புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
பக்தர்களுக்கு பேரருள்புரியும் ரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன்

பக்தர்களுக்கு பேரருள்புரியும் ரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன்

ஆலய ஆடி மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

சிறுதெய்வ வழிபாடாக மட்டும் ஆரம்பகாலத்தில் அமைந்திருந்த ஸ்ரீ பேச்சியம்மன், இன்று அனைத்து மக்களும் போற்றி வணங்கி வரும், அம்மக்களினது சிறு தெய்வமாக. பதுளை ரிதிபானவில் வீற்றிருந்து, அருளாட்சி செய்து வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.

பதுளை மாநகரை அண்மித்து துங்கிந்தை நீர்விழ்ச்சி அமைந்திருக்கின் றது. இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகள் பலவற்றிலுமிருந்தும் உல்லாசப் பயணிகள் பலர், இந்நீர்வீழ்ச்சியைப் பார்த்து இரசித்துச் செல்கின்றனர். இத்தகைய நிலையில் அழகிய மலைக்குன்றுகளுக் கிடையே, இரம்மியமான சூழலில் ரிதிபான என்ற இடத்தில் ஸ்ரீ அருள்மிகு பேச்சியம்மன் கோவில் கொண்டு அருளாட்சி செய்து கொண்டிருக்கின்றார்.

1830ஆம் ஆண்டுகளின் பின்னர், இலங்கைக்கு இந்திய தமிழ் மக்களின் வருகை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மக்கள் தம் குல தெய்வ வழிபாடு, இஸ்ட தெய்வ வழிபாடு என்றவகையில், இலங்கையில் தாம் குடியிருக்கும் பகுதியில் தெய்வ வழிபாடு களை மேற்கொண்டிருந்தனர். அவ்வகை யிலேயே ஸ்ரீ பேச்சியம்மன் வழிபாட்டு முறையும் தொடர ஆரம்பித்தது.

ஆரம்பகாலத்தில் ரிதிபானை என்ற இடம் தேயிலைத் தோட்டமாகவே இருந்தது. ரிதிபானையை சூழவுள்ள துங்கிந்த, ஒளியாமண்டி போன்ற இடங்களும் தேயிலைத் தோட்டங்களாக இருந்ததுடன், இந்தியத் தமிழர்களே, அத் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்தனர். அந் நிலையில், அம் மக்கள் தொழில் கடமைகளோடு, தெய்வ வழிபாடுகளையும் முன்னிலைப்படுத்தி வந்தனர். அதனடிப்படையில் ஸ்ரீ பேச்சியம்மன் வழிபாடும் அமைந்திருந்தது. இப் பேச்சியம்மன் சிலையை, இங்கு யார் கொண்டு வந்தார்கள்; எங்கிருந்து கொண்டுவரப்பட்ட தென்பது பெரும் புதிராகவே இருந்து வருகின்றது.

அக்காலப்பகுதியில், ரிதிபான என்ற இடத்தில் வசித்து வந்த வெள்ளை சீலையம்மா என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்பட்டு வரும் அம்மையார் வீடு, வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுத்து, கஞ்சி காய்ச்சி, பேச்சியம்மனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆரம்ப காலங்களில் மாலை 6 மணிக்குப்பிறகு, ஆலயப் பகுதியில், பொதுமக்கள் நடமாடுவது, வழிபடுவதென்பது வெகுவாக குறைந்து காணப்பட்டது. குழந்தைகளை தாலாட்டும் சத்தம், உடைகள் துவைக்கும் சத்தம் ஆகியன கேட்குமென்றும், பேச்சியம்மன் தத்ரூபமாக ஆலய சூழலில் உலாவுவதாகவும் மூதாதையர்கள் பலர் கூறியதாக வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. அக்காலங்களில், இயற்கை, செயற்கை அனர்த்தங்கள் இடம் பெற்ற வேளைகளிலும், ரிதிபான மக்கள் பாதுகாக்கப்பட்டதுடன், ஆலயத்திற்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், ஊவா மாகாணத்தில் பதுளை ரிதிபான என்ற இடத்திலுமே பேச்சியம்மன் ஆலயங்கள் இருந்து வருவதும், பேச்சியம்மன் வழிபாடுகளும் இருந்து வருகின்றன. அதைப் போன்றே, ஊவா மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் நீடித்த தொடர்புடையவர்களாக இருப்பதும், குறிப்பிடத்தக்கது.

கண்ணகையம்மன் வழிபாடு, திரெளபதையம்மன் வழிபாடு போன்ற சிறு தெய்வ வழிபாட்டோடு தொடர்பு டையதாக பேச்சியம்மன் வழிபாடு இருந்தாலும், இந்து மக்களிடையே இதனை சக்தி வழிபாடென்றே கூறப்படு கின்றது. இவ்வகையில் வந்த ஆலயங் களில் குருக்கள்மார் பூசைகளை நடத்துவது குறைவு. மரபு வழிவந்த பூசகர்களே, பூசைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிராமிய சிறுதெய்வ வழிபாட்டிடங்களில் பூசகர்களே பூஜைகளை நடத்தி வருகின்றனர்.

அது போன்று, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை ஆலயங்களில் பூஜைகளை மேற்கொண்டதன் பின்னர் 1994 இல் ஸ்ரீ சிவஸ்ரீ ஆர்.பி. சாமிக்குருக்கள் ரிதிபான பேச்சியம்மன் ஆலயத்தில் பூசகராக இணைந்து, தொடர்ந்தும் செயல்பட்டு வருகின்றார். பணிவும், பாசமும், பக்தியும் நிறைந்த சாமிக்குருக்களிடம் பேச்சியம்மன் குடி கொண்டிருப்பதாகவே பேச்சியம்மன் அடியார்கள் கருதி வருகின்றனர். இவரிடம் விபூதி பிரசாதம் பெறுவதற்கும், ஜோதிடம் பார்ப்பதற்காகவும், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல இன மக்களும் பெருமளவில் வந்து கொண்டி ருக்கின்றனர். நாடிவரும் அடியார்களும் அருள் பாலிக்கும் சக்தியுடையவர்.

ஸ்ரீ பேச்சியம்மன் என்பது அடியார் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் இந்தளவு வளர்ச்சியடைய ஆலய பரிபாலன சபைத்தலைவர் வ. சிவலிங்கப்பிள்ளை, செயலாளர் சி. ரஜனிகாந், பொருளாளர் வ. பேரின்பநாயகம் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்பான சேவையே காரணமாகும். வருடா வருடம், இல் ஆலயம் வளர்ச்சிப் போக்கினையே கொண்டதாகவுள்ளது.

2010ல் இவ் ஆலயத்தில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. நவக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதே போன்று பெரும் செலவில் அழகிய சித்திரத் தேரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆடி மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. நாளை துங்கிந்தை ஆதி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி, காவடி, கரகம் ஊர்வலங்கள் இடம் பெற்று பகல் 11 மணியளவில் தீ மிதிப்பு நிகழ்வும் அதைத் தொடர்ந்து ஸ்ரீ பேச்சியம்மனுக்கு அஸ்டோத்திர 108 சங்காபிஷேகமும் நடைபெறும். அதையடுத்து அடியார்களு க்கு அன்னதானமும் வழங்கப்படும்.

23ம் திகதி ஸ்ரீ விநாயகர் சகித சுதீர வேலும், சிவன் சமேத சக்தி, ஸ்ரீ பேச்சியம்மன் அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் எழுந்தருளி, பதுளை மாநகருக்கு சென்று, குறிப்பிடப்படும் வீதிகள் வழியாக பவனி வந்து, ஆலயம் சென்றடைவார்.

24ம் திகதி துங்கிந்தை ஆதி விநாயகர் ஆலய அருகாமையில் தீர்த்தோற்சவம் இடம்பெறும். 25 ஆம் திகதியன்று ஸ்ரீ பேச்சியம்மனுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும். மாவிளக்குப் பூஜை, கஞ்சி காய்ச்சுதல் என்பனவும், அதைத் தொடர்ந்து சாயரட்சைப் பூஜை மற்றும் வைரவர் பூஜையுடன் மஹோற்சவம், இனிதே நிறைவு பெறும்.

இம் மஹோற்சவக் கிரியைகள் அனைத்தும் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் பிரதம குருவான சிவஸ்ரீ ஆர்.பி. சாமிக்குருக்கள் தலைமையில், ஆகம விதிப்படி இடம் பெறும்.

இவ் உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் பரிபாலன சபையினர் துரிதமாகச் செய்துவருகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.