புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
இந்தியாவில் உதயமானது 29ஆவது மாநிலம் தெலுங்கானா

இந்தியாவில் உதயமானது 29ஆவது மாநிலம் தெலுங்கானா

ஆந்திரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற அந்தப்பகுதி மக்களின் 60 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி முடிவு எடுத்தது.

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தெலுங்கானா மாநிலம் முழுவதும் விடிய விடிய கோலாகல கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்து, தெலுங்கானாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றாலும், மன்மோகன் சிங் அரசு எடுத்த முடிவில் உறுதியாக நின்றது. கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தெலுங்கானா தனி மாநில மசோதா நிறைவேறியது. அதன் பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து தெலுங்கானா மாநிலம், நாட்டின் 29ஆவது மாநிலமாக உதயமாவது சட்டப்பூர்வமானது. தெலுங்கானா தவிர்த்து எஞ்சிய பகுதி ஆந்திரப் பிரதேசமாகவே நீடிக்கிறது. லோக்சபா தேர்தலுடன் இந்த மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

வெற்றி தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி மொத்தம் உள்ள 119 இடங்களில் 63 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து அந்த மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகர ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் இன்று முறைப்படி உதயமானது. இதையொட்டி ஒட்டுமொத்த தெலுங்கானாவும் விழாக்கோலம் பூண்டது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய விடிய தெலுங்கானாவில் தனி மாநில பிறப்பு கொண்டாட்டம் களை கட்டியது.

தலைநகர் ஹைதராபாத்தில் இடைவிடாது கொண்டாட்டம் என்று கூறுகிற வகையில் நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. வாண வேடிக்கைகள் வர்ண ஜாலம் புரிந்தன.

ஹைதராபாத்தின் சார்மினார், கோல்கொண்டா கோட்டை, சட்டசபை கட்டிடம், ஜுபிளி ஹில்ஸ் போன்றவை மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. கலாசார கொண்டாட் டங்களுக்கும் குறைவில்லை.

தெலுங்கானா பகுதிகளில் எல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் மாநிலப் பிறப்பை கொண்டாடினர். விழாக்கோலத்தில் மிதக்கிற ஹைதராபாத் நகரில், ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில் மாநிலத்தின் முதலாவது முதல்வராக தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் பதவி ஏற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ஆளுநர் நரசிம்மன் இவர்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணமும் ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜனாதிபதி ஆட்சி முடிவு முன்னதாக புதிய அமைச்சரவை பதவி ஏற்பதற்கு வசதியாக தெலுங்கானா பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.