புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
பணிவும் எளிமையுமே எனக்கு உயர்வைத் தந்தது

பணிவும் எளிமையுமே எனக்கு உயர்வைத் தந்தது

நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் அமைச்சர் மன்சூர்

பால்ய பருவத்திலிருந்தே கல்வியில் நாட்டம் கொண்டு கிழக்கிலங்கை வாழ் சகோதரத்துவ இனத்துடன் வாழ்ந்து இன்று கல்வி மானாக, சட்டத்துறை வல்லுநராக, சிறந்த அரசியல் பிரமுகராக இலங்கை வாழ் மக்களிடையே தனித்துவமாக பரிணமிக்கும் ஏ. ஆர். எம். மன்சூரின் வாழ்க்கைப் பயணத்தை திரும்பி பார்க்கின்றேன்.

முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சராகவும், மாவட்ட அமைச்சராகவுமிருந்து பணியாற்றிய அவரிடம் பிறந்தகத்தையும் வித்தியாரம்பத்தைப் பற்றியும் கேட்டேன்.

எனது பால்ய பருவம் கல்வி வாசனை அறியாத கிராமமொன்றில் தான் விதைக்கப்படுகிறது. கல்முனைக்குடியில் பழமை தழுவும் மார்க்கப் பற்றுள்ள ஆலிம் குடும்பத்தைச் சார்ந்த அப்துல் ரஸாக்கின் கடைசி மகனாகப் பிறந்தேன். நான்கு சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட குடும்பம்.

எளிமையான வாழ்க்கையை மேற்கொண்ட எங்கள் குடும்பம் போடியார்கள் அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. தந்தை மார்க்கம் போதிக்க மூத்த சகோதரர்கள் அன்றாட உழைப்பு ஊழியம் தேடி வாழ்வாதாரம் சுழன்று கொண்டிருந்த காலகட்டத்தில் கல்முனை மூன்றாம் குறிச்சி தர்மப்பள்ளிக் கூடத்தில் என் வித்தியாரம்பம் ஆரம்பமாயிற்று. சமகாலத்தில் குர்ஆன் மத்ரஸாவிலும் மார்க்க கல்வி பெற்றேன்.

அந்தக் காலத்தில் கிராமங்களில் தர்மப் பாடசாலைகள்தான் இன்றைய மொண்டசரியைப் போன்று இயங்கியது. கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட எமது கிராம தர்மப் பாடசாலையில் எனது தமிழ்ப் படிப்பை ஆரம்பித்தேன். இதன் அதிபராக கந்தையா மாஸ்டர், மருதமுனையைச் சேர்ந்த பதூர்தீன் மெளலானா, சாய்ந்தமருதைச் சேர்ந்த சாஹுல் ஹமீத் ஆசிரியர்கள் தமிழ் போதிக்க மக்குல் ஆலிம் ஆசிரியர் அரபு போதித்தார். அரிவரி முதல் ஐந்தாம் தரம் வரை தர்மப் பாடசாலை தந்த அத்திவாரம் என் கல்வி உயர்வுக்கு பசளையாக இருந்தது.

கல்முனைக்குடி கிராமத்தின் வரலாற்றில் முதன் முறையாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இரு மாணவர்களில் நானும் ஒருவன். மற்றவர் எஸ். ஆதம்பாவா முன்னாள் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

புலமைப் பரிசில் சித்தியடைந்த நான் மேற்கொண்டு கல்வியைத் தொடர பொருளாதாரத் தடை பெரும் இக்கட்டாக இருந்தது. நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற என் அவாவை தாயிடம் எடுத்துக் கூறினேன். என் ஆசையைப் புரிந்து கொண்ட தாய் மூத்த சகோதரர்களிடம் எடுத்துக் கூறினாள். எழுத வாசிக்கத் தெரிந்தால் போதும் மேற்கொண்டு என்ன படிப்பு என்று கல்வியின் மகிமையை அறியாத அக்காலத்தில் பின்வாங்கிய சகோதரர்களிடம் பிடிவாதமாக நமது குடும்பத்தில் கடைசி மகனையாவது முடிந்தளவு படிப்பிப்போம், நீங்கள் ஒத்துழையுங்கள் என்று மன்றாடினாள் என் தாய். அதற்கேற்ப ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு 1943ல் டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா ஸ்தாபித்த காத்தான்குடி சென்றல் கல்லூரியில் இணைந்தேன். கல்வி இலவசம் என்றாலும் விடுதிக் கட்டணங்கள் செலுத்த வேண்டும். தமிழ் மூலமான கல்வியானாலும் சாஹ¥ல் ஹமீத் மாஸ்டர், பதியுதீன் மாஸ்டர் போன்று ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்ற அவா என் மனதில் வேரூன்றியது. கந்தசாமி, இளையதம்பி போன்ற பட்டதாரி ஆசிரியர்கள் தமிழறிவை ஊட்டிய போதும் ஆங்கில மோகம் என்னை ஆட்கொண்டதால் ஒரு வருடத்திற்குப் பின் கிறிஸ்டியன் மிஷனரிஸ் நடாத்திய கல்முனை மெதடிஸ்த பாடசாலையில் இணைய என் மனம் துடித்தது. தனவந்தர்களின் புதல்வர்களும் நிலச்சுவந்தார்களின் புதல்வர்களும் கல்வி கற்கும் அக்கல்லூரியில் சேர்வதென்றால் பெரும் பணம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மீண்டும் என் தாயாரிடம் என் ஆசையை எடுத்து இயம்பினேன்.

என் அறிவுத் தாகத்தைப் புரிந்து கொண்ட தாய் சகோதரர்களுடன் வாதாடினாள். தாயின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாத சகோதரர்கள் உதவிக் கரம் நீட்டினார்கள். கிறிஸ்டியன் கல்லூரியில் இணைந்தேன். மாதாந்தம் விடுதி கட்டணம் பன்னிரெண்டு ரூபாய் (12/-) மூத்த சகோதரர்கள் மனமுவந்து வழங்கினார்கள்.

அக்கல்லூரியின் அதிபராக ஜோர்ஜ் நல்லதம்பி, கல்லாறைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை. கல்முனையைச் சேர்ந்த எமில்டன் ஞானமுத்து, மிஸ் வேலுப்பிள்ளை என் நினைவில் இன்றும் நிழலாடும் ஆசிரியப் பெருந்தகைகள். ஆங்கில இலக்கிய இலக்கணங்களை அச்சொட்டாக மனதில் பதிய வைத்தவர்கள். புதினப் பத்திரிகைகள் வாசனை அறியாத அக்காலத்தில் மாணவர்களை வாசிப்பில் ஊக்குவிப்பதற்காக அதிபர் ஜோர்ஜ் நல்லதம்பி தமிழ், ஆங்கில பத்திரிகைகளை கல்லூரி வாசிகசாலையில் அன்றாடம் வைத்திருப்பார்.

அன்றைய தினசரிகளில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக பாரத சுதந்திரப் போராட்டத்தின் பிரதிபலிப்புகளே முக்கிய செய்திகளாக இருக்கும். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், ஜின்னா போன்ற மகான்களின் துணிச்சலான போராட்ட நிகழ்வுகள், விடுதலை வேட்கை என்னைக் கவர்ந்தது. இவர்கள் அனைவரும் பரிஸ்டர், சட்ட வல்லுநர்கள் இவர்களைப் போன்று நானும் சட்டத்தரணியாக சமுதாய நலன்காக்கும் தலைவனாக வரவேண்டும் என்ற வேட்கையும் அந்தச் சின்ன வயதிலேயே என்னுள் ஊடுருவிக் கொண்டது. என் வாசிப்பையும் ஆற்றலையும் அறிந்து கொண்ட அதிபர், ஒருநாள் ‘நான் கொழும்பிற்கு போகின்றேன் என்ன வேண்டும் என்று கேட்டார்’, ‘ஜவஹர்லால் நேருவின் சரிதை’ ஆங்கில நூலொன்று வாங்கி வாருங்களென்று நான் சேர்த்து வைத்திருந்த பத்து ரூபாவைக் கொடுத்தேன். அந்தப் பணத்திற்கு பழைய புத்தகக் கடையொன்றில் தேடிப்பிடித்து வாங்கி கொண்டு வந்து தந்தார். அவரே என் வாசிப்பு தேடலுக்கு உரமூட்டினார்.

இக்கால கட்டத்தில் பாரத விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஜின்னாவுக்கு ஆதரவு தெரிவித்தும் நடைபெறும் கூட்டங்களிலெல்லாம் நான் ஆர்வத்தோடு கலந்து கொள்வேன். மர்ஹும் பZல் மெளலானா போன்றோரின் பேச்சுவன்மையில் கட்டுண்டிருந்தேன்.

இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படிப்பு. வகுப்பிலும் விளையாட்டிலும் முதல் மாணவனாக திகழ்ந்த போதும் பொருளாதார நெருக்கடியால் அந்த கல்லூரியில் தொடர முடியவில்லை.

சுவாமி விபுலானந்தர் ஸ்தாபித்த கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தேன். கல்வியின் மகிமையையும் ஒழுக்கத்தின் பேணலையும் கற்றுத் தந்த கல்விக் கூடம் அது. அதிபர் அம்பலவாணர் ஓர் இலண்டன் பட்டதாரி, கணபதிபிள்ளை பட்டதாரி ஆசிரியர், நிர்வாக அதிகாரி குகதாசன் போன்றோர் இன பேதமின்றி போதித்த பாடங்கள் தான் தமிழ் இஸ்லாமிய ஐக்கியத்தின் வித்துகள். சுவாமி விபுலானந்தரின் தத்துவம், சுவாமி இராமகிருஷ்ணரின் போதனைகள், மகாத்மா காந்தியின் சத்திய சோதனை, ரவீந்திரநாத் தாகூர் படைப்புகள் என தமிழ் இலக்கிய வரலாற்று முக்கியத்துவத்தையெல்லாம் எங்கள் மனதில் விதைத்தார்கள். கல்விமான்கள் இலக்கிய மேதைகள் தமிழகத்திலிருந்து வருகை தரும் போதெல்லாம் இக்கல்லூரிக்கும் விஜயம் செய்து தமிழ் இலக்கியத்தை பிரதிபலிக்கக் கூடிய சொற்பொழிவுகளை நிகழ்த்துவார்கள். நல்லதொரு இலக்கிய பாசறையாக அமைந்தது. (தொடரும்...)

தமிழ் பண்பாட்டைப் போன்று இஸ்லாமிய மாணவர்களுக்கும் இஸ்லாமிய கலாசார விழுமியங்களை பேணுவதிலும் போதிப்பதிலும் முன்மாதிரியாக நடந்து கொண்ட கல்விக் கூடம் அது. கிழக்கு மாகாண தனவந்தர்களின் புதல்வர்கள் தமிழ், இஸ்லாம் என்று பேதமின்றி விடுதியிலிருந்து படித்தோம். ரமழான் காலத்தில் இஸ்லாமிய மாணவர்கள் கட்டாயம் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற நியதியைக் கையாண்டார்கள். அதற்கான தேவைகளையும் நிறைவு செய்து கொடுப்பார்கள்.

விடுதியில் சமயப் பற்றோடு, ஒழுக்கம் பேணப்பட மகத்தான காலம் அது. விடுதி வாழ்க்கை மறக்க முடியாத நினைவுகள். மின்சார வசதியில்லை இயற்கைத் தேவைகளை நிறைவேற்ற மலசல கூடங்கள் அக்காலத்தில் இல்லை. காட்டை நோக்கி சென்றுதான் இயற்கை தேவைகளைப் பூர்த்தி செய்தோம். அது ஒரு காலம்.

எட்டாம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த போது மட்டக்களப்பில் அரச கல்லூரி கலாசாலையொன்று திறக்கப்பட்டது. பிரபல கல்விமான் வி. நல்லையாவால் ஸ்தாபிக்கப்பட்ட இக்கலாசாலைக்கு ராஜகாரியப்பர் தலைமை வகித்தார். இலவச கல்வியொன்றாலும் தேர்வு பரீட்சை மூலம்தான் மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். அன்று பதிவாளராகவிருந்த மொஹிதின் என்பவர் என்னையும் எனது மற்றொரு உறவுக்காரரின் மகனையும் அப்பாடசாலையின் தேர்வு பரீட்சைக்கு அழைத்துச் சென்றார். தேர்வில் நான் தேறிவிட்டேன். பாடசாலை அனுமதி கிடைத்தது. ஆனால் ஊருக்கும் பள்ளிக்கூடத்திற்கும் பல மைல் தூரம். விடுதியில்தான் தங்க வேண்டும். மீண்டும் தாயிடம் என் நிலையைக் கூற, என் தாயும் சகோதரர்களிடம் வாஞ்சையாகக் கேட்க என் கல்வி மீண்டும் தொடர்ந்தது.

புலவர்மணி பெரிய தம்பிபிள்ளை, ஞான சூரியம், மகாதேவா, நவரட்ணராஜா, சபா ரட்ணம் என்று தலைசிறந்த கல்விமான்களிடம் பயிலும் வாய்ப்புக் கிட்டியது. உயர்தர வகுப்பு வரை கற்றேன். தராதரத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழலில் கொழும்பு தலைநகர் சென் ஜோசப் கல்லூரியில் இணைந்து எச். எஸ். ஸி.யைப் பூர்த்தி செய்ய இறைவன் நாடினான். அதேவேளை இக்கல்லூரியில் லண்டன் பாடத்திட்டங்களைக் கொண்ட அக்குவைனஸ் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. சக மாணவ தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட பாடத் திட்டங்களில் ‘லண்டன் யுனிவர்சிட்டி இன்டர் எக்கோன மிக்ஸ்’ பொருளாதார பாடத்தையும் படித்து சம காலத்தில் பட்டம் பெற்றேன்.

சட்டததரணியாக வேண்டுமென்ற என் பேரவாவை தொடும் காலகட்டத்தை அடைந்து விட்டேன். பல்கலைக்கழகத்திற்கு செல்வதென்றால் அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். பட்டப்படிப்போடு கஷன்சில் ஒப் எடியுகெஷனில் இணைந்ததால் மூன்றாண்டுகளில் எட்வகேட் ஆகிவிடலாம். ஆகவே, நான் இதனையே தேர்ந்தெடுத்து என் சட்டப்படிப்பை மேற்கொண்டேன்.

1957ம் ஆண்டு முதன் முதலாக சட்டத்தரணியாக காலடி எடுத்து வைத்தேன். பிரபலயமான சிவில் சட்டத்தரணி நெவில் சமரக்கோனிடம் பயிற்சியாளராக இணைந்தேன். சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜீ. ஜீ. பொன்னம்பலம், கொல்வின் ஆர். டி. சில்வா, திருச்செல்வம், ஜோர்ஜ் சிட்டி, லயன் ஒப் த பார் என்று அழைக்கப்பட்ட எச். பி. பெரேரா போன்றோருடன் அளவளாவும் சந்தர்ப்பம். அவர்களுடைய வாதாடும் திறமை, சட்ட நுணுக்கங்களையெல்லாம் அருகிலிருந்து பெறக்கூடிய வாய்ப்பு நெருக்கமாக இருந்தது. இவ்வாறு பதினாறு ஆண்டுகள் கொழும்பு சட்ட மன்ற வளாகத்தில் என் அனுபவங்களை புடம்போட்டேன். கிழக்கின் ஒருவனாக நீண்ட காலம் தலைநகரில் சட்டத்தரணியாக விளங்கியமை என் பிறந்த மண்ணிலும் பெருமைத் தேடித் தந்தது.

இத்தருணத்தில் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்தேன். டி. எஸ். சேனநாயக்கா அரசின் முதல் பாராளுமன்றத்தில் உள்விவகார துறை அமைச்சராக விருந்தவரும், கல்முனை மண்ணின் மைந்தனுமான கேட் முதலியார் எம். எஸ். காரியப்பரின் மகளை கரம்பிடித்தேன்.

சட்டத்தரணியாகவிருந்து அரசியல் பின்னணியில் மிளிர்ந்த குடும்பத்தில் இணைந்தமையால் என் திறமையைக் பயன்படுத்த விரும்பினார் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க. தன்னைச் சந்திக்கும்படி ஒருநாள் அழைப்பு விடுத்தார். 1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கல்முனைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியானவர் நீர்தான். ஆகவே, எமது கட்சி சார்பாக இத்தொகுதி வேட்பாளராக உம்மை நியமித்துள்ளேன் என்றார். அவரின் வாக்கைத் தட்டாது கல்முனைத் தொகுதியில் வேட்பாளராக நின்றேன். வெற்றி கொண்டேன். தொடர்ந்து 1994ம் ஆண்டு வரை என் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தேன். இன்றும் நான் ஜனநாயக முறையில் தோற்கவில்லை. என் சேவை மின்னாமல் முழங்காமல் என் மக்களுக்கு தொடர்கிறது.

யாழ். மாவட்ட அமைச்சராகவும், தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் பணியாற்றி அக்மக்களின் துயர் துடைப்பதில் பெரும் பங்காற்றினேன். பால்ய பருவத்திலிருந்தே இரு சமூக சந்ததிகளுடன் இணைந்து பழகி, படித்து வளர்ந்ததால் என்னுள் பேதமில்லை. இரு சமூகங்களுக்கிடையில் உறவை கட்டியெழுப்புவதில் என்னை அர்ப்பணித்துக் கொண்டவன் நான்.

1989ம் ஆண்டு பிரேமதாசவின் ஆட்சியில் வர்த்தக வாணிப அமைச்சராக நியமனம் பெற்றேன். பொருளாதார வளர்ச்சிக்கு பல வழிகளிலும் நேசக்கரம் நீட்டியுள்ளேன். ‘தீorlனீ ஹிraனீலீ லிrganisation’ உலக பொருளாதார மையத்தில் இலங்கையையும் இணைத்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த பில் கிளிண்டனின் உதவி ஜனாதிபதி அல்கோ கையெழுத்திற்கு அடுத்து இரண்டாவதாக கையொப்பமிட்ட பெருமையை நான் பெற்றிருந்தேன்.

ரஷ்யன் பெடரேஷன் பிளவுபட்டிருந்த நேரம். பிரிந்த நாடுகளுடன் பொருளாதார வர்த்தக ரீதியாக இணைந்து செயற்பட வழிவகுத்தேன்.

2002ம் ஆண்டில் குவைத் - பஹ்ரைன் நாடுகளில் இலங்கை ஸ்தானிகராக நியமனம் பெற்றுச் சென்றேன். மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்த காலம். ஈராக் நாட்டிற்கெதிராக அமெரிக்க மேற்கொண்ட யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான இலங்கையர் அவதிக்குள்ளானார்கள். குவைத் நாட்டை விட்டே வெளியேறத துடித்தார்கள். இதையறிந்து அமெரிக்க ஸ்தானிகருடனும் குவைத் நாட்டு அதிகாரிகளிடம் மேற்கொண்ட பரிந்துரையின் பின் இலங்கைப் பிரஜைகளுக்கு எவ்வித இடையூறும் வராது மீண்டும் அங்கேயே தொழிலை மேற்கொள்ள பாதுகாப்பு உறுதிகளை வழங்கி ஆவன செய்து கொடுத்தேன்.

அறுநூறுக்கும் மேற்பட்ட இலங்கைப் பெண்கள் தஞ்சம் கோரி இலங்கை ஸ்தானிகராலயத்தில் அடைக்கமலடைந்திருந்தனர். இவர்களின் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க குவைத் அரசியடம் கலந்துரையாடி மீண்டும் இலங்கைக்கு இவர்களை இலவசமாக விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக நான் மத்திய கிழக்கில் ஸ்தானிகராகவிருந்த போது, இலங்கை கிழக்கில் மறைந்த அஷ்ரப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சவூதி ஈஸ்ட் யுனிவர்சிட்டி பொருளாதார வீழ்ச்சியால் அதன் வளர்ச்சி குன்றி வருவதை என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். குவைத் பண்ட் போர் டிவோலப்மண்ட் நிதியத்தின் பணிப்பாளர்களிடம் அக்குறையை எடுத்துக் கூறினேன். கோரிக்கையை செவிமடுத்த அவர்கள் ஆறாயிரம் மில்லியனுக்கு மேலாக நிதியுதவி அளித்து கலாசாலையின் துரித வளர்ச்சிக்கு உதவினார்கள். தொடர்ச்சியாக உதவவும் வழிவகுத்தேன்.

குழந்தைகளைப் பற்றி கேட்டேன்...

ஓர் ஆணும் இரண்டு பெண் குழந்தைகளும் அவுஸ்திரேலியாவிலும் இலண்டனிலுமாக இருவர் வாழ ஒரு மகன் இங்கு நீதி அமைச்சின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றுகிறார் என்றார்.

மன நிறைவு கண்ட சம்பவங்கள், நினைவு கூரத்தக்க விடயங்கள் பற்றி கூறுங்கள்.

நான் பாராளுமன்ற பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மேற்கொண்ட பொதுப்பணிகளில் முதலாவதாக என் ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு உயிரூட்டிய ஆசான் மெதடிஸ்த மிஷனரி கல்லூரி அதிபர் ஜோர்ஜ் நல்லதம்பியின் நினைவு மண்டபமொன்றை அதே கல்லூரி வளாகத்தில் அமைத்துக் கொடுத்து நன்றிக் கடன் செலுத்தினேன். அதே போன்று வர்த்தக வாணிப அமைச்சராக விருந்த போது, எனக்கு சமய சமூக ஒற்றுமை விழுமியங்களைப் போதித்த கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் நான் கற்ற போது இருந்த விடுதி குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமுகமாக புனர்நிர்மானம் செய்து கொடுத்தோடு, கிழக்கிலங்கை மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக விழிப்புணர்வுக்கும் வித்திட்ட விபுலாந்தர் நினைவு மண்டபமொன்றை அவர் பிறந்த ஊரிலேயே நிறுவித் தருமாறு சமூகத் தொண்டன் டாக்டர் பரசுராமன் விடுத்த வேண்டுகோளையும் நிறைவேற்றி மனநிறைவு கண்டேன்.

இதேவேளை கிழக்கிலங்கை மக்களின் போக்குவரத்து வசதி கருதி மட்டக்களப்பிற்கும் பொத்துவிலுக்கும் இடையிலான ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டமொன்றை அமைச்சராக இருந்த போது ஆரம்பித்து வைத்தேன். சந்தர்ப்பவசத்தால் 1994ம் ஆண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தமையால் அத்திட்டமும் கைவிடப்பட்டு விட்டது எனக்கு பெரும் மனக்குறையாக இருக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட ரயில் திட்டத்தை இன்றைய அரசியல் பிரமுகர்கள் முன்னெடுக்க வேண்டுமென விளையமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.