புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

மதங்களின் பெயரால் சமூகங்களை சீரழிப்பதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார்

மதங்களின் பெயரால் சமூகங்களை சீரழிப்பதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார்

மொழிப் பிரச்சினையுடன் 1956ம் ஆண்ட ளவில் ஆரம்பமாகிய இனங்களுக்கிடை யிலான முரண்பாடு விஸ்வரூபம் எடுத்து 1958ம் ஆண்டில் இனக்கலவரமாகவும் பின்னர் அது ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் தவறான வழிநடத்தலினால் 1983ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் இலங்கையின் வளர்ச்சிக்கு சுமார் 35 ஆண்டுகாலம் பெரும் தடையாக இருந்து வந்தது.

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை அரசியல் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளும் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் இடமளிக்காமல் அகங்காரப் போக்குடன் நடந்து கொண்டமையினாலும் கடந்த காலத்தில் எங்கள் நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கருத்து மோதல்களும், பகைமை உணர்வும் வலுப்பெற ஆரம்பித்தது.

இவற்றின் தாக்கத்தினால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி ஆரம்பித்த போராட்டம் பின்னர் ஒரு பயங்கரவாத இயக்கமாக உருமாறியது. இலங்கையில் பயங்கரவாதம் வலுப்பெற்று, பின்னர் அது 30 ஆண்டுகால யுத்தமாக மாறி எங்கள் நாட்டிற்கு சர்வதேச சமூகத்தில் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியதுடன் உள்நாட்டில் பெரும் பொருள் அழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

இவ்விதம் நாடு பயங்கரவாத யுத்தத்தினால் சீர்குலைந்தமைக்கு ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். 1970ம் ஆண்டில் பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் வெற்றியீட்டிய பின்னர் தனது பிரதம மந்திரி பதவியை அரசியல் சாசனத்தை திருத்துவதன் மூலம் நிறை வேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜயவர்தன மாற்றி அதன் மூலம் ஒரு சர்வாதிகாரியைப் போல் செயற்பட ஆரம்பித்தார்.

எனக்கு ஒரு ஆணைப் பெண்ணாகவும், ஒரு பெண்ணை ஆணாகவும் மாற்ற மட்டும் தான் முடியாது. மற்ற எல்லா அதிகாரமும் எனக்கு இருக்கிறதென்ற அகங்காரப் போக்கில் நாட்டு மக்களை நிர்வகித்து வந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன, தனது அதிகார மமதையினால் இந்தியாவுடனும் முறுகல் நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.

அன்று பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தியை மதிக்காமல் ஜே. ஆர். ஜயவர்தன சர்வதேச அரங்குகளில் நடந்து கொண்டதால் ஆத்திரமடைந்த இந்திரா காந்தி, நான் இவருக்கு நல்ல பாடம் புகட்டுகிறேன் என்று கூறி துப்பாக்கி கூட சரியாக ஏந்தி ஒரு குருவியைக் கூட சுட்டு வீழ்த்த முடியாத தமிழ் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கென வெவ்வேறு இராணுவப் பயிற்சி முகாம்களை அமைத்து இராணுவப் பயிற்சியை தீவிரமாக வழங்கினார்.

அதன் மூலமே எல்.ரி.ரி.ஈ. என்ற அமைப்பு உலகையே கிடுகிடுக்கக்கூடிய ஒரு பயங்கரவாத இயக்கமாக உருவாகியது. இவ்விதம் இந்திரா காந்தியினால் உருவாக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இயக்கம் இறுதியில் அவரது மகன் ராஜீவ் காந்தியின் உயிரையே பறித்த வேதனைக்குரிய சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். எல்.ரி.ரி.ஈ இந்நாட்டு மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தென்னிலங்கையின் மண்வாசனையில் இருந்து உருவாகிய உதயசூரியனைப் போன்று விளங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதி என்ற முறையிலும், முப்படைகளின் பிரதம தளபதி என்ற அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு எல்.ரி.ரி.ஈ.க்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி இறுதியில் இந்நாட்டு மக்களை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்து மக்களுக்கு அமைதியாக வாழ்வதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதையடுத்து, ஜனாதிபதி அவர்கள் நாட்டில் ஒரு பசுமைப் புரட்சியையும், அபிவிருத்தி யுகத்தையும் ஏற்படுத்தி எங்கள் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் பணிகளில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி அவர்கள் ஒரு சாதனை வீரர். அவரது வளர்ச்சியையும், அவரது புகழ் உலகெங்கும் பரவுவ தையும் பார்த்து பொறாமைப்படும் சில உள்ளூர் அரசியல்வாதிகளும் வெளிநாடுகளில் உள்ள எல்.ரி.ரி.ஈ.யினரின் டொலர்களுக்காக தேச துரோக செயற்பாடுகளில் இறங்கும் சில அரச சார்பற்ற அமைப்புகளும் எங்கள் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கான பொய்யான ஆதாரமற்ற பிரசாரத்தை பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிலையத்தின் ஊடாகவும், வேறு சதிகளின் மூலமும் தங்கள் நாச வேலைகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பது உண்மையிலேயே தேசப்பற்றுடைய அனைவருக்கும் பெரும் வேதனையாக இருக்கிறது.

ஜனாதிபதி அவர்கள் நேர்மையான அரசியல்வாதி என்பதனால் அவர் இத்தகைய எதிர்ப்புகளைப் பார்த்து மனம் கலங்குவதில்லை. உண்மை, நேர்மை என்ற இரு வழிகளில் அவர் இத்தகைய போலிப் பிரசாரங்களை வெற்றிகரமாக இன்று முறியடித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் இன்னுமொரு சதி முயற்சியும் ஒரு சிலரால் திட்டமிடப்படுகிறது. மதங்களின் பெயரில் மோதல்களை ஏற்படுத்தி சமூகங்களை சீரழிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை தாம் ஏற்க முடியாதென்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மதத்தின் பெயரால் மோதிக்கொண்டு ஒருவரை ஒருவர் பழி தீர்க்கக்கூடிய வகையில் நடந்து கொள்ள இடமளிக்கலாகாது. மதங்கள் நிம்மதியையும் சக வாழ்வையுமே போதிக்கின்றன என்று ஜனாதிபதி கூறியுள்ளார். நீர்கொழும்பில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே தொடர்பான நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே ஒரு யதார்த்தவாதி. அவர் அனைத்து மதங்களுக்கும் சேவை செய்த மாமனிதர் என்று பாராட்டினார்.

நாட்டை பிளவுபடுத்துவதை அவர் எதிர்த்தார். அதே போன்று சமூகங்களுக்கிடையிலான பிளவுகளையும் அவர் எதிர்த்தார். இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கு அவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமூகங்களிடையே நல்லுறவு வலுப்படுத் தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.