புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்ய பாரிய நடவடிக்கை

வீசா காலம் முடிவடைந்த நிலையில்

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்ய பாரிய நடவடிக்கை

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது

கடல் மார்க்கமாக வந்தவர்களும் இருக்கலாம்

சுற்றுலா வீசாவில் வந்து தொழில் புரிகின்றனர்

வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைது செய்வதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், தேசிய புலனாய்வுப் பிரிவு, இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளதென குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 20ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்தபடி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், தொழில்புரிவதிலும் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவர்களைக் கைது செய்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்தவர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கு முன்னரும் இவ்வாறு கடல்மார்க்கமாக வந்தவர்களும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் மிரிஹானவில் அமைக்கப்பட்டுள்ள விசேட முகாமுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இத்தடுப்பு முகாமில் ஈரான், சீனா, தாய்லாந்து, இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 39 பேர் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். இத்தடுப்பு முகாமில் இடநெருக்கடி ஏற்படுவதால் மினுவாங்கொட பகுதிக்கு இம்முகாமை மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, இத்தடுப்பு முகாமின் கட்டட நிர்மாணப் பணிகளை கட்டட நிர்மாணத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். சுற்றுலா வீசாவில் இலங்கைவந்து தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் அதிகளவில் வடக்கு, கிழக்கு மாகாணங் களிலேயே வெளிநாட்டவர்கள் தங்கியிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வயல் வேலைகளில் ஈடுபடுவதுடன், சிலர் புடவை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். வீசா காலம் முடிவடைந்த நிலையிலிருக்கும் இவர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் அந்தந்த பொலிஸ் நிலை யங்களின் ஊடாக மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்து தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும், இவர்கள் சுற்றுலா வீசாவில் வருகை தந்து தொழில் புரிவது மட்டுமல்லாமல், வீசா முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கிறார்கள். இந்நடவடிக்கை பாரதூரமான குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.