புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
பிழைக்கும் வழி

பிழைக்கும் வழி

தேவனின் சின்னஞ்சிறு கதைகள்

அரக்கோணம் ஸ்டேஷனை விட்டு ரயில் வண்டி கிளம்புவதற்கு சற்று முன்னதாகத்தான் அந்தப் பேச்சுக்கார ஆசாமி எழுந்து, படாரென்று கதவைச் சார்த்திக் கொண்டு கீழே இறங்கிப் போனான், அந்தப் பெட்டிக்குள் மிகுதி இருந்தவர்கள் இரண்டு பேர்தான்.

ஒருவர் ஸ்டேஷனுக்கு வெளியே ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர் ஒரு கச்சல் பேர்வழி - தாராளமாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு, “அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டார்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர், தாம் கண்ட காட்சியிலேயே லயித்துப் போயிருந்தார். அவருடைய கவனத்தைத் திருப்பும் நோக்கத்துடன் கச்சல் பேர் வழி கனைத்து விட்டு சம்பாஷணையைத் தொடங்கினார்.

“பார்த்தீர்களா! இப்பொழுது எழுந்திருந்து போனானே! என்ன பேச்சு! சாவி கொடுத்தாப் போல், ஓய்ச்சல் ஒழிவில்லாமல் அல்லவா பேசுகிறான்? அவன் பேசும் போது எனக்கு என்ன கோபம் வந்ததென்கிaர்கள்? அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.”

ஜன்னல் வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர் திரும்பி உட்கார்ந்து கொண்டு, கவனித்தார். ஆனால் ஒரு வார்த்தை கூட பதில் சொல்வில்லை! உதடு அசைக்கவில்லை.

கச்சல் பேர்வழி தொடர்ந்து சொல்லிக் கொண்டு போனான். “பாருங்கள்! ஒரு சமயம் இந்த மாதிரி பேச்சுக்காரன் ஒருவனால் நான் போலீஸ் கோர்ட்டு வரையில் போகும்படி நேர்ந்து விட்டது. அதனால் நானூறு ரூபாய் வரை கை நஷ்டமாகி விட்டது.

அது ஒரு பெரிய கதை.” கேட்பவர் கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றவே கச்சல் பேர்வழி நிற்காமல் சொல்லத் தொடங்கினான்: “காட்பாடியில் ராத்திரி ஒன்றே முக்காலுக்குப் பாசஞ்சர் வருகிறது.

பாருங்கள், அதில் தான் நான் ஏறினேன். பகல் பூராவும் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வேலை. உடம்பில் அசதி சொல்ல முடியாது. கண்ணை மூடினால் தூங்கி விடுவேன், என்னையும் அறியாமல். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு ஆசாமி வந்து சேர்ந்தான்.

“ரயில் கிளம்பிற்று, ஸார்! அவனும் பேச ஆரம்பித்தான், ஸார்!

“நான் கவனிக்காதது போலே வண்டியிலே சாய்ந்து கொண்டேன்; கண்களையும் மூடிக் கொண்டேன். ஆனால் அவன் தூங்க விட்டால்தானே? போன ஜன்மத்திலே அவன் அலாரம் கெடியாரமாக இருந்திருக்கணும்; சந்தேகமில்லை! இல்லாவிட்டால், அவன் தொண்டையிலே கிராமபோன் பிளேட்டை வைத்துக் கடவுள் சிருஷ்டி பண்ணியிருக்கணும்.

“நானும் எவ்வளவோ தந்திரம் செய்து பார்த்தேன். திரும்பிப் படுத்துக் கொண்டேன்; குறட்டை விட்டுக் காண்பித்தேன். காலை நீட்டி, தூக்கக் கலக்கத்தில் உதைக்கிறாப் போல் ஒரு உதையும் விட்டேன். சொப்பனத்தில் திட்டுவாறு நாலு வார்த்தை திட்டியும் பார்த்தேன். ஊஹும்.

“அவன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனான். கோடைக்கானலுக்கு அவன் சம்சாரத்துடன் போனது, அங்கே மலையேறி இரண்டு பேரும் சறுக்கி விழுந்தது, அவன் சம்சாரம் இடி இடியென்று சிரித்தது, எல்லாம் சொன்னான்.

அப்புறம் சித்தூரில் முலாம் பழம் மலிவாக வாங்கி அவன் குழந்தைகளுக்குக் கொடுத்ததை வர்ணித்தான். பட்டணத்தில் ஹோட்டல்கள் இல்லாமல் தானே சமைக்க ஆரம்பித்து, சமையற்கட்டில் நெருப்புப் பிடித்துக் கொண்ட விதரணையைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தான். அவர்கள் வீட்டு நாய்க்குட்டியின் அறிவை இரண்டொரு உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினான்.

“அவன் பேசித் தீர வேண்டும், இல்லாவிட்டால் அவன் மண்டை வெடித்து விடும் என்றே தோன்றிற்று.

“பேச வேற விஷயம் இல்லாத போது, அவன் மனைவி பிறந்தகத்திலிருந்து எழுதியிருந்த ஒரு கடிதத்தைப் பையில் இருந்து உருவி, எனக்குப் படித்துக் காட்ட ஆரம்பித்து விட்டான். அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த எனக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. காலைச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தேன்.

‘கும்’ ‘கும்’ மென்று முதுகிலும் கழுத்திலும் ஒரு டஜன் குத்து விட்டேன். இடுப்புக்குக் கீழே இரண்டு உதையும் கொடுத்து, அலாக்காக இரண்டு கையாலும் தூக்கி ரயிலுக்கு வெளியே எறிந்து விட்டேன். அவன் அதிர்ஷ்ட காலம் ரயில் அப்போது ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. இல்லாவிட்டால் விபரீதமாகியிருக்கும்.

“அதற்காகத்தான் நான் போலீஸ் கோர்ட்டுக்குப் போகும் படியாச்சு! கைச்செலவு நானூறு ரூபாய் வரை பிடித்தது...”

கச்சல் பேர்வழி தன் கதையை முடித்து, அதனால் கதை கேட்பவரின் முகபாவங்களில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டனவென்று கவனித்துப் பார்த்தான். ஒரு புன்னகை தெரிந்தாற் போல் தோன்றியதே தவிர அந்த உதடுகள் அசையவே இல்லை. “பார்த்தீர்களா? வெளியில் கிளம்புவதென்றால் எத்தனையோ ஆபத்துக்கள் இருக்கின்றன.

நான் இம்மாதிரி பேச்சுக் காரனால் நானூறு ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதைப் போல் நஷ்டப்படாமல் இருப்பதற்கு நாங்கள் ஒரு யுக்தி செய்திருக்கிறோம். இவைகளைப் பாருங்கள்” என்று ஒரு தோல் பெட்டியைத் திறந்து ‘கார்க்’ போன்ற இரண்டு சிறு மூடிகளை எடுத்தான். ‘இவைகளைக் காதில் வைத்துக் கொண்டு விட்டால், யார் எவ்வளவு உரக்கப் பேசினாலும் காதில் விழாது.

நாம் மாட்டில் பத்திரிகையைப் படித்துக் கொண்டோ, தூங்கிக் கொண்டோ, நிம்மதியாக ஒரு தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். யுத்த காலமாதலால், குண்டு விழுந்தால் கூடக் காது செவிடாகாது. நீங்கள் எடுத்துக் கொள்கிaர்களா?

இவ்வளவு நேரமாக ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சமாளித்துக் கொண்டு வந்த மற்றவருக்கு இப்போது ஏதேனும் பேசியேயாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

அவர் வாயைத் திறக்காமல், சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி அவனிடம் நீட்டினார். அதைப் படித்த கச்சல் பேர்வழிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

மறு விநாடி வண்டியின் மூலையில் போய்த் தலையைக் கவிழ்த்துக் கொண்டு வாய் மூடி மெளனியாக உட்கார்ந்து விட்டான்! அந்த ஜாலத்தைச் செய்த செய்தி என்னவென்றால், இதுதான்:-

“நான் துரதிருஷ்ட வசமாகப் பிறவிச் செவிடு, ஊமையுங்கூட. தயவு செய்து மன்னிக்கவும்.”

காட்பாடி ஸ்டேஷன் வந்ததும் கச்சல் பேர்வழி அவசரமாக எழுந்து வெளியேறும் போது வேறொருவர் அதே வண்டிக்குள் ஏறினார். ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த வரைக் கண்டவுடனேயே அடையாளம் புரிந்து கொண்டு, “அடே! பங்களூருக்காடா போறே? ஆத்திலே ருக்குமணி, கமலா, பட்டு எல்லாம் செளக்யந்தானே?” என்று கேட்டார்.

“எல்லாம் செளக்யம்!” என்று கணீரென்று பதில் கொடுத்தார் ஜன்னல் பேர்வழி. கச்சல் ஆசாமி இதைக் கேட்டுக் கொண்டே இன்னும் வேகமாக வெளியேறினான்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.