புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

‘KAVITHAIMANJAREY’

அனிச்சம் புவழகி !

காதல் மனச் சோலை தனில்
கன்னி மலர் பூத்தவள்
கன்னி யிவள் பூத்திருந்தும்
காளை மனம் காத்தவள்!

காதல் வளர் தேர்வெழுதி
கனவுலகில் நிற்பவள்
கனவு களில் நிற்பதனால்
கலைக ளெலாம் கற்பவள்!

ரோஜா மலர் கன்னங்களில்
நூறு பேரைச் சாய்ப்பவள்
நூறு பேரைச் சாய்த்திட்டாலும்
நூலிடையால் ஏய்ப்பவள்!

ராஜாமகள் நடந்து வந்தால்
ஞானரதம் தோற்குமே
ஞான ரதம் தோற்பதனை
நானிலமும் ஏற்குமே!

அனிச்சம் பூ அழகி யிவள்
அசைந்தால் பூ அசைந்திடும்
அசையால், கண்ணசைவால்; ஓர்
ஆயிரம் பூ மலர்ந்திடும்!

துணிச்சல் மிகு வீரரெலாம்
துவண்டிடுவர் இவள் அழகிலே
துவள்பவரும் துதித்திடுவர்; தமிழ்
தூயவளை இவ் வுலகிலே!
-*-



உறவுப்பாலம்

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் - அன்பு
உறவாக பரிணமிக்கும்...
உணர்வுடன் உறவு சங்கமிக்க
அங்கே உறவுப் பாலம் போடப்படும்.

உணர்வு உறவாவது...
உள்ளத்துள் உள்ள ஆட்சியின் பலமாகும்,
உள்ளத்தின் ஓசை உணர்வாகும்,
உணரும் போது இசையாகும்
அதைமீட்க... மீட்க...
உறவு சுகமாகும்.

காலத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
நேய நட்பின் பாதையில்
ஒன்று சேர்ந்த உறவுகள்
உணர்வுடன் நிலைத்துவாழும்.


குடைக்காரன்

குடைக் கம்பிகளுடன்
பிணைக்கப்பட்ட
அவனது
யதார்த்த வாழ்க்கை
அன்றாட
நடப்பு விவகாரங்களுக்குள்
அமிழ்ந்து போகும்
உணர்ச்சித் திவலைகள்
தினம் செத்துப்பிழைத்தாலும்
புனரமைக்கப்பட்ட
கறல் கம்பிகளுக்கு
பழைய
குடைத் துணியைப்
போர்த்தி முடிக்கும் போது
வெளிப்படும்
சிறு புன்னகை
அபூர்வமாய்க் காணக்கிடைக்கும்
சில
நிஜ முகங்களுக்கிடையில்
அவனுக்கும்
ஓர் இடமுண்டென்பதைச்
சொன்னது
தன் இருப்பைத்
தக்க வைப்பதற்கான
சமுதாய தகிடுதத்தங்களுக்குள்
சிக்கிக் கொள்ளாத
ஓரமாய்ச் செல்லும்
ஒட்டாத வாழ்க்கை

தேவைப்படு மட்டும்
சுருண்டு விரியும்
குடை போலவே
அவனும்
பிறரைப் பாதிக்காத
ஒரு சுயநலவாதி,

காலப் பயணத்தில்
வயோதிபக் கோடுகள்
அவன் மேனியில்
தாறுமாறாய் ஓடும்

தளர்ந்த நடையிலும்
கூடவே பயணிக்கும்
அதனைப் பற்றிப்பிடிப்பதில்
அவனுக்கு
அப்படியோர் இன்பம்
ஆயுளின்
அந்திமத்தை அடைந்த போதும்
அவன் பிடிக்குள் இருப்பதில்
அதற்கும்
மகிழ்ச்சியோ தெரியவில்லை.

கல்லும் முள்ளும் கொண்ட
கடின வாழ்க்கைப் பாதை
சகலதிலும்
சமநிலை பேணும்
அவன் இதயம்
கன மழையின் வீழ்ச்சியென்ன
கதிரவன் வாள் வீச்சென்ன?
உடன் விரிந்து
முகம் மலர்கிறது குடை
துன்பங்களுக்கிடையிலும்
நிஜத்துடன்
புன்னகைக்கத் தெரிந்த
அவன் முகத்தைப் போலவே


முயற்சியின் வழியில்

தாக்குதல்கள், இடர்கள், தடைகள்
பக்கத்திலிருந்தாலும்,
பலமைல் தூரத்திலிருந்தாலும்
நோக்கத்தில் முனைப்பாயிருப்பவர்கள்
சிக்கலைத் தீர்த்து சீர் பயணம் தொடர்வர்

மன விருப்பங்களின் ஆக்ரோஷம்,
உணர்வூக்கத்தின் உந்துதலாகி,
மனத்திண்மையின் சக்தியிலே
உயிர்சுவாசங்கள் நம்பிக்கையின் நடையிலே

முன்னேற்ற படிகளிலேறும்
அலைந்து திரியும் பட்சிகள்
ஆகாயத்தை வட்டமிட்டு
அண்மித்திடும் அபாயங்களை முறியடித்து
ஆகாரத்தை அடைதலில் குறியாயிருக்கும்

பிரயத்தனப்படும் மனசுகளும்,
கவனப்பார்வை கடைசிவரை நழுவாமல்
இலட்சியத்தை அடைதலில்,
இலக்கை தொடுவதில்,
வலிகளைச் சுமந்து, வாகை பெறுவதுறுதி

விலை மதிப்புள்ள கனவுகள் மெய்ப்பட
முயற்சிகள் விசையிழக்காமல் திசை நகரும் போது
மலைகளைத் தகர்க்கும்
ஆழியை அகலும்
மோதும் காற்றை வீசியெறியும்

மண்ணைப் பற்றிப்படரும் கொடியாக,
மனித ஆசாபாசங்கள், இலட்சியங்கள்
மனத்தோடு வேர்பிடித்து
முயலுதல் மும்முரமாகி
வாகைசூடும் வாழ்க்கை வளம் பேசும்


ஈ கூடப் பறக்கவில்லை

கனிவு மழை தான் சொரியும்
கடியபனி மார் கழியில்,
இனிதான “ஆதிரை” நாள்
இரவுபகல் கொண்டாட்டம்!

திருநீறு - பொட்டு டனே
திருக்கோயில் விழாக் காண
வருகை தந்த அடியவர் தம்
வடிவழகு சொல்ல வொணா!

கரமேந்தி நின்ற நிரை
கற்பூரச் சட்டி களும்,
அருள்வேண்டி அடிய ழிக்கும்
அரிவையரின் அணிவ குப்பும்,..

பாற்செம்பு காவடி கள்
பவனியுடன் பக்தர் களும்
மேலங்கி இல்லா மல்
வேட்டியுடன் ஆடவரும்,....

பட்டுச் சேலை யுடன்
பாவையரும் பல வண்ணப்
பட்டுப் பாவாடை புனை
பருவஇள மங்கை யரும்,....

மூப்படைந்த சிகை கொண்ட
முதியவரும் மழலை களும்,
கூப்பியதாம் கைகளெனக்
குடியிருந்தார் கோயிலிலே,....

மேளக்கச் சேரி களும்
மின்னொளியில் பற்பலவும்,
தாளலயம் குறை வின்றித்
தடல்புடலாய் நடந் தேற....

பத்துத் தினங் களிலும்
படையெடுத்த சனக் கூட்டம்,
மற்றையநாள் ஆலயத்தை
மறந்ததுதான் ஆச்ச ரியம்!

தீவெட்டி, ஊர்வ லங்கள்
தினம்பத்தில் நிறைவு பெற
“ஈ” கூடப் பறக்க வில்லை
இப்போது ஆலயத்தில்!...


உறங்கும் திறமை

பூத்திடும் பூக்கள் எல்லாம் - கோவில்
பூஜைக்கு போவது இல்லை
பாத்தியின் நாற்றுக்கள் எல்லாம் - நல்ல
பயிராய் வளர்வது இல்லை!

காட்டின் மூங்கில்கள் எல்லாம் - புல்லாங்
குழலாய் மாறுவ தில்லை
வீட்டுக் குழந்தைகள் எல்லாம் - வெற்றி
வாகை சூடுவ தில்லை!

ஒவ்வொரு உயிரினுள்ளும் - திறமை
ஊற்றாய் ஒளிந்து இருக்கும்
அவ்வப் போது அழகாய் - அதனை
அள்ளிப் பருகிட வேண்டும்!

உனக்குள் நீயே புகுந்து - திறமை
உறங்கும் கதவை திறந்து
உனக்குப் பிடித்த ஒன்றை - பற்றி
உயரப் பறக்க வேண்டும்!


அஞ்சிடுவேனோ?

உயிரிலே பாதி, உடலிலே மீதி
உருவமோ எந்தன் பிரதி!
பயிரதாய் வந்து, பாலையென் சிந்து
பண்ணும் குறும்பு கோடி!
உயிரிலே ஊறி, உயிர் அவனாகி
உறவில் கலந்த கவிதை!
பயிரது வளர்ந்து, பாரிதில் உயர்ந்து
பரப்புமோ அன்னையின் புகழை?

சந்திர வதனம், சந்தர உருவம்
சந்தனம் பூசிய சொரூபம்!
சிந்திய குறுநகை சீண்டுவ துண்மை
சொர்க்க வாசலின் சுகந்தம்!
மந்திரப் பார்வை மதியை மயக்க
மற்றவை எல்லாம் மறக்கும்!
இந்திரஜித்தாய் என்மகன் வந்து
எல்லையே இல்லா இன்பம்!

பிஞ்சனைப் பாதம் நெஞ்சினை உதைத்து
பித்ததுப் பிடித்தெனைச் சிதைக்கும்!
கொஞ்சிடும் வேளை பிஞ்சு மொழியில்
கோடி கவிதை விதைக்கும்!
பஞ்சினை ஒத்த பிஞ்சுத் தேகம்
பத்தரை மாற்றுப் பசும்பொன்!
அஞ்சிடுவேனோ? அவனி மீதிலே
ஆண்மகன் எனக்கு அவதரித்தானே!


ஜன்னல் கன்னி

அவள்
மழை நீரில்
காகிதக் கப்பல் விடும்
வயதில் அந்தச் செடியை
பார்த்தாள்
ஜன்னல் வழியாக
அது வளர்ந்து மரமாகி
பூ பூத்து பிஞ்சாகி
காய்த்து கனிந்து
இலை உதிர்ந்தது
மறுபடி தளிர் விட்டது
பருவ காலம் மாறியதால்
ஆனால்
அவள் மட்டும் இன்னமும்
அந்தச் செடியைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாள்!


 

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.