புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
மலையகத்தில் தனித்துவமான தேசிய பல்கலைக்கழகம் நீண்டகால அவாவை நிறைவேற்ற மீண்டும் அழைப்பு

பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதாக முயற்சிகள் தேக்க நிலையில்:

மலையகத்தில் தனித்துவமான தேசிய பல்கலைக்கழகம் நீண்டகால அவாவை நிறைவேற்ற மீண்டும் அழைப்பு

அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகளை களைந்து முன்வருமாறு அறைகூவல்

மலையக மக்களின் தனித்துவத்திற்கு ஓர் அடையாளமாக மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது கல்வி கற்ற மலையக சமூகத்தின் நீண்ட கால அவாவாகும். ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகளில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் முழுமனதுடனும், முழுமூச்சாகவும் இறங்கிச் செயற்படவில்லை என்பது மனவேதனை தரும் விடயமாகும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பிரிவின் முன்னாள் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தெரிவித்தார்.

அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இம்முயற்சியில் மலையக அரசியல் தலைவர்கள் இனியாவது ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவர் முன்னாள் அமைச்சர்களான இ.தொ.கா. தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் ஆகியோர் இது தொடர்பாக ஆரம்ப கட்ட முயற்சிகளை எடுத்திருந்த போதிலும் அவை இடைநடுவில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். இன்றிருக்கும் மலையக அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் குறிப்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இம்முயற்சியில் இறங்கினால் அதற்கான படிமுறைகளை வழங்கி ஆலோசனைகளைக் கூற நான் தயாராக இருக்கிறேன்.

என்னைப் போன்று பேராசிரியர்களான மூக்கையா, தை. தனராஜ் உட்பட மலையகத்திலுள்ள எத்தனையோ படித்த கல்விமான்கள், ஆசிரியர்கள் இதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் இப்போதுள்ள பிரச்சினை பூனைக்கு யார் மணி கட்டுவது போன்றுதான். யார் இதற்கான முதலடியை எடுத்து வைப்பது என்பதே எம்முன்னாலுள்ள பிரச்சினையாகும். உண்மையில் அது பலமுள்ள ஓர் அரசியல் தலைமையினாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அந்த அரசியல் பின்னணியுடன் கல்விச் சமூகமும் இணைந்து கொண்டால் எமது நீண்ட கால கனவு விரைவாகவே நனவாகிவிடும் எனவும் பேராசிரியர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

எம்மிடம் திட்டம் உள்ளது. அதனை சரியான முறையில் அமுல்படுத்த சக்தி ஒன்றே அவசியமாகவுள்ளது.

அதற்கு அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகளை மறந்து செயற்பட முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், தென்கிழக்கிலும், றுகுணுவில் இருக்கும் அப்பிரதேசங்களுக்கே தனித்துவமான பல்கலைக்கழகங்கள் போன்று விரைவில் மலையகத்திலும் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் அதில் மலையகக் கல்விமான் ஒருவர் வேந்தராக அமர வேண்டும் எனவும் பேராசிரியர் சந்திரசேகரன் தெரிவித்தார். இது எமது நாட்டின் பொருளாதாரத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் மலையகப் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர் வர்க்கத்திற்குக் கிடைக்கும் ஒரு அங்கீகாரமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.