புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
வரலாற்று நாயகனின் கதை

வரலாற்று நாயகனின் கதை

1965 தந்தை டி.ஏ.ராஜபக்ஷவின் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார வேலைகளை முன்னின்று செய்தார். வித்தியோதய பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராக தனது முதலாவது தொழில் வாய்ப்பை பெற்றார்.

1967 நவம்பர் 7இல் டி.ஏ.ராஜபக்ஷவின் மரணத்தின் பின்னர், பெலியத்த தொகுதிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.

1970 பாராளுமன்றத்திற்கு 24 வயதில் தெரிவு செய்யப்பட்டார். அந்த தேர்தலில் அவரது பெரிய தந்தையின் பிள்ளைகளான ஜோர்ஜ் மற்றும் லக்ஸ்மன் ராஜபக்ஷ ஆகியோரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.

1971 பாராளுமன்றத்தில் சிம்மாசன பிரசங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை முன்மொழிந்து பேசினார். அக்கா ஜெயந்தி ராஜபக்ஷ திருமணம் செய்து கொண்டார். தம்பி கோத்தபய ராஜபக்ஷ இராணுவத்தில் சேர்ந்து கொண்டார்.

1973 கொழும்பு சட்டக் கல்லூரியில் மாணவனாக சேர்ந்து கொண்டார். அண்ணன் சமல் ராஜபக்ஷ திருமணம் செய்தார்.

1976 பலஸ்தீனிய ஒருமைப்பாட்டு அமைப்பின் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1977 பொதுத் தேர்தலில் தோல்வியடைகிறார்.

1977 சட்டத்தரணியான பின்னர், சிரேஷ்ட சட்டத்தரணி தயா பெரராவின் உதவியாளராக சேர்ந்து கொண்டார்.


நோன்புக் காலத்தின் போது இஸ்லாமிய மக்களுடன் ஜனாதிபதி உரையாடுகின்றார்.

1983 மே 19இல் செல்லி ஷிரந்தி விக்கிமசிங்கவை திருமணம் செய்தார்.

மார்ச் 8இல் இவர்களுடைய மூத்த மகள் பவோதினி பிறந்தார்.

1984 ஓகஸ்ட் இல் பவோதினி மரணமடைந்தார்.

1985 முல்கிரிகல இடைத் தேர்தலில் இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

1985 நவம்பரில் தாய் திருமதி டி.ஏ.ராஜபக்ஷ மரணமடைந்தார்.

1986 முதலாவது மகன் நாமல் ராஜபக்ஷ பிறந்தார்.

1987 இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

1987 இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஷ பிறந்தார்.


இலங்கைக் கடற்படையில் அதிகாரியாக சேர்ந்துகொண்ட ரோஷித ராஜபக்ஷ தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றார்.

1989 மூன்றாவது மகன் ரோஹித்த ராஜபக்ஷ பிறந்தார்.

1990 விகிதாசார வாக்களிப்பு தேர்தல் முறையின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

1990 ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன், இலங்கையில் காணாமல் போனவர்களின் விபரங்களை வெளியிட்டார். அதற்கு முன்னர் இந்த பெயர் விபரத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

1992 ஜனகோச, பாதயாத்திரை போன்ற மக்களின் பேராதரவுடனான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக முன்னின்று நடத்தினார்.

1993 திரைப்பட, தொலைக்காட்சி நடிகரானார்.

1993 மூத்த சகோதரி ஜெயந்தி ராஜபக்ஷ மரணமடைந்தார்.

1994 பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவதற்கு கடுமையாக நாடெங்கிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டு, முன்னாள் பிரதம மந்திரியின் மகள் திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவை பிரதம மந்திரி பதவியில் அமர்த்துவதற்கு கடுமையாக உழைத்து, 17 வருடகால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை முடிவு பெற வைத்தார்.


றகர் போட்டியில் வெற்றியீட்டிய கடற்படை அணியில் விளையாடிய ரோஹித்த ராஜபக்ஷவை அவரது தந்தை பாராட்டுகின்றார்.

1994 தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1997 கடற்றொழில் துறைமுக நீர்வள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2002 திரு ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியானவுடன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

2004 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் மீண்டும் பதவிக்கு வந்த பின்னர் பிரதம மந்திரியாகவும், நெடுஞ்சாலை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2005 நவம்பர் 17இல் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 2009 மே 18இல் உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்த பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈ.

யை படு தோல்வியடையச் செய்து, 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தி, நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டி, சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய ஒரேயொரு தேசத் தலைவர் என்ற பாராட்டைப் பெற்றார்.


ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னணியில் ஒரு பெண் இருப் பாள் என்பார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி க்குப் பின்னால் இருக்கும் பெண்மணி இவர்தான்....

2010 ஜனவரி 26இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டினார். 2010 நவம்பர் 19ஆம் திகதியன்று இரண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அன்பான கணவர் பாசமிகு தந்தை

மஹிந்த, மனைவி ஷிரந்திக்கு ஓர் அன்பான கணவனாகவும், தனது மூன்று மகன்மாருக்கு பாசமிகு தந்தையாகவும், தன்னுடைய சகோதர, சகோதரிகளுக்கு நல்ல சகோதரராகவும் இருக்கிறார். இவர், டீ.ஏ.

ராஜபக்ஷ தம்பதியினரின் 9 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக மஹிந்த பிறந்தார். இவரது அண்ணன் சமல் ராஜபக்ஷ இன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருக்கின்றார்.

இவர்களது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை அக்கா ஜயந்தி, தம்பிமாருக்கும், அண்ணாவுக்கும் தாயைப் போல் கண்காணிப்பையும், அரவணைப்பையும் கொடுத்து வந்தார். ஜயந்தி, இப்போது உயிருடன் இல்லை. மூன்றாவது பிள்ளையாக மஹிந்த பிறந்தார். இவருக்கு பின்னர் பிறந்த சகோதர சகோதரிகள் வருமாறு:

சந்திரா, கோத்தாபய, பஷில், ப்ரீத்தி, காந்தினி மற்றும் டட்லி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் ஒற்றுமையாக சிறு வயது முதல் இன்றுவரை இருந்து வருகிறார்கள்.

அரசியல்வாதி மஹிந்த, வீட்டில் ஒரு சிறுபிள்ளைப் போல் தன்னுடைய மகன்மாருடன் அன்பாக பழகும் தந்தையாக இருக்கிறார். அவரை தந்தை என்று அழைப்பதைவிட ஷிரந்தியின் மூத்தமகன் என்று கூட நாம் அழைக்கலாம்.


மூன்று புதல்வர்களுடன் பாசமிகு தந்தையாகவும், உற்ற நண்பனாகவும் இருக்கும் ஜனாதிபதி.

அந்தளவிற்கு மஹிந்த தன்னுடைய மூன்று மகன்மாருடன் சேர்ந்து தானும், ஒரு இளைஞனைப் போன்று வீட்டில் ஆடிப்பாடி மகிழ்வார்.

சிறுவயது முதல் ஒரு நல்ல விளையாட்டு வீரனாக இருந்த மஹிந்த, ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் தங்கள் வீட்டு முற்றத்தில் முன்று மகன்மாருடனும், அவர்களுடைய நண்பர்களுடனும் உதைப்பந்தாட்டம், “டச்ரகர்” போன்ற விளையாட்டுகளில் இளைஞர்களுக்கு சரிசமமாக விளையாடி மகிழ்வார்.

இவரது மூன்று புதல்வர்களும் கல்கிஸ்ஸை பரிசுத்த தொம்மையப்பர் கல்லூரியில் கல்விகற்றனர். இம்மூவரும், தங்கள் கல்லூரியின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பாடசாலைக்கு புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

மூத்தமகன் நாமல் ராஜபக்ஷவும், இளைய மகன் யோஷித்த ராஜபக்ஷவும், கல்லூரியின் ரகர் அணியில் விளையாடி சாதனைகள் புரிந்தனர். இளைய மகன் ரோஹித்தவும் விளையாட்டுத் துறையில் தன்னுடைய அண்ணன்மாருக்கு சளைத்தவராக இருக்கவில்லை.


ஜனாதிபதியின் மூன்று புதல்வர்கள்

தனது மகன்மார் கல்லூரியின் சார்பிலும், விளையாட்டுக் கழகங்கள் சார்பிலும் ரகர் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு எவ்வளவுதான் உத்தியோகபூர்வ வேலைப்பளு இருந்தாலும், மனைவி ஷிரந்தியுடன் இந்த போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குச் சென்று, பெற்றோர் என்ற முறையில் தங்கள் பிள்ளைகள் விளையாடும் அணியின் சார்பில் கோஷமிட்டு மகிழ்வதும் உண்டு.

மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினரின் இரண்டாவது மகன் அவரது தாயாரின் தந்தையின் வழியில் இலங்கை கடற்படையில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்து கொண்ட பின்னர், பெற்றோரையும் தனது அண்ணனையும் தம்பியையும் சீருடை அணிந்து வந்து சந்தித்த போது, அந்தக் குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவின் தந்தை ஈ.பி.விக்கிரமசிங்க அவர்கள் இலங்கை கடற்படையில் கொமாண்டர் என்ற உயர் பதவியில் அதிகாரியாக இருந்தார்.

தனது பாட்டனாரைப் போன்று தானும், கடற்படையில் ஒரு அதிகாரியாக சேர்ந்து கொள்வதற்கு யோஷித்த விருப்பம் தெரிவித்தபோது, மற்றைய அரசியல்வாதிகளைப் போல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “மகனே, நீ கடற்படையில் சேர்ந்து அநியாயமாக மரணிப்பதை நான் விரும்பவில்லை” என்று எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

நீ, இலங்கை மாதாவின் ஒரு தவப்புதல்வனாக கடற்படையில் சேர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் பங்குகொண்டு அவர்களை தோல்வியடைச் செய்ய வேண்டுமென்று, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே இளைஞன் யோஷித்த தனது தந்தையைப் போன்று, அஞ்சா நெஞ்சத்துடன் இலங்கை கடற்படையில் சேர்ந்து கொண்டார்.

மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ தான் அரசியலில் பிரவேசிக்க விருப்பம் தெரிவித்தபோது, அவரது பெற்றோர் அதற்கு மனமுவந்து சம்மதம் தெரிவித்தனர்.


ஜனாதிபதியின் இரண்டாவது மகன் யோஷித்த தனது தம்பியுடன்

தனது பெற்றோர் தம்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு அமைய நாமல் ராஜபக்ஷ பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.

இப்போது அவர் தமது கட்சியின் இளைஞர் அணியில் ஒரு முக்கிய அங்கத்தவராக இருப்பதுடன் வடபகுதியின் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டு வடக்கின் வசந்தம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கு, தனது சிறிய தந்தையான பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் உறுதுணை புரிந்து வருகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் கடைக்குட்டி ரோஹித்த பெற்றோரின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார். இவர், தனது அண்ணன்மார் களைப் போல் அன்றி, அரசியலில் ஈடுபடுவதிலோ அல்லது ஆயுதப்படைகளில் சேர்ந்து கொள்வதிலோ அதிக ஆர்வம் காட்டாமல் விண்வெளி விஞ்ஞானத் துறையில் உயர்கல்வி பெறுவதில் நாட்டம் கொண்டு கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தம் பயங்கரமாக நடந்து கொண்டிருந்தபோது, யுத்த முனைக்கு சென்று உயர் அதிகாரிகளையும், இராணுவ வீரர்களையும் சந்தித்து அவர்களுக்கு உற்சாகமூட்டி தைரியப்படுத்தும் ஒரு தேசத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், நாட்டைக் காப்பாற்றுவதற்காக யுத்தத்தில் இறங்கியிருக்கும் ஆயுதப் படைவீரர்களுக்கு மும்மணிகளின் ஆசீர்வாதத்தை வேண்டி அனுராதபுரம் ஸ்ரீ மாபோதியில் பிரார்த்தனையும் செய்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேர்மையான தலைமைத்துவத்தின் கீழ் இந்த யுத்தத்தை நடத்திச் செல்வதற்கு இராமாயணத்தில் இராமருக்கு வலது கரமாக இருந்த இலக்குமணனைப் போல், அவரது இளைய சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் என்ற முறையில் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்.

ஜனாதிபதியின் நெறியான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் இராணுவ, விமான, கடற்படைகளும், பொலிஸாரும் அஞ்சா நெஞ்சுடன் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று முற்றாக துவம்சம் செய்து, இலங்கை மக்களுக்கு பூரண சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணை புரிந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நல்லாட்சி இன்னும் பல வருடங்களுக்கு எங்கள் நாட்டில் நீடித்து இருக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்தி விடைபெறுகிறேன். (முற்றும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.