புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
நாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம்

நாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம்

இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் சிறுவர்கள் என கருதப்படுகின்றனர். இவர்கள் சமூகத்தில் காணப்படும் சிறுவர் உரிமைகள் அனைத்தையும் அனுபவிக்கக்கூடிய உரிமைகளுடையவர்கள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணிலடங்கா சிறுவர்கள் தமது வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான தடைகளையும் ஆபத்துகளையும் எதிர்நோக்குகின்றனர். இவர்கள் போரினாலும் வன்முறையினாலும் நேரடியாக பாதிக்கப்படுவது மட்டுமன்றி இனப்பாகுபாடு காட்டுதல், அக்கறை காட்டாமை, ஆக்கிரமிப்பு, பிறரது தலையீடு, தமது நாட்டுக்குள்ளே இடப்பெயர்வுக்குள்ளாதல் அல்லது அகதிகளாக்கப்படுதல், இல்லங்கள் அல்லது இருப்பிடங்களை கைவிட்டுச் செல்வதற்கு நிர்பந்திக்கப்படுதல், அங்கவீனமடைதல் மற்றும் புறக்கணிப்பு, சுரண்டல், கொடுமைப்படுத்தல், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படல் போன்ற பல காரணங்களினால் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.

பிள்ளையின் சுகாதாரத்திற்கும் உயிர் வாழ்க்கைக்கும் அல்லது பொறுப்பு, நம்பிக்கை அல்லது அதிகாரம் தொடர்பான விடயத்தில் உள்ள கெளரவத்திற்கு உண்மையான அல்லது முழுமையான சேதத்தை ஏற்படுத்துகின்ற எல்லா வகையான உடல் ரீதியான மற்றும் உளரீதியான மோசமான நடத்தை பாலியல் துஷ்பிரயோகம், அலட்சியம் அல்லது அலட்சியப்படுத்தல் அல்லது வர்த்தக ரீதியான அல்லது ஏனைய சுரண்டல்கள் என்பவை சிறுவர் துஷ்பிர யோகத்தின் அல்லது முறைகேடான நடத்தைகளின் பொதுவான வரைவிலக் கணமாகும்.

பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு பிள்ளை அதற்கு முழுமை யாக விளங்காத சம்மதம் தெரிவிக்க முடியாத அல்லது அதற்கு முழுமையாக வளர்ச்சியடையாத சம்மதம் தெரிவிப்பது பற்றி தெரியாத நிலையில் இருக்கின்ற போது அப்பிள்ளையொன்றைப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகும். அல்லது சட்டத்தை மீறுவது அல்லது சமுதாயத்தில் தடை செய்யப்பட்ட செயலைச் செய்வதாகும்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு பிள்ளைக்கும் வயது வந்தவர் ஒருவருக்குமிடையில் அல்லது வயதில் மூத்த பிள்ளைக்குமிடையில் ஒரு நபருடைய தேவையை அல்லது விருப்பத்தை திருப்திப்படுத்துவதற்காக நிகழ்வதாகும். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ‘தவிர்க்கக் கூடிய சாதாரண விருத்திப் போக்கு நிலைகுலைதல்’ எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படு கின்றது. அதில் பின்வருன சேர்கின்றன.

01. சட்டவிரோதமான எந்தவொரு பாலியல் நடவடிக்கையிலும் ஈடுபட பிள்ளையைத் தூண்டுதல் அல்லது பலவந்தப்படுத்தல்.

02. பிள்ளையை விபச்சாரத்தில் அல்லது ஏனைய சட்டவிரோதமான பாலியல் நடவடிக்கைகளில் சுரண்டும் வகையில் பயன்படுத்தல்.

03. துஷ்பிரயோக ஆபாச செயல்களில் அல்லது பொருட்களில் பிள்ளைகளை சுயநலம்பெறும் வகையில் பயன்படுத்தல்.

சிறுவர் துஷ்பிரயோகம் பெற்றோரால், பாதுகாப்பாளரால், பராமரிப்பாளரால், அவர்களுடன் நாளுக்கு நாள் வாழ்வில் ஈடுபாடு கொள்ளும் ஏனையோரால், பாதுகாப்பில்லாதவிடத்து அந்தப் பிள்ளை தீமையை அனுபவிக்கின்றது.

இது பொதுவாக நான்கு முக்கிய பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியானது. பாலியல் ரீதியானது, உணர்வு ரீதியானது அத்துடன் கவனிப்பின்மை. இவை அனைத்தும் ஒரு பிள்ளையின் மேம்பாட்டுக்கும், நல்வாழ்வுக்கும் பாதகமாக அமைந்து அந்தப் பாதிப்பை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகமானது அதிகரித்து வருவதனைக் காணலாம். புள்ளிவிபர அறிக்கை ஒன்றின்படி 758 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்பத்திற்கு ஆளாகி இருப்பதுடன் 745 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர். இதில் 09 பேர் குடும்ப உறவினர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர்.

இலங்கையில் கடந்த ஆண்டில் இத்தகைய சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு மாத்திரம் சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அனைத்து துஷ்பிரயோகங்களும் சிறுவருடைய மேம்பாட்டில் உளவியல் ரீதியான தாக்கத்தைத் தருகின்றன. சிறுவர் துஷ்பிரயோகத்தின் தாக்கமானது, குறிப்பாக நீண்டகால விளைவுகள், மரணம் உட்பட, துஷ்பிரயோகம் மீண்டும் தொடரல் உடல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நிரந்தரமான ஒரு பலவீனம், அறிவும் உணர்வும் குறைபடுதல், கடும் குற்றங்களையோ, சிறிய தீங்குகளையோ புரியும் மனப்பாங்கு, அத்துடன் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சிறுவர் துஷ்பிரயோகியாகவே மாறும் சாத்தியம் போன்றன ஏற்படலாம்.

முக்கிய பிரச்சினையாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டவரின் மன உளைச்சல் சிறுவர்கள் அங்கலாய்ப்புடன், மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்க்கின்றார்கள். சிறுவனின் உளவியல் ரீதியான பலவீனம், துஷ்பிரயோக அனுபவமானது சுயமதிப்பைக் குறைத்து சில வளர்ந்தவர்களுடன் கெட்ட தொடர்புக்கு வழிவகுக்கலாம்.

குற்ற உணர்வைக் கொடுத்து பிரச்சினைக்கான பாலியல் ரீதியான ஒரு ஆவேச மனப்பாங்கை உருவாக்குகின்றது. சிறுவர் அந்த விரக்தியையும் தாக்கத்தையும் மாறுபாடான துஷ்பிரயோகத்தினூடாக ஈடுபாடு கொள்ளலாம். தனக்குத்தானே தீமை விளைவித்தோ, அல்லது வேறுவிதமாக தீமை விளைவிக்கும் நடத்தையை நாடுவர்.

சிறுவர் துஷ்பிரயோகமானது சமூக மனப்பாங்குகள், பொருளாதாரக் கஷ்டங்கள் குறைந்து வரும் மூலவளங்களுக்கான போட்டிகள், கொடூர பிள்ளை வளர்ப்பு முறைகள், குடும்ப வன்முறை, தனிப்பட்டோரின் வினோதமான சுபாவ இயல்புகள் எனப் பல்வேறு காரணிகளினால் இடம்பெறுகின்றது.

குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் பணிபுரிய பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்புவது அல்லது விபச்சாரத்திற்கு அவர்களைப் பயன்படுத்துவதை அறிந்தும் கவனியாது இருத்தல், குடும்பம் அந்தரங்கத்தை காக்கும் புனிதமான ஓர் அமைப்பு என சமூகம் கருதுவதனால் தகாப்புணர்ச்சி போன்ற துஷ்பிரயோகங்களை மறைக்க குடும்பத்தால் முடிதல் போன்ற நிலைமைகளைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சட்டவாக்கம், அரசியலமைப்பில் பாதுகாப்பு நிபந்தனைகள் இடம்பெறுதல், கட்டுப்படுத்தும் ஒழுங்கு முறைகள், பராமரிப்பு நிலைய வசதிகள், வேறு பரிகார முறைகள், கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது முற்றாக ஒழிந்தபாடில்லை.

நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. அதனை முற்றாக ஒழிக்க அல்லது ஓரளவாவது கட்டுப்படுத்த வேண்டுமாயின் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான காரணிகளை அறிந்து அவற்றை முதலில் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவ்வாறு செய்தால் ஓரளவாவது சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிக்க முடியும்.

எனவே சிறுவர் உரிமைகள் பேணப்பட வேண்டியவை. எதிர்காலச் சந்ததியினரின் சிறப்பான, முன்னேற்றமான நல்ல சந்ததியினராக உருவாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட வேண்டுமானால் அவற்றுடன் சம்பந்தப்பட்ட சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகத் துறையினர் போன்றோர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது தலையாய கடமையாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.