘டேய்... மூண்டு பேரும் வள்ளத்துக்கை போட்ட கடற்தண்ணியை அள்ளி வெளியில் ஊத்துங்கடா...’

இரைந்து மண்டாடி யேசு படகு நிதானமாக இருக்கும் சமயம் பார்த்து சுக்கானில் நீண்ட கைப்பிடிக் கட்டையை செலுத்துவதில் கவனம் எடுத்துக் கொண்டான்.

-*-

‘வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கம் மேலெழுந்து கடல் கொந்தளிப்பு ஏற்படுவதுடன் பலத்த காற்றும் வீசி. இடி முழக்கம் மின்னலுடன் கூடிய சூறாவளியாக மாற்றமடையும் அபாயம் உருவாகி உள்ளது. கடல் தொழிலாளர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.’

காலையில் இருந்து வானொலியில் தெரிவிக்கப்பட்டு வந்த அபாய அறிவிப்புகள் எதனையும் அறிந்திராத சம்மாட்டி செல்வராசா, தொழிலாளர்களை வழமை போன்று ஒன்று சேர்த்துக் கடலுக்கு அனுப்பி வைத்து இரண்டு மணி நேரங்களின் பின்பாக தோன்றி இருந்த காற்று மழை, இடிமுழக்கம் மின்னலுடன் கூடிய சூறாவளியைக் கண்டு அதிர்ந்தே போய் விட்டார்.

‘அப்பேம் கடற்கரேல தொழிலுக்குப் போக ஒருவரும் வராமல் போட்டுகள் கட்டிக் கிடந்ததைப் பாத்திட்டு நான்தான் அவங்கள் பிந்திக் கொண்டிருக்கிறாங்கள் எண்டு புழையா நினைச்சிட்டான்.

மனதில் திரையிட்ட நினைவால் மீள்கையில் பெரும் முதல் கொண்ட தொழில் எஞ்சின் போட் அனைத்தும் அழியப் போவதை நினைத்து உயிருடன் பிடித்து நிலத்தில் போட்ட மீன் தெறித்துத் துள்ளிப் பாய்வது போல் ஒரு நிலையில் நில்லாமல் பதகளித்தார் செல்வராசாச் சம்மாட்டி.

‘என்ர பேய் மனம் மற்றவர்களை முந்திப் போனா கூட உழைச்சிப் போடலாமெண்டுதான நினைச்சுது’

கடலோரம் தொழிலை அனுப்புவதற்காக மாண்டாடி யேசு தொழிலாளிகள் பண்டா, சலீம், கந்தன் ஆகியோருடன் அடுக்குகளைப் பார்த்து நிற்கையில் மனதில் தோன்றிய எண்ணம் இடையே வந்து போயிற்று அவருக்கு.

‘கண்டறியாத ஒரு டிவி எந்த நேரம் பாத்தாலும் நாடகமும், படமும் அதுவும் இதுவுந்தான் பார்க்கிறே... ஒரு நேரமாவது செய்தியைப் போட்டிப் பாக்கிற இருக்கே...?

தொழில் சார்ந்த பிணக்குகள், தொழிலாளர் பங்குப் பிரச்சினைகள், மீன், றால் சந்தைப் படுத்தப்பட்ட வரவு, செலவுகள் போட் எஞ்சின் வேலைகள், வலை, கயிறுகள் பார்த்து செப்பனிடலென்று அலையும் சம்மாட்டிக்கு ஒரு நேரமாவது ஓய்ந்திருந்து டிவியையோ, றேடியோவையோ கேட்கவா முடிந்துள்ளது?

வீட்டில் எந்த நேரமும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் இருந்து கொண்டிருக்கும் மனைவி, பிள்ளைகள் மீது தன்னுடைய இயலாத்தன்மையைக் கொட்டித் தீர்க்கிறார் அவர்.

‘இருபது லட்சம் முதல்... நாலு தொழிலாளியள்... எல்லா போச்சு... எல்லாம் போச்சே...’

சூறாவளி எழுந்து வீசியது வெளியில், வீட்டுக்குள் செல்வராசாச் சம்மாட்டி சன்னதம் கொண்டிருந்ததால், எந்த நேரமும் கலகலப்பாகக் காணப்படும் வீடு செத்துக் கிடந்தது என்பதை விடவும் சூறாவளி ஆகி வீசியது என்பதே பொருந்தும்.

கடற்றொழில் திணைக்களம் விதானை பொலிஸ் ஆகிய இடங்களில் தெரிவிக்க வேண்டிய கடமைகளும் அவருக்கு இருந்ததால் சூறாவளி என்றும் வீட்டில் அடைந்து கிடக்க முடியவில்லை.

-*-

இதுவரை ஐந்துக்கும் ஏற்பட்ட தடவைகள் படகு பேரலைகளால் துக்கித் தூக்கி வீசப்பட்டிருந்தது. திசைகள் எதுவும் தெரியவில்லை. பொழுது இருள ஆரம்பித்தது. மழை தூறல் போட்டுக் கொண்டிருந்தது. மின்னல் வெட்டி முழங்கியது. காற்றும் சீறி, மூசி வீசிக் கொண்டுதான் நின்றது. ஆசாட்டமாகத் தெரிந்த கக்கடதீவு தெரியாமல் மறைந்து போனது.

‘யேசண்ணெ... போட்டைக் கக்கதீவுக் கரையைப் பிடிக்க பிடியண்ணே சுக்கானை...’ கந்தன் பெலத்தாகக்குரல் வைத்தான்.

‘ஓமடா... இல்லாம நானென்ன மண்டாடி... அதவிட்டிட்டு நீங்கள்ளாம் கடல் பெரிசா வந்து போட்டைக் குத்தி... போட் உடைஞ்சாலும் கமல்ல பாஞ்சுதப்பக் கூடிய ஆயித்தமா இருங்கோடா...’

மண்டாடி யேசு கத்தினான்.

‘நாலு பேருக்கும் மிதவைப் போயாக்களிருக் கண்ணே... அதோட தண்ணி கொண்டத பைவர்களும் கிடக்கு.... தண்ணியை ஊத்திப் போட்டெடுக்கலாம்...’ சலீம் இரைந்தான்.

‘இப்போதைக்குத் தண்ணியை ஊத்திப் போடா தேங்கடா... தண்ணி பிறகுந்த தேவைப் படலாமெல்லோ...’ பண்டா இவ்வாறு முன்னெச்சரிக்கை விடுத்தான்.

‘இருட்டீட்டுது சாஜ்ச்சர் லைட்டை பத்தவையுங்கோடா...’ சுக்கானில் கவனமாக நின்ற மண்டாடி யேசு கத்தினான்.

‘அல்லாஹு அக்பர்’ சலீம் குரல் வைத்ததும், ‘ஆண்டவரே ஆவி ஆனவரே’ என யேசுவும், புத்தம் சரணம் கச்சாமி...’ என்று பண்டாவும், திருச்செந்தில் முருகப் பெருமானே’ எனக் கந்தனும் மாறி மாறி தத்தமது இஷ்டதெய்வங்களை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

நால்வரும் மதியம் போப்பிறேஷனில் குடித்து வந்த கள்ளும், செமிபாடடைந்து கண்ணீர் குடிக்கக் கூட முடியாத நிலைமையில் வயிற்றில் பசி ஏற்பட்டதும் தெரியாமல், போட்டுள் நின்று தங்களையும், போட்டையும் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையிலும், தமது குடும்பங்களை நினைத்துக் கலங்கவே முடிந்தது.

ஏகாந்தில் பெருவெளியான சமுத்திரக் கடல் நீரில் பற்றிக் கோடெதுவும் இல்லாமல் பரிதவிக்கும் அந்த ஜீவன்களை பக்கத்தில் இருக்கும் கக்கடதீவு அந்தோனியார் காக்க வேண்டும்.

‘அந்தோனியாரே எங்களை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுங்கள்... கோடி புதுமைகள் செய்த அற்புதரே அந்தோனி முனியோரே நீங்கள் தான் தஞ்சமையா...?

மதங்களால் மாறுபட்டிருந்த நால்வரும் ஒரே குரலில் கக்கடதீவு அந்தோனியாரை நினைத்து வேண்டிக் கொண்டாலும், தாங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் இக்கட்டால் மீண்டு உயிர் பிழைப்போமா என்பதில் ஐயப்பாடே தோன்றியது.

இருந்தும் சளைக்காமல் போராடிக் கொண்டே படகுள் நின்றார்கள்.

-*-

‘சம்மாட்டி செல்வராசாவின்ர தொழில்ல நாலுபேர் கடலுக்குப் போனவங்களாம், மேகம் காத்து ரெண்டும், இரண்டேக் காலேல இருந்தே புளையாக் கிடக்கேக்கை... விசரங்கள் வெளிக்கிட்டுப் பொயிருக்கிறாங்க... பாருங்கோவன்...’

சங்கதியை அறிந்த ஊரே கேள்விப்பட்டு பல வாறாகக் கதைக்கவும், பேசவும் திட்டவும் ஆரம்பித்து இருந்தது.

அவனுக்கு உழைச்சு வைச்சிருக்றே பத்தாதெண்டு அந்த ஏழை பரதேசிகளைத் தொழிலுக்குப் புடிச்சு அனுப்பி இருக்கிறானே செல்வராசாச் சம்மாட்டி...’

ஊரென்று இல்லாமல் கடற்றொழில் திணைக்களத்தில் தெரிவிக்கப் போன போதும், பொலிஸாருக்குத் தெரிவித்து கடற்படை மூலமாக தேடுதல் போடவும் நாடிச் சென்ற இடங்களிலும் சம்மாட்டி செல்வராசாவை வார்த்தைகளால் குத்திக் குதறியும் இருந்தனர்.

‘ஆண்டவரே என்னை மன்னித்தருளும்... தொழிலுக்குப் தொழிலுக்குப் போனவர்களுக் கொண்டுமில்லாமல்... தொழிலும் போட்டும் இல்லாமல் போனாலும், போட்டும் அந்த நாலு பேரும் திரும்பிக் கரைசேர அருள்பாலித்திரும் ஆண்டவரே... கக்கடதீவு அந்தோனியாரே நீரே கோடி அற்புதர்... அற்புதங்களைக் காட்டி அருளுமையா...’

தகவல்களைக் கொடுக்க வேண்டிய இடங்களில் தெரிவித்து விட்டுத் திரும்பி இருந்த செல்வராசாச் சம்மாட்டி யாகப்பர் ஆலயத்துள் வீழ்ந்து கிடந்து கோவில் பீடத்தை நோக்கி ஆண்டவரிடமும், அந்தோனியாரிடமும் ஒப்புவித்து அரற்றிக் கொண்டிருந்தார்.

-*-

பேரலை ஒன்று மேலேழுந்து இயந்திரப் படகை ஏந்திக் கொண்டு சென்று கக்கடதீவுக் கரைக்கு ஏத்திவிட்டு இருந்தது. நங்கூரத்தைத் தூக்கிக் கரையில் போட்டு விட்டு நால்வரும் அந்தோனியார் ஆலயத்துள் நுழைந்து அற்புதரின் திருவடியில் வீழ்ந்து சரணடைந்து கிடந்தார்கள்.

சாப்பாட்டுக்குக் கொண்டு போயிருந்த அனைத்தும் சாப்பிட முடியாத அளவுக்கு சிதைந்து போயிருந்தன. குக்கரை ஆலயத்துள் இருந்த தீப்பெட்டியை எடுத்துப் பத்த வைத்துத் தண்ணியைச் சூடாக்கி, படகில் வழமையாகக் கொண்டு செல்லும் சீனி, தேயிலையில் தேனீர் தயாரித்து குடித்து வயித்துக் காந்தலை கொஞ்சம் தீர்த்துக் கொண்டனர் நால்வரும்.

விடிபொழுது தோன்றுகையில் இரவிரவாக ஆடிய ஊழிக்கூத்தை நிறுத்தி அனைத்தும் ஓய்ந்து போயிருந்தன.

‘வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் நேற்று மாலை சூறாவளியாக விரிவடைந்து மணிக்கு 150 மைல் வேகத்தில் இலங்கையைக் கடந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை நோக்கிநகர்ந்துள்ளது.

-*-

காலநிலை அறிவித்தலை செல்வராசாச் சம்மாட்டி வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியில் அனைவரும் பார்த்தும், கேட்டும் கொண்டிருந்தனர்.

அதற்கு முன்னதாக உள்ளூர் கடற்றொழில் சங்கங்களின் ஏற்பாட்டுடன் ஏழெட்டு இஞ்சின் படகுகள் மன்னார் கடல் பிரதேசம் பாலைதீவு கச்சதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, கக்கடதீவுப் பிரதேசங்களுக்கும் தேடுதல் செய்ய அனுப்பப்பட்டிருந்தன.

ஒலி எழுப்பிய கைத்தொழில் பேசியைக் காதில் வைத்துக் கொண்டிருந்த செல்வராசாச் சம்மாட்டியின் முகத்தில் பூரிப்பும், வாயில் சிரிப்பையும் கண்ட குடும்பத்தார் முகங்களிலும் விடிவு தோன்றியது.

கக்கடதீவுக் கடற்கரையில் ஒதுங்கிய படகையும், நான்கு மீனவர்களையும் ரோந்து சென்ற கடற்படையினர் மீட்டுள் ளதாகவும் படகையும் மீனவர்களையும் இறங்குதுறையை நோக்கிக் கொண்டு வருவதாகவும் பொலிசில் இருந்து கடற்றொழில் திணைக்களத்திற்கு அறிவித்தல் வந்திருக்கு... அவை என்னை அங்கை வரட்டாம்...’

மனைவி, பிள்ளைகளிடம் தெரிவித்த சம்மாட்டி இறங்கு துறையை நோக்கி விரைகிறார். அங்கே தேடுதல் செய்யப் போயிருந்த எஞ்சின் படகு ஒன்றில் இவர்களது படகு தொடுத்துக் கொண்டு வரப்பட்டிருந்தது. வலைகளில் கொஞ்சம் மீட்கப்பட்டு படகுக்குள்ளே கிடந்தன.

செல்வராசாச் சம்மாட்டியின் போன உயிர் திரும்பியது போல் உள்ளத்தில் உவகை பிறந்தது. இனியொரு முறை இப்படியான தவறுக்கு அவரது வாழ்க்கையில் இடமிருக்கப் போவதில்லை.

‘ராசாக்கள் கக்கடதீவு அந்தோனியாற்றை புதுமேல தப்பீனீங்களாடா...?

இறங்குதுறையில் இருந்து ஊருள் நுழைந்து வீதிகளில் நடந்து போன தொழிலாளர் நான்கு பேரையும் ஊரே திரண்டு வந்து வரவேற்றது.

சூரியனும் சரிவுப் பொழுதில் பிரகாசமாக வெறித்துக் கொண்டிருந்தான்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.